அஞ்சலி, இன்றைய முதன்மை செய்திகள், எழுத்தாளர்கள்

ஜெயகாந்தன் மறைந்தார்!

ஞா.கலையரசி

jaya_kanthan
எழுத்தாளர் ஜெயகாந்தன்

 

தமிழ் இலக்கிய உலகில் ஜே.கே என்று அழைக்கப்பட்ட எழுத்தாளர் ஜெயகாந்தன் (1934 2015) 08/04/2015 அன்று சென்னையில் காலமானார்.

இவர் மறைவுக்குத் தலைவர்களும், திரையுலகப் பிரபலங்களும், ‘எழுத்துலகச் சிற்பி,’ ‘சிறுகதை இலக்கியத்தின் முடிசூடா மன்னன்,’ ‘தமிழ் இலக்கிய ஒளிச்சுடர்,’ ‘படிக்காத மேதை,’ ‘முற்போக்குச் சிந்தனைவாதி,’ ‘தமிழ் இலக்கிய பிதாமகன்,’ என்றெல்லாம் புகழாரம் சூட்டிக் கண்ணீரஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கடலூரில் வேளாண்குடும்பத்தில் பிறந்து ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், இலக்கியத்துக்கான மிக உயர்ந்த விருதான ஞானபீட பரிசு பெற்றதோடு, சாகித்ய அகாடமி, பத்ம பூஷன் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

1950 களில் சரஸ்வதி, தாமரை, ஆனந்த விகடன் ஆகிய இதழ்களில் எழுதத் தொடங்கினார். அக்னிப் பிரவேசம், யுகசந்தி, உண்மை சுடும் போன்ற சிறுகதைகள், இவரைப் புதுமைப்பித்தனின் வாரிசாக அடையாளம் காட்டின. சாகித்ய அகாடெமி விருது பெற்றுத் தந்த, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்,’ நாவல் தினமணிக் கதிரில் தொடராக வெளிவந்தது.

ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்,’ ‘சில நேரங்களில் சில மனிதர்கள்,’ ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்,’ ‘யாருக்காக அழுதான்,’ ‘உன்னைப் போல் ஒருவன்,’ போன்றவை, காலத்தை வென்று நிற்கும் இலக்கியப் படைப்புக்கள். எழுத்துலகில் மட்டுமின்றி, திரையுலகம், அரசியல் எனப் பல தளங்களிலும் தம் முத்திரையைப் பதித்தவர் ஜெயகாந்தன்.

வணிக இதழ்களில் கூட இலக்கியத் தரமான கதைகளை எழுத முடியும் என்பதை மெய்ப்பித்தவர். விகடனில் ‘அக்னி பிரவேசம்,’ சிறுகதை வெளி வந்த போது, அதற்கு வாசகர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

இக்கதையில் கல்லூரியில் படிக்கும் பெண், ஒரு விபத்தில் பெண்மையைப் பறிகொடுத்து வந்து நின்று அழும் நேரத்தில் தாய் அவள் தலையில் தண்ணீரைக் கொட்டிச் சொல்லும் வசனம் இது:-

நீ சுத்தமாயிட்டேடி குழந்தே, சுத்தமாயிட்டே. உன் மேலே கொட்டினேனே அது ஜலமில்லேடி, ஜலம் இல்ல. நெருப்புன்னு நெனைச்சுக்கோ. உன் மேலே இப்போ கறையே இல்லே. நீ பளிங்குடீ. பளிங்கு.. மனசிலே அழுக்கு இருந்தாத்தான்டி அழுக்கு. உம் மனசு எனக்குத் தெரியறது. உலகத்துக்குத் தெரியுமோ? அதுக்காகத்தான் சொல்றேன். இது உலகத்துக்குத் தெரியவே கூடாதுன்னு.”

இக்கதையின் எதிர்வினை பற்றி ஜெயகாந்தன் கூறுவதைக் கேளுங்கள்:- “என் கதையின் முடிவை மாற்றியும், அந்தக் கதாபாத்திரத்தைக் கொன்றும் அதே தலைப்பில் கதை எழுதித் தமிழ்நாட்டின் பெரும் பத்திரிக்கைகளில் அவற்றுக்கு ஊக்கம் தந்து, நடந்த அத்துமீறல்களைச் சகித்துக் கொண்டிருந்தேன். எழுதுகிற பணிக்குப் பொறுமை மிக மிக இன்றியமையாதது. நான் ஒரு நாவலே எழுதுவதற்கு அந்த அத்துமீறல்களும், எனது அக்னிபிரவேசமும் காரணமாதலால், அவர்களுக்கும் கூட நான் நன்றி பாராட்டுகிறேன்.”

அக்னி பிரவேசத்தின் கதையின் முடிவை மாற்றிச் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்,’ நாவலை அவர் எழுதினார். இக்கதையில் அதே போலப் பெண்மையைப் பறிகொடுத்து விட்டு வந்து பெண் நிற்கும் போது, சத்தம் போட்டு ஊரைக்கூட்டி எல்லோருக்கும் வெட்ட வெளிச்சமாக்கிவிடும் தாயால் அப்பெண்ணின் வாழ்வு எவ்வளவு சீரழிந்து போகிறது என்பதை அருமையாக விளக்கியிருப்பார்.

இந்நாவல் திரைப்படமாகவும் வெளிவந்தது. கங்கா பாத்திரத்தில் நடிகை லட்சுமி அற்புதமாக நடித்திருப்பார். இந்நாவலின் தொடர்ச்சியாகக் கங்கை எங்கே போகிறாள் என்ற தொடர்கதையை எழுதினார்.

தாம் எழுதியவற்றுள் தமக்கு மிகவும் பிடித்ததாக ஜெயகாந்தன் சுட்டுவது ‘ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’.

இக்கதை நாயகன் ஹென்றி ஊர், மொழி, இனம் கடந்த ’யாதும் ஊரே, யாவரும் கேளிர்,’ என்ற உயரிய் மனப்பான்மை கொண்ட உலகப் பொது மனிதனாக உருவாக்கப்பட்டிருக்கிறான். ’என் உள்ளம் தான் ஹென்றி,’ என்று ஜெயகாந்தன் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறாராம்.

இரண்டாம் உலகப்போரின் போது சபாபதிப்பிள்ளை, மைக்கேல் அவரது மனைவி மூவரும் ரங்கூனிலிருந்து இந்தியாவுக்குத் தப்பியோடி வரும் வழியில், ரயில் நிலையத்தில் அநாதைக் குழந்தையாகக் கண்டெடுக்கப் படுகிறான் ஹென்றி. 

தன் வளர்ப்புத் தந்தையின் மறைவுக்குப் பின் பெங்களூரிலிருந்து அவரது கிராமமான கிருஷ்ணராஜபுரத்துக்கு வருகிறான். இவ்வூரின் வாழ்க்கை சூழலே நாவலின் பின்னணியாக அமைந்துள்ளது. 

அவ்வூர் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் தேவராஜன் என்பவனுடன் நட்பு ஏற்படுகிறது. தன் கிராமத்துப் பழக்க வழக்கங்களில் அதிருப்தியும் வெட்கமும் கொள்கிறவனாகவும், அச்சூழலில் அந்நியப்பட்டும் வாழ்கிறான் இவன்.

ஆனால் எங்கோ பிறந்து பெங்களூரில் வளர்ந்த ஹென்றி, தன் வளர்ப்புத் தந்தையின் கிராமத்துக்கு வந்து, அந்த வாழ்க்கையை அதன் இயல்புகளோடு ஏற்றுக்கொண்டு கிராமச் சூழலோடு ஒன்றிப் போகிறான். அவசியம் வாசிக்க வேண்டிய நாவல்.

ஜெயகாந்தன் என்பது ஒற்றைச் சொல்லில் ஒரு சரித்திரம்; இந்திய இலக்கியத்தின் தமிழ் அடையாளம் என்கிறார் கவிஞர் வைரமுத்து. .

அவர் எழுத்துக்களை வாசிப்பதே, நாம் அவருக்குச் செய்யும் மரியாதை. தமிழ் இலக்கிய வரலாற்றில் என்றென்றும் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்குச் சிறப்பான இடம் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. .

கட்டுரையாளர் ஞா.கலையரசி வலைப்பதிவர், வங்கியில் பணியாற்றுகிறார்.

 

 

“ஜெயகாந்தன் மறைந்தார்!” இல் 7 கருத்துகள் உள்ளன

  1. இலக்கிய உலகம் மாபெரும் எழுத்தாளரை இழந்து தவித்து நிற்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை. அவரது உடல் மறைந்தாலும் அவரது எழுத்துக்களும் எண்ணங்களும் என்றுமே மறையாது அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்

  2. இலக்கிய உலகம் மாபெரும் எழுத்தாளரை இழந்து தவிக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை. அவர் உடல் மறைந்தாலும் அவரது எழுத்தும் எண்ணங்களும் என்றும் மறையாது. அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்

  3. முற்போக்கு எழுத்துகளாலும் மனிதநேயக் கருத்துகளாலும் நம்மைக் கவர்ந்த மாபெரும் எழுத்தாளுமையின் மறைவு மிகவும் வேதனை தருகிறது. ஜெயகாந்தன் அவர்களுடைய பல கதைகளின் தாக்கம் வாசித்து முடித்தபின்னும் நெடுநாள் நெஞ்சத்தில் ரீங்கரித்துக்கொண்டே இருக்கும். \\அவர் எழுத்துக்களை வாசிப்பதே, நாம் அவருக்குச் செய்யும் மரியாதை.\\ மிகவும் உண்மை.

    1. ஆம் கீதா! அவர் நாவலை வாசித்து முடிந்த பின்னர் சில நாட்கள் அதன் பாதிப்பு நம்மிடம் இருக்கும். அத்தகைய எழுத்துக்குச் சொந்தக்காரர். கருத்துப்பகிர்வுக்கு மிகவும் நன்றி கீதா!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.