இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

‘யார் என்ன நினைத்தால் எனக்கென்ன?’

செல்வ களஞ்சியமே- 92

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி நாராயணன்
ரஞ்சனி நாராயணன்

சமீபத்தில் ஒரு திருமணத்திற்காக மும்பை சென்றிருந்தோம். நாங்கள் எல்லோரும் வெளியூரிலிருந்து வந்திருந்ததினால் எங்களுக்கு தங்குவதற்கு ஒரு ஹோட்டலில் அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. பல நாட்களுக்குப் பின் கூடியிருந்ததால், நாங்கள் எல்லோரும் ஒரே அறையில் உட்கார்ந்துகொண்டு பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் உறவினரின் பேரன் அந்த அறையில் போடப்பட்டிருந்த கட்டிலின் மேல் இருந்த வெள்ளைவெளேரென்ற படுக்கை விரிப்பின் மீது தான் கொண்டு வந்திருந்த கலர் பென்சில்களினால் கிறுக்கத் தொடங்கினான். சிறுவனின் பெரியப்பா அவனை கோபித்துக் கொண்டார். நன்றாக இருக்கும் படுக்கை விரிப்பை பாழ் செய்யகிறாயே? தவறு இல்லையா? உன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? என்று கோபமாகக் கேட்டார். அந்தச் சிறுவன் சொன்னான்: ஹூ கேர்ஸ்? யார் என்ன நினைத்தால் எனக்கென்ன?இப்படிச் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டான்.

எங்கள் எல்லோருக்குமே அவனது பதில் அதிர்ச்சியாக இருந்தது. தவறு செய்கிறோம் என்கிற குற்ற உணர்ச்சியே இல்லை அந்தச் சிறுவனிடம். தன் செய்கையைப்பற்றி யார் என்ன நினைத்தாலும் கவலை இல்லை என்கிற மாதிரி அவன் எடுத்தெறிந்து பேசியது தன்னை விட வயதில் பெரியவருக்கு அப்படி பதில் சொன்னது நிறைய யோசிக்க வைத்துவிட்டது.

ஏன் அந்தச் சிறுவன் அப்படிப் பேசினான்? ஒரே பிள்ளை. அதனால் அதிகச்செல்லம் கொடுத்துவிட்டார்களோ? அம்மா அப்பா இருவரும் வேலைக்குப் போகிறார்கள். வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லை. அதனால் கண்டிக்க ஆள் இல்லாமல் போய்விட்டதோ?

அந்தச் சிறுவனின் அம்மா அங்கேயே இருந்தும் அவனை எதுவும் சொல்லவில்லை. அதுதான் இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. முதலில் அவன் செய்கையைக் கண்டித்திருக்க வேண்டும். அல்லது இப்படிப் பேசாதே என்றாவது சொல்லியிருக்கலாம். எதுவும் சொல்லாமல் இது வழக்கமான ஒன்று என்பது போல இருந்துவிட்டார். அவருக்கு ஒருவேளை இது பழகி இருக்கலாம். ஆனால் அங்கு உட்கார்ந்திருந்த வயதில் மூத்தவர்களுக்கு?

அந்தச் சிறுவனின் அம்மா அவனுக்கு அறிவுரை கூறாமல் இருந்திருப்பாரா? நிச்சயம் நல்லது கெட்டதுகளை எடுத்துரைத்திருப்பார். அப்படியும் அந்தச் சிறுவன் ஏன் இப்படி நடந்து கொண்டான்? குழந்தைகளுக்கு நாம் மறுபடி மறுபடி சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். நல்ல விஷயங்கள் மனதில் படிய நீண்ட நாட்கள் ஆகும். பொறுமையுடன் திரும்பத்திரும்ப சொல்வது ஒன்றே அவர்களை நல்வழிப்படுத்தும்.

அறிவுரை என்பது குழந்தைகளுக்குப் பிடிக்காத ஒன்று. ஆனாலும் பெற்றோர்களுக்கு அவர்களை நல்வழிப்படுத்த பயன்படும் ஆயுதம் அது ஒன்றுதான். நிதானமாக பொறுமையை இழக்காமல் சொல்ல வேண்டும் பலமுறை. வேறு வழியேயில்லை.

என்னை இப்படிச் செய்யாதே, அப்படிச் செய்யாதே என்று என் அம்மா எப்பவும் நெகட்டிவாகவே பேசறாங்க அப்புறம் என்னை பாசிடிவ் ஆக யோசிக்கச் சொல்றாங்கஎப்படி முடியும்?குழந்தையின் இந்தக் கேள்வி நியாயம் தான். அறிவுரை என்ற பெயரில் செய்யாதே என்று சொல்வதற்கு பதில் இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லலாம். இப்படிச் செய். இதனால் உனக்கு நன்மை உண்டாகும் என்று சொல்லலாம். கம்பி மேல் ஒரு மூங்கிலை வைத்துக் கொண்டு சமநிலை தவறாமல் நடப்பது போலத்தான் அறிவுரை சொல்வது. அறிவுரை என்றதும் எனக்கு முதலில் நினைவிற்கு வருவது ஒரு ஜோக்:

அப்பா பிள்ளையிடம் சொன்னார்: உன் வயதில் ஆபிரகாம் லிங்கன் மிகவும் புத்திசாலியாக இருந்தார், தெரியுமா?

பிள்ளை சொன்னான்: உன் வயதில் அவர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தார். அது உனக்குத் தெரியமா?

அறிவுரை சொல்வதற்கு முன் நம்மைக் கொஞ்சம் உள்நோக்கிப் பார்த்துவிட்டு அறிவுரை சொல்லலாம். நம்மைக் குழந்தைகள் கேள்வி கேட்டு சங்கடப்படுத்தாமல் இருப்பார்கள். டீ.வி. பார்ப்பது தவறு என்று சொல்லிவிட்டு நீங்கள் எப்போதும் அதன் முன் உட்கார்ந்து கொண்டிருந்தால் குழந்தை உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுக்காது.

1

சிலநாட்களுக்கு முன் எனது முகநூல் நண்பரும், பிரபல எழுத்தாளரும், இதயம் பேத்துகிறது’ என்ற வலைத்தளத்தை நடத்துபவரும் ஆன திரு கே.ஜி. ஜவர்லால் முகநூலில் discipline என்பது பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தார். அவரது அனுமதியுடன் அதை இங்கு காபி பேஸ்ட் செய்கிறேன்.

இந்தக் குட்டிக் கதை, Discipline என்கிற சமாச்சாரம் ரொம்ப சுவாரஸ்யமானது, ஆச்சரியமானது, குழப்பமானது என்பதைச் சொல்கிறது.

மிதமிஞ்சிய கட்டுப்பாடுகளுடன் வளர்க்கப்பட்ட குழந்தைகள் ஹாஸ்டலில் சேரும் போது சுதந்திரத்தைக் கொண்டாடுகிறார்கள். தறிகெட்டுப் போகிறார்கள். அப்படி ஒரு பையன் கெட்ட பழக்கங்களுக்கு அடிமைப்பட்டு நாசமாகிக் கொண்டிருந்தான். விடுமுறைக்கு வந்த அவனுக்கு அப்பா அறிவுரை, அறவுரை எல்லாம் வழங்கவில்லை. கண்டிக்கவோ, தண்டிக்கவோ இல்லை.

அப்பாவும் பிள்ளையும் சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பா கேட்டார், “தம்பி.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்?

பையன் கொஞ்சமும் தாமதிக்காமல் சொன்னான் “நூல்தாம்ப்ப்பா பட்டத்தை இழுத்துப் பிடிச்சிருக்கு”

அப்பா சொன்னார், “இல்லை மகனே நூல்தான் அதைப் பறக்க வச்சிகிட்டு இருக்கு”

பையன் சிரித்தான். அப்பா ஒரு கத்தரியால் நூலை வெட்டினார். முதலில் பட்டம் விடுபட்டு தாறுமாறாகப் பறந்தது. கொஞ்ச நேரத்தில், சற்று தூரம் தள்ளி கீழே போய் விழுந்தது.

ஒழுக்கம் இப்படியானதுதான் மகனே. அது உன்னை இழுத்துப் பிடித்திருப்பதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். அதிலிருந்து அறுத்துக் கொண்டால் சுதந்திரம் என்று நினைத்திருக்கிறாய். ஆனால் அந்த சுதந்திரம் ரொம்ப தாற்காலிகமானது. சீக்கிரமே கீழே விழுந்து விடுவாய். ஒழுக்கம்தான் உன்னைக் கொடிகட்டிப் பறக்க வைத்துக் கொண்டிருப்பது. உன்னை அதிலிருந்து அறுத்துக் கொள்ளாதே”

பையன் அதற்குப் பிறகு எந்தக் கெட்ட விஷயங்கள் பக்கமும் போகவில்லை.

(ஷிவ் கேராவின் இரண்டு வரிக் கதையின் அடிப்படையில் அவர் எழுதியது)

அடுத்த வாரம் பேசுவோம்….

“‘யார் என்ன நினைத்தால் எனக்கென்ன?’” இல் 11 கருத்துகள் உள்ளன

 1. இதைப் படிச்சதும் என்ன சொல்றதுனே புரியலை. இப்போது தானே பெற்றோர் வேலைக்குப் போகிறார்கள்! வேலைக்குப் போகாத பெற்றோராக இருந்தும் கூட எங்கள் உறவினர் ஒருத்தர் வீட்டில் 2வது மற்றும் 3வது பையர்களைச் செல்லமாக வளர்த்தார்கள். யாரை என்ன சொன்னாலும் தட்டிக் கேட்கக் கூடாது. தட்டிக் கேட்பவர்களைத் தான் குற்றம் சொல்வார்கள். குழந்தைகள் அப்படித் தான் வெடுக் வெடுக்னு பேசும். வளர்ந்தால் சரியாய்ப் போகும் என்பது அவர்கள் கட்சி. அவங்க மூத்த மருமகள் அந்தப் பையர்களுக்கு வயதில் பத்துக்கு மேல் பெரியவள் கண்டித்ததையும் குற்றம் சொன்னார்கள். மைத்துனர்களைக் கண்டால் ஆகவில்லை; இவள் இன்னிக்கு வந்தவள், இவ என்ன சொல்றது நம்ம குழந்தைகளை என்று அந்தக் குழந்தைகளுக்கு நேரேயே சொல்வார்கள். அவர்களும் மன்னியை மதிக்கவில்லை! இப்போ வயதான காலத்தில் அந்தத் தாய் மருமகளுக்கு எதிரில் இரு பிள்ளைகளிடமும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறாள். என்ன செய்ய முடியும்? கண்டிக்கவேண்டிய நேரத்தில் கண்டித்தே ஆகணும் என்பதை மிகத் தாமதமாகப் புரிந்து கொண்டார் அவர்.

 2. சொந்தத் தாத்தா, பாட்டியாக இருந்தாலும் கூடப் பேரனையோ, பேத்தியையோ இப்போதெல்லாம் கண்டிக்க முடியாத சூழ்நிலை உருவாகிக் கொண்டு இருக்கிறது! 😦 சொன்னால் எங்கள் குழந்தைகளைப்பிடிக்கவில்லை என்பார்கள். பல இடங்களிலும் பார்க்கிறேன்.

 3. இன்றைய குழந்தைகள் அப்படித்தான் இருக்கிறார்கள். என் உறவில் கூட சில உதாரணங்கள் உண்டு. ஜவர்லாலின் நிலைத்தகவலை நானும் படித்தேன். ஒரு வரியில், ஒரு முறையில் பையன் அப்படி திருந்தி விட்டால் அதிசயம்தான்!

 4. //சொந்தத் தாத்தா, பாட்டியாக இருந்தாலும் கூடப் பேரனையோ, பேத்தியையோ இப்போதெல்லாம் கண்டிக்க முடியாத சூழ்நிலை உருவாகிக் கொண்டு இருக்கிறது!//

  உண்மைதான். இதிலும் எங்கள் வீட்டில் அனுபவம் உண்டு!

 5. கீதாம்மா சொன்னது ரொம்பவே வாஸ்தவம்.. நாங்கள் குழந்தையாக இருந்த போது, வீட்டுக்கு வரும் அத்தைப்பாட்டிகள் திட்டினாலும் பேசாமல் கேட்போம… அப்பா, அம்மாவெல்லாம் தலையிட மாட்டார்கள்…. பெரியவர்கள் யாரானாலும் குழந்தைகளுக்கு புத்தி சொல்லலாம். அப்படி இருந்ததால் தான், இன்றும் அவர்களுடன் ஒட்டுதலுடன் இருக்கிறோம்.இப்போது குழந்தைகள், தாத்தா பாட்டியையே எடுத்தெறிந்து பேசினாலும் கண்டிப்பாரில்லை. அதனால், மரியாதையைக் காக்க வேண்டி, அவர்களும் வாய் திறப்பதில்லை.

 6. இன்றைய காலகட்டத்தில் எது சரி எது சரியல்ல என்று பெரியவர்களுக்கே ஒரு கருத்து இல்லை.

 7. அமேரிக்கா போன்று குழந்தைகள் பெரியவர்களை மிரட்டும் காலம் இது. இதற்கு மாற்று இல்லை. அப்பா அம்மாவையே மதிக்கத் தெரியாத குழந்தைகளா மற்றவர்களை மதிக்கப் போகின்றன. என்னுடைய பேரனும் நான் சொல்வதைக் கேட்பதில்லை (வயது 9 தான்).

  Jayakumarடு

 8. வீட்டுச் சூழல் மட்டும் காரணமல்ல… என்னதான் சொல்லிச் சொல்லி வளர்த்தாலும், புறச்சூழலும் அதன் பாதிப்பைத் திணித்து விடுகிறது.
  @pkandaswamy ஐயா சொன்னதையும் யோசிக்கனும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.