ஞா.கலையரசி
முடக்கத்தான் கீரையின் தாவரப் பெயர் – Cardiospermum halicacabum
மூட்டு வலியை இது குணமாக்குகிறது; எனவே தான் இதன் பெயர் முடக்கற்றான் என்பது நம் மக்களின் நீண்ட கால நம்பிக்கை.
பழந்தமிழகத்தில் இதற்கு உழிஞைக் கொடி என்று பெயர்; நாட்டு மருத்துவத்தில், தமிழர் பயன்படுத்தி வரும் முக்கிய தாவரங்கள் என்ற அட்டவணையில் இது இடம் பெற்றிருக்கின்றது. (ஆதாரம் – தாவரவியல் அறிஞர், முனைவர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘தமிழரும் தாவரமும்’)
இதன் காய்கள் முப்பட்டை வடிவத்தில் பலூன் போன்று உப்பியிருப்பதால் ஆங்கிலத்தில் இதனை பலூன் கொடி என்றும், உப்பிய காதல் (Love in a puff) என்றும் அழைக்கிறார்கள். ஒவ்வொரு காயிலும் மூன்று விதைகள் இருக்கும். இதன் வெண்ணிறப்பூ மிகவும் சிறியதாக இருக்கும்.
மிளகை விடச் சற்று சிறிய அளவிலான கறுப்பு விதைகளில், வெண்மையாக சிறு இதயம் போன்ற சின்னம் இருப்பதால், இதற்கு Cardiospermum halicacabum என்ற பெயர் வந்ததாம். (லத்தீனில் Cardio என்பது இதயத்தையும் spermum என்பது விதையையும் குறிக்கிறது).
இக்கொடி அக்காலத்தில் ஒவ்வொரு வீட்டு வேலியிலும் அபரிமிதமாகப் படர்ந்து கிடக்கும்.இப்போதும் கூட நம் தோட்டத்தில் எலுமிச்சை, கறிவேப்பிலை போன்ற மரங்களில் இதனைப் படர விடலாம். இதற்கெனத் தனிப் பராமரிப்புத் தேவையில்லை.
இலைகளைப் பறித்து ரசம் வைக்கலாம், துவையல் அரைக்கலாம் என்றெல்லாம் பலர் சொன்னாலும், என் அம்மா எங்களுக்கு எப்போதும் செய்து தரும் தோசை பற்றிச் சொல்கிறேன்…
முடக்கத்தான் தோசை:-
இரண்டு கப் ஊற வைத்த புழுங்கல் அரிசி
ஒரு ஸ்பூன் வெந்தயம்
ஒரு பிடிக் கீரை
என்ற அளவில் இவற்றை ஒன்றாகச் சேர்த்து மைய அரைத்து, உப்பு சேர்த்து இட்லி மாவு போலப் புளிக்க வைக்கவும். மறுநாள் தோசை மாவு போல கரைத்துக் கொண்டு, மெல்லியதாக ஊற்றி ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துச் சிவந்தபின் எடுக்கவும்.
காரமான பூண்டு மிளகாய்ப் பொடி, இதற்கு நல்ல காம்பினேஷன்.
கொழகொழப்பு அதிகமாக இருந்தாலோ, கீரையின் மருந்து வாசனை தூக்கலாகத் தெரிந்தாலோ, தோசை மாவு கொஞ்சம் சேர்த்துக்கொள்ளலாம்.
கட்டுரையாளர் ஞா.கலையரசி வலைப்பதிவர், வங்கியில் பணியாற்றுகிறார்.
இந்தக்கீரை பற்றி தெரியுமே தவிர இவ்வளவு விவரங்கள் அறிந்ததில்லை. மிகவும் பயனுள்ள பகிர்வு பாராட்டுக்கள் கலையரசி
மிகவும் பயனுள்ள பதிவு என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி விஜி. முடக்கத்தான் தோசை செய்து சாப்பிட்டுவிட்டு உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். மீண்டும் நன்றி!