சுற்றுச்சூழல், புத்தக அறிமுகம்

நூல் அறிமுகம் – ‘வானில் பறக்கும் புள்ளெலாம்’

நூல் அறிமுகம் வானில் பறக்கும் புள்ளெலாம்’

ஞா.கலையரசி

ஆசிரியர் சு.தியடோர் பாஸ்கரன்

முதற்பதிப்பு:- டிசம்பர் 2011

இரண்டாம் பதிப்பு:- டிசம்பர் 2014

உயிர்மை வெளியீடு.

காட்டுயிர் துறையில் முக்கிய பங்களைப்பைச் செய்து வரும் திரு.சு.தியடோர் பாஸ்கரன் உயிர்மை, காலச்சுவடு, பசுமை விகடன் ஆகிய இதழ்களில் எழுதிய சூழலியல் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக,’ (2006), ‘தாமரை பூத்த தடாகம்,’ (2008), ஆகியவை சுற்றுச்சூழல் குறித்து, இவர் ஏற்கெனவே எழுதிய நூல்கள்.

இதில் இயற்கை சமன்நிலையைக் காக்க காடுகள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் ஆகியவற்றைப் பாதுகாப்பதன் அவசியத்தை ஆசிரியர் வலியுறுத்துகிறார். சுற்றுச்சூழல் சட்டங்கள், சூழலியல் கல்வி ஆகிய தலைப்புகளில் அமைந்துள்ள கட்டுரைகள், இவை பற்றிக் கூடுதலாக நாம் அறிந்து கொள்ள உதவுகின்றன. .

எளிமையான நடையில், இடையிடையே இவர் சொல்லிப் போகும் பல சுவாரசியமான தகவல்கள், வாசிப்பின் சுவையைக் கூட்டுகின்றன.

நான் புதிதாகத் தெரிந்து கொண்ட பல்வேறு செய்திகளுள், சிலவற்றை மட்டும் இங்கே பகிர்கிறேன்:-

vaanil-parakkum-pullelaam

 

  • சுற்றுச்சூழல் சமன்நிலையிலிருக்க, மொத்த பரப்பளவில் 33% காடு இருக்கவேண்டும்; ஆனால் தமிழ்நாட்டு நிலப்பரப்பில் 17.5% தான் காடு.
  • குஜராத்தின் நீண்ட வளைந்த கொம்புகளையுடைய காங்ரேஜ் இனம் தான் சிந்து சமவெளி சித்திர முத்திரையிலுள்ள காளை என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவ்வளவு தொன்மையான மரபினங்களைக் கொண்டவை இந்திய இனங்கள்!
  • உயரம் குறைவான மணிப்புரி குதிரைகள் தாம் முதன்முதலில் போலோ விளையாட்டுக்குப் பயன்படுத்தப்பட்டன. வடகிழக்கு இந்தியாவில் மணிப்பூரில் ‘புலூ’ என்றறியப்பட்ட பாரம்பரிய விளையாட்டு தான் ‘போலோ’வாக மேலை நாடுகளுக்குப் பரவியது.
  • நிக்கோபாரில் மெகபோட் (Megapode) என்னும் அரியவகை தரைப்பறவை, நிலத்தில் முட்டையிட்டு உலர்ந்த இலைகளால் ஒரு மேடு போல் மூடிவிடும். அடை காக்காமல் இலைக்குவிப்பை குறைத்தும், அதிகப்படுத்தியும் இன்குபேட்டர் போல இயக்கி வெப்பநிலையைச் சீராக்கி குஞ்சுகளைப் பொரிக்க வைக்கும். இதனை உயிரியலாளர் தெர்மோமீட்டர் பறவை (Thermometer bird) என்றழைக்கின்றனர்.
  • புதிய உயிரினங்கள் தோன்றுவது தீவுகளில் தான். சார்லஸ் டார்வின் பயணித்த கப்பல் தென்னமெரிக்காவுக்கு அருகில் ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த கலப்பாகாஸ் தீவுகளை அடைந்த போது, வேறெங்கும் காணமுடியாத பறவைகளும், கடல் ஓணான்களும், ராட்சத நிலத்தாமைகளும் இருப்பதன் காரணத்தைக் கண்டுபிடிக்க முயன்றார். அங்கிருந்த குருவிகளின் அலகுகளைக் கவனித்த போது தான் பரிணாமக்கோட்பாட்டின் தடயம் அவருக்குக் கிடைத்தது. இதன் அடிப்படையில் பிராணிகள் உருவாகும் விதம் பற்றியும் மனிதனின் பரிணாமவழி தோற்றுவாய் பற்றியும் ORIGIN OF SPECIES நூலை எழுதி, அறிவுலகை ஓர் உலுக்கு உலுக்கிவிட்டார் மத நம்பிக்கைகளின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டது.
  • பள்ளியின் மதிய உணவு காண்டிராக்ட்காரர்கள், பல்லி விழுந்து உணவு கெட்டு விட்டதென்று திருப்பிப் பதில் சொல்ல முடியாத பல்லி மேல் பழி சுமத்துகிறார்கள். பல்லிக்குச் சிறிது கூட நஞ்சு கிடையாது. பெரிய பல்லியான உடும்பின் கறியை, இன்றும் இருளர்கள் உண்கிறார்கள்.
  • நீரையும் பாலையும் பிரிக்கும் அன்னம், மழை நீரை உண்டு வாழும் சாதகப்புள் இவையிரண்டும் அறிவியலுக்கு அப்பாற்பட்ட தொன்மவழி விவரங்களே. பட்டைத் தலை வாத்து (BARRED HEADED GOOSE) தான் அன்னம் என்றழைக்கப்பட்டது என்பது என் யூகம். . இது உயிரியல் ரீதியாக ஸ்வான் (SWAN) இனத்தைச் சேர்ந்தது.
  • தற்காலத்தில் பறவைகளின் கால்களில் வளையத்தைப் பொருத்துவதற்குப் பதிலாக சிறு ‘சிப்’ (Chip) ஒன்றை உடலில் பொருத்தி விண்கோள் வழியாக வலசை போகும் பாதையையும் வேகத்தையும் கணக்கிடுகிறார்கள். வலசை போகும் பாதையை ‘வான்வழி’(Skyway) என்கிறார்கள். இந்த விண்பாதை கடலோரமாகவே அமைந்திருக்கும். சமுத்திரத்தைக் கடப்பதைப் பறவைகள் முடிந்தவரை தவிர்க்கின்றன.
  • ஒரு முறை பேருள்ளான் என்ற புறா அளவிலான பறவை, வட அமெரிக்காவின் அலாஸ்காவிலிருந்து உலகின் அடுத்த கோடி நியுசிலாந்துக்கு வலசை சென்றது பதிவாகியிருக்கிறது. 17460 கி.மீ தூரத்தை இது 9 நாட்களில் கடந்துள்ளது. மூன்றே இடங்களில் இரையுண்ணத் தரையிறங்கியது. நான்காவது கட்டத்தில் 11000 கி.மீ தூரத்தை இரவு பகலாக ஒரே மூச்சில் பறந்து, நியூசிலாந்து மிராண்டா என்ற இடத்தில் பெரிய கூட்டமாகத் தரையிறங்கியது.

இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் பெரும்பாலானவற்றில் தேதியில்லாதது பெருங்குறை. எடுத்துக்காட்டாக ‘அண்மையில்’ என்ற குறிப்பிருப்பதால், மேலே குறிப்பிட்ட பேருள்ளான் பறவை, இப்படி ஒரே மூச்சில் வலசை போனது எப்போது என்ற விபரத்தை, நம்மால் அறிய முடியவில்லை.

எனவே பல்வேறு தேதிகளில் எழுதப்படும் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கும் போது, ஒவ்வொன்றிலும் அது எழுதப்பட்ட தேதியைத் தவறாமல் குறிக்க வேண்டும்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊட்டும் கட்டுரைகள் என்பதால், இயற்கை ஆர்வலர்கள் மட்டுமின்றி, எல்லோருமே வாசிக்க வேண்டிய நூல் என்பது என் கருத்து.

கட்டுரையாளர் ஞா.கலையரசி வலைப்பதிவர், வங்கியில் பணியாற்றுகிறார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.