ஞா.கலையரசி
காட்டுயிர் எழுத்தாளர் திரு சு.தியடோர் பாஸ்கரன் எழுதிய ‘வானில் பறக்கும் புள்ளெலாம்,’ நூலை அண்மையில் வாசித்தேன். உயிர்மை, காலச்சுவடு, பசுமை விகடன் ஆகிய இதழ்களில் இவர் எழுதிய சுற்றுச்சூழல் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். உயிர்மை வெளியீடு. இரண்டாம் பதிப்பு டிசம்பர் 2014.
இவர் காட்டுயிர், சூழலியல், திரைப்பட வரலாறு ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்புகளைச் செய்திருக்கிறார். சூழலியல் வரிசையில் இது இவருடைய மூன்றாவது நூல்.
ஒரு முறை ஆறு வயது சிறுமியிடம் முட்டையைக் காட்டி, “முட்டையிலிருந்து என்ன வரும்? என்று இவர் கேட்க, அவள் உடனே ‘ஆம்லெட்,’ என்றாளாம்!
குழந்தைகள் இயற்கையிலிருந்து வெகுதூரம் விலகி விட்டார்கள் என்பதற்குச் சிறுமியின் இப்பதிலை எடுத்துக்காட்டாகக் கூறி வருந்தும் இவர், ‘பண்ணையிலே பல்லுயிரியம்,’ என்ற கட்டுரையில் நம் நாட்டில் ஏற்பட்ட வெண்புரட்சிக்குப் (White Revolution) பின்னர் உள்நாட்டுக் கால்நடை வளர்ப்பும், கோழி வளர்ப்பும் வெகுவாகப் பாதிக்கப்பட்டன என்கிறார்.
“வளர்ப்பு இனங்களில் வெகுவாக அற்றுப்போனது நாட்டுக்கோழிகள் தாம். இந்தியாவில் தான் முதன் முதலில் கோழி மனிதரால் பழக்கப்படுத்தப் பட்டது என்றும் இங்குள்ள Red Jungle Fowl என்ற காட்டுக்கோழியிலிருந்து தான் உலகின் எல்லாக் கோழியினங்கலும் தோன்றின என உயிரியலாளர் கூறுகின்றனர். நம் நாட்டின் 17 வகை கோழிகளில் பல இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டன. குறவன் கோழி (Naked neck) கோழியினம் பார்ப்பதே அரிதாக இருக்கின்றது.:” என்று இவர் சொல்லும் செய்திகளை வாசித்த போது, எங்கள் வீட்டில் என் சிறு வயதில் கோழிக்குஞ்சுகள் பொரித்து, எங்கள் கூடவே அவை வளர்ந்த நினைவுகள் வலம் வரத்துவங்கின.
குறவன் கோழி என்று இவர் சொல்வதை, நாங்கள் கிராப் கோழி என்போம். கழுத்தில் சதையின்றி எலும்பு தெரியுமாறு, அசிங்கமாகக் காட்சியளிக்கும்.
போந்தாக்கோழி என்று ஒரு ரகம். அடிப்பாகம் பெருத்து காலை அகட்டி வைத்து அசைந்து அசைந்து நடக்கும். குண்டாக இருப்பவர்களைப் போந்தாக் கோழி என்று கிண்டல் செய்வதுண்டு. வெள்ளை லெகான் என்ற இனம், மற்ற ரகங்களை விட முட்டை அதிகமாக இடும்.
கடைகளில் முட்டை வாங்கி வந்து ஆம்லெட் போடுவதை மட்டுமே அறிந்திருக்கும் இக்காலக் குழந்தைகளைக் குறை சொல்லிப் பயனில்லை. இயற்கையின் அதிசயங்களையும், அற்புதங்களையும் இவர்களுக்கு அறிமுகப்படுத்தாதது யார் குற்றம்?
விடிகாலையில் சேவல் கூவும் என்பது எத்தனை குழந்தைகளுக்குத் தெரியும்? அக்காலத்தில் கிராமங்களில் வீட்டுக்கு வீடு கோழி வளர்ப்பார்கள். பத்துப் பெட்டைகளுக்கு ஒரு சேவல் இருக்கும். காலையில் நான்கு மணிக்கெல்லாம் சேவல் தொடர்ச்சியாகக் கூவி விடியலை அறிவிக்கும். இப்போது எங்குமே சேவலைக் காணோம்!
செக்கச்சேவேல் என்று அதன் கொண்டை அழகாக வளைந்து தொங்கும். கொண்டையின் வளர்ச்சியை வைத்து, வயதை யூகிக்கலாம். இப்போது கோழிக்கொண்டை பூவைப் பார்க்கும் போதெல்லாம், சேவல் தான் நினைவுக்கு வருகிறது.
என் சிறுவயதில் எங்கள் வீட்டில் அம்மா அடை வைப்பார்கள். 21 நாட்களில் குஞ்சு பொரிக்கும் என நினைவு. எத்தனை குஞ்சுகள் வெளிவந்திருக்கின்றன என்றறியும் ஆவலைக் கட்டுப்படுத்த இயலாமல் நானும், என் தம்பிகளும் கூடையை அடிக்கடித் திறந்து பார்ப்போம். குஞ்சு பொரிக்கும் சமயம் முட்டையின் மீது தாயின் சூடு அதிகமாகத் தேவை என்பதால், திறக்கக் கூடாது என அம்மா திட்டுவார்.
முட்டை ஓட்டில் தெறிப்பு விழுந்து, மூக்கு மட்டும் வெளியே தெரிவது முதல் காட்சி!. பின் கொஞ்சங் கொஞ்சமாக முட்டையை உடைத்துக் கொண்டு குஞ்சு வெளிவரும் அழகை, வர்ணிக்க வார்த்தைகள் கிடையா! உயிர்ப்பின் தருணங்களை அணு அணுவாகத் தரிசிக்கும் காட்சியைப் போல் மகிழ்வு தருவது வேறொன்றுமில்லை!
குட்டிக்குட்டிக் குஞ்சுகள் தாய்க்கோழியுடன் மேயும் காட்சியும், இயல்பான குரலை மாற்றிக்கொண்டு ‘கொர்,’ ‘கொர்,’ என்ற எச்சரிக்கை குரலில், தாய் தன் சேய்களுடன் உலாவரும் காட்சியும் அற்புத அழகு!
தீனியைக் கண்டவுடன் தாய் வித்தியாசமான குரலில் கூப்பிட, நாலைந்து ஒரே சமயத்தில் ஓடி வந்து பொறுக்கும். குஞ்சுகள் குனிந்து துளி நீரை அலகால் உறிஞ்சி, நிமிர்ந்து குடிக்கும் போது, சமநிலை தவறி விழும் காட்சி சிரிப்பை வரவழைக்கும்.
ஓய்வெடுக்கும் போது அம்மா இறக்கையைப் பக்கவாட்டில் விரித்தபடி அமர்ந்திருக்க, குஞ்சுகள் அதன் சிறகுகளுக்குள் புகுந்து கொண்டு தலையை மட்டும் லேசாக நீட்டி எட்டிப்பார்க்கும். சில அம்மா மேல் சொகுசாக படுத்திருக்கும். திடீரென்று தாய் எழுந்து நடக்க, மேலே இருக்கும் குஞ்சுகள் பொத்துப் பொத்தென்று கீழே விழுந்து எழுந்தோடும்.
சமயத்தில் தாயின் காலுக்கடியில் அகப்பட்டுக்கொண்டு கீச் கீச் என்று குஞ்சு கத்தும் போது, அதற்கு ஏதாவது ஆகி விடுமோ எனப் பயப்படுவோம். அம்மாவோ பதட்டமில்லாமல், ‘கோழி மிதிச்சிக் குஞ்சு முடமாகாது,’ என்பார். தாய்மையைச் சிறப்பிக்கும் அருமையான பழமொழியல்லவா அது!
மொத்தத்தில் குஞ்சுகள் வளரும் வரை, அவற்றின் ஒவ்வொரு செய்கையும் சிறு குழந்தைகள் செய்யும் சேட்டைகள் போல் மிகுந்த மகிழ்ச்சி யூட்டுபவை.
இளங்குஞ்சுகளை அபகரிக்க வரும் பருந்து, காகம் போன்றவற்றைத் தாய் ஆக்ரோஷத்துடன் தொடர்ந்து ஓடித் தாக்கும் காட்சியைக் கண்டு தாய்மையின் மகத்துவத்தை குழந்தைகளாகிய நாங்கள் புரிந்து கொண்டோம். குஞ்சுகளை மூடி வைத்துப் பாதுகாக்க, பஞ்சாரம் என்ற மூங்கில் கூடை பயன்படுத்தப்பட்டது.
உயிரித் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் நாட்டுக்கோழி வளர்ப்பு நம் நாட்டில் கைவிடப்பட்டு வெளிநாடுகளிலிருந்து பிராய்லர் கறிக்கோழிகளும், சேவலின்றி கருத்தரிக்கும் லேயர் எனப்படும் முட்டையிடும் கோழிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. அதற்குப் பிறகு, சேவலுக்கும் அடைகாக்கும் பெட்டை கோழிகளுக்கும் அவசியமில்லாமல் போயிற்று. இன்குபேட்டரில் பொறிக்கப்படும் குஞ்சுகளுக்குத் தாயுமில்லை; தந்தையுமில்லை.
நாட்டுக்கோழிக்குஞ்சுகள் போல் அங்குமிங்கும் ஓடித் திரிந்து தானியம், மண்ணிலிலுள்ள புழு பூச்சி, கீரை ஆகியவற்றைத் தேடியெடுத்துத் தின்னும் திறன் இல்லாத இக்குஞ்சுகளின் உணவு, எப்போதும் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட தீவனம் தான். இத்தீவனத்தைப் பண்ணைகளுக்கு வழங்குவது பெரிய பெரிய கம்பெனிகள். இதில் என்னென்ன பொருட்கள் கலந்திருக்கின்றன என்று யாருக்கும் தெரியாது.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் உயர் ரக கோழிகளுக்கு நம் நாட்டு வெப்பத்தைத் தாங்கும் சக்தி கிடையாது நோய் எதிர்ப்புத் திறனும் குறைவு. எனவே இவற்றின் இறப்பின் சதவீதத்தைக் குறைத்து நஷ்டத்தை ஈடு கட்ட பண்ணைகளில் இவற்றுக்குச் செலுத்தப்படும் ஊசி மருந்துகளின் பக்க விளைவுகள், இவற்றை உண்ணும் மனிதரைத் தாக்காது என்பது என்ன நிச்சயம்?
பிராய்லர் கோழியின் செழிப்பான சதைக்காக செலுத்தப்படும் ரோக்ஸார்சோன் (Roxarsone) என்ற மருந்து, மனிதருக்குப் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியது எனக் கண்டுபிடித்திருக்கிறார்களாம். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இப்படி ஏதாவது கண்டுபிடித்துச் சொன்னால் தான் உண்டு. நம் நாட்டில் எந்தப் பல்கலைக்கழகமும் எதையும் முறையாக அறிவியல் ரீதியாக ஆராய்ந்து முடிவுகளை மக்களுக்கு அறிவிக்கும் வழக்கம் அறவே இல்லை. ஏனெனில் இங்கு உயிரின் விலை மிக மிக மலிவு!
பிராய்லர் இறைச்சியைச் சுத்தம் பண்ண வசதியாக இறக்கையே இல்லாத கோழி ரகம் இப்போது வந்துள்ளது என்கிறார்கள். இப்படி எல்லாவற்றிலும் இயற்கையிலிருந்து வெகு தூரம் விலகி, செயற்கையை நாடிச் சென்று கொண்டிருக்கிறோம். இதன் முடிவு என்ன ஆகுமோ தெரியவில்லை.
வீடுகளில் நம்முடன் தோழமையுடன் பழகிய நாட்டுக் கோழிக்குப் பதில் கோழி என்ற பெயரில், ஒரு புது ஜந்துவை செயற்கையாக உற்பத்தி செய்யத் துவங்கியிருக்கிறார்கள்.
“கோழி ஒரு கூட்டிலே
சேவல் ஒரு கூட்டிலே
கோழிக்குஞ்சு ரெண்டுமிப்போ
அன்பில்லாத காட்டிலே!”
என்ற திரையிசைப் பாடலைக் கேட்டவுடன், நாம் புரிந்து கொண்ட வாழ்வியல் உண்மை, வருங்காலத் தலைமுறைக்குப் புரிய வாய்ப்பில்லை. அவ்வளவு ஏன்? ஒரு காலத்தில் கோழியிலிருந்து தான் முட்டை வரும் என்ற அடிப்படை உண்மை கூட, அவர்களுக்குத் தெரியாமல் போகலாம்.
ஒரு சோதனைக்காக உங்கள் வீட்டுக்குழந்தையிடம் முட்டையிலிருந்து என்ன வரும் என்று கேட்டுப் பாருங்களேன்! அவசியம் உங்கள் குழந்தையின் பதிலை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
சூழலியல் கல்வியைப் பள்ளிகளில் அறிமுகப்படுத்துவதன் மூலம் குழந்தைகளுக்கும், இயற்கைக்கும் பிணைப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் ஆசிரியர் தியடோர் பாஸ்கரன்.
“இயற்கையைப் பராமரிக்க மனிதருக்குக் கற்றுக்கொடுக்க ஒரே வழி, அவர்கள் குழந்தைகளாக இருக்கும் போதே, அதைச் சொல்லித் தருவது தான்,” என்கிறார் நோபெல் பரிசு உயிரிலாளர் கான்ராட் லாரன்ஸ்.
கட்டுரையாளர் ஞா.கலையரசி வலைப்பதிவர், வங்கியில் பணியாற்றுகிறார்.
மிக அருமையான பதிவு கலையரசி மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு எங்களின் நினைவுகளையும் புதுப்பித்து விட்டீர்கள் நான் சின்னவளாக இருக்கும்போது எங்கள் எதிர்வீட்டில் கோழி வளர்த்தார்கள். அதன் குஞ்சுகளை நானும் என் தம்பியும் விரட்டி விரட்டி பிடிக்க ஒடி களைத்தது நினைவுக்கு வந்தது. சற்று நேரம் பழைய நினைவுகள் மனத்திரையில் ஓடின நல்ல படைப்பு பாராட்டுக்கள்
உங்கள் பழைய நினைவலைகளைப் புதுப்பிக்க என் கட்டுரை உதவியிருக்கிறது என்றறிய மகிழ்ச்சி விஜி. பாராட்டுக்கு மனம் நிறைந்த நன்றி!
கோழிகள் பற்றிய தங்கள் ஆதங்கம் உண்மைதான். இன்று எந்தக் குழந்தைக்கும் இயற்கை பற்றிய புரிதல் கிடையாது. அரிசி எங்கிருந்து கிடைக்கிறது என்றால் கடையிலிருந்து என்று சொல்லும் குழந்தைகள் முட்டையிலிருந்து ஆம்லெட் வரும் என்று சொல்வதில் வியப்பில்லை. அந்த அளவுக்கு தாங்கள் குறிப்பிடுவது போல் இயற்கையை விட்டு வெகுதூரம் விலகி வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
கோழிவளர்ப்பு குறித்த தங்கள் அனுபவங்கள் அனைத்தும் ரசனை. இப்படியான அனுபவங்களை நானும் அனுபவித்திருக்கிறேன் என்பதால் ஒவ்வொரு காட்சியையும் மனக்கண்ணில் கொணர்ந்து ரசித்து மகிழ முடிகிறது. ஆனால் நகரங்களில் பிறந்து வளர்ந்த எத்தனை பேருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும்? விடிகாலையில் சேவல் கூவித் துயில் களைவது ஒரு வரம். சேவலுக்குப்பிறகுதான் மற்றப் பறவைகள் ஒலியெழுப்பும்.
தியோடர் பாஸ்கரன் அவர்கள் இயற்கைக்கும் சுற்றுப்புறசூழலுக்கும் ஆற்றும் பங்கு மகத்தானது. அவர் குறிப்பிட்டுள்ள கிராப்புக்கோழிகளையும் சிறுவயதில் வீட்டில் வளர்த்த அனுபவம் உண்டு. வளரும் தலைமுறையினர் இவற்றையெல்லாம் அறியாமலேயே வாழநேரிட்டது வருத்தமளிக்கிறது. வாய்ப்பு அமைந்தால் அவருடைய நூலை வாசிப்பேன். பகிர்வுக்கு நன்றி.
கட்டுரையைப் பற்றிய ஆழமான கருத்துப்பகிர்வுக்கு நன்றி கீதா! உனக்கும் கோழி வளர்த்த அனுபவம் இருந்திருப்பது அறிந்து மகிழ்ச்சி. நம் குழந்தைகள் இழக்கும் எத்தனையோ விஷயங்களில் இதுவும் ஒன்று. வாய்ப்புக்கிடைத்தால் அவசியம் இந்நூலை வாசி. மீண்டும் நன்றி கீதா!