கவிஞர் தாமரை
‘ தமிழை நேசித்தேன்
தெருவுக்கு வந்து விட்டேன் ,
தமிழ் உணர்வாளர்களே சம்மதம் தானா ? ‘
என்ற என் பதாகையில் முதல் இரண்டு வரிகள்தாம் கண்ணுக்குத் தெரிந்ததா ? மூன்றாம் வரிக்கு ஒருவர் கண்ணும் போகவேயில்லையா ?..
தமிழ்ப் பற்றுக் கொண்டவர்கள் பதைபதைத்திருக்க வேண்டாமா ?. தமிழ்ப்பற்றுக் கொண்ட ஒரு பெண் , ஊரறிந்த தமிழ்க்கவிஞர் எவ்வளவு மனம் புண்பட்டிருந்தால் இப்படிச் சொல்லித் தெருவில் அமர்ந்திருப்பார் ? என்று ஒரு கணம் யோசித்திருக்க வேண்டாமா ??? ஓடோடி வந்திருக்க வேண்டாமா ?? ஓடோடி வந்தவர்கள் தாய்த்தமிழ்ப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியை புவனேஸ்வரியும், தாய்த்தமிழ்ப்பள்ளி அறங்காவலர் சிவ.காளிதாசனும், என் தமிழ் அறிந்த மாணவர்கள் சிலரும். சிலர் சொல்கிறார்கள் , தியாகுவை நேசித்தேன், தெருவுக்கு வந்துவிட்டேன் என்று பதாகையை எழுதியிருக்க வேண்டுமாம்… எழுதியிருந்தால்………..??
முடிந்தது கதை !!!!!. இவரே சொல்லிவிட்டார் , தியாகுவுக்கும் இவருக்கும் பிரச்சினை, அதற்கு எதற்குத் தெருவில் உட்கார வேண்டும், நீதிமன்றத்துக்குத் தானே போகவேண்டும், கணவன்-மனைவி சண்டை என்று ஊற்றி மூடியிருக்க மாட்டார்களா ? தியாகுவை நாங்களா நேசிக்கச் சொன்னோம் என்று அடுத்த அலம்பலை ஆரம்பித்திருக்க மாட்டார்களா ?.
இது கணவன்-மனைவி சண்டை இல்லை என்று நான் தலைப்பாடாக அடித்துக் கொண்டும் இதை அப்படிச் சுருக்கப் பார்ப்பதன் நோக்கம் என்ன ? தூங்குவது போல் நடிப்பது எதற்காக ?
தமிழ் உணர்வாளர்களுக்கு நான் எழுதிய ஆரம்பகட்டக் கடிதத்தில் எல்லா விளக்கங்களும் உள்ளன. அதில் நான் கேட்ட கேள்விகளான ,’ நீங்கள் அமைக்க இருக்கும் தமிழ்த்தேசத்தில் ,
சாதி, மதம் உண்டா ? குடும்பம் என்ற அமைப்பு உண்டா? அல்லது திறந்தவெளிப் பல்கலைக் கழகமா ? ‘
ஆகியவற்றிற்கு இன்றுவரை எந்த அமைப்பும் / உணர்வாளரும் பகிரங்கமாகப் பதில் சொல்லவில்லை. பதில் வரட்டும், பிறகு என் அடுத்த கேள்வியைத் தொடுக்கிறேன்.
” குடும்பம் குடும்பமாக அரசியலுக்கு வரவேண்டும் ” என்பது தமிழ் வட்டாரங்களில் பிரபலமான கோட்பாடு .
எதற்கு ???????
குடும்பம் குடும்பமாகத் தெருவில் நிற்பதற்கா ?
சாதி, மதம் துறந்து , ‘ தமிழராக இணைவோம் ‘ என்ற முழக்கத்தை நம்பி வெளியே வந்தவள் , ஒரு பிரச்சினை என்றால் தமிழ்ச் சமூகத்திற்குத்தானே வர முடியும் ?. வரக் கூடாது என்றால் அடுத்து தெருவுக்குத்தானே வரமுடியும் ?
என்னுடையது அடையாளப் போராட்டம். ஓடி ஓடி ஒவ்வொரு கதவாகத் தட்டியபிறகுதான் தெருவுக்கு வந்தேன். ‘ என்னுடைய மொழிப்பற்றும் இனப்பற்றும் தாம் என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்தன ‘. இவற்றைக் குறிவைத்துப் பயன்படுத்தித்தான் தியாகு என்னை அடைந்தார், அணுஅணுவாகச் சிதைத்தார், தெருவில் விட்டு வேடிக்கை பார்த்தார்.
தமிழ்நாட்டின் எந்த ஒரு இயல்பான ஆண்மகனும் தன் மனைவியும் குழந்தையும் தெருவில் நிற்பதைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அதை அவமானமாகவே நினைத்துப் பதைத்திருப்பார்கள்… தமிழ்ச் சமூகத்தில் ‘தெருவுக்கு வருவது’ என்பது இழிவு !. இது போன்ற ‘இயல்புக்கு மேலான’ ‘அறிவுசீவி தமிழ்த் தேசியவாதிகள்தாம்’ அதைக் கூட ‘ மார்பில் மற்றுமொரு விழுப்புண் ‘ என்று வெற்றிச் சிரிப்பு சிரிப்பார்கள் !!!
சமூகத்தின் வெகுமக்கள் உணர்விற்கும் தம் அரசியல் ‘அறிவுசீவி உணர்வுக்கும் ‘ இவ்வளவு பெரிய இடைவெளி வைத்துக் கொண்டிருக்கும் இவர்களா தமிழ்மக்களை அணுகி , தமிழ்த்தேசம் அமைக்கப் போகிறார்கள் ??
‘ தமிழைக் காட்டி ஏன் அந்தப் பெண்ணை ஏமாற்றினாய் ? நாளை எப்படிப் பெண்கள் தமிழ் அரசியலுக்கு வருவார்கள் ? ‘ என்று நீங்கள் சட்டையைப் பிடித்து உலுக்க வேண்டியது தியாகுவைத்தானே ஒழிய , இருபதாண்டு காலமாக வேறு நினைவே இன்றி தமிழுக்காகவே உழைத்த என்னை அல்ல……
தமிழ் என் தாய்மொழி. என் உயிர்மூச்சு. அது என்னை உயர்த்தியது. அதில் எந்த மாறுபட்ட கருத்தும் எனக்கு இல்லை. ‘ தமிழால் முடியும் ‘ என்று தமிழ்த் திரையுலகில் நின்று, வென்று காட்டிய சாதனை சாதாரணமானது இல்லை. என் தமிழ்ப்பணி தொடரும், யாருக்காகவும் நிற்காது.. அதைச் செய்ய யாருடைய சான்றிதழும் எனக்குத் தேவை இல்லை.
முடிந்தால் என்போன்ற உண்மையான தமிழ் உணர்வாளர்களை / தொண்டர்களைக் காப்பாற்றப் பாருங்கள். அதுதான் உங்கள் தமிழ் / திராவிடத் தமிழ்த் தேசத்திற்கு நல்லது.
போலிப் போராளிகளையும் / வாய்ப்பேச்சு வீரர்களையும் / வாதத்திறன் வல்லுநர்களையும் அடையாளம் கண்டு ஒதுக்காவிட்டால், பாவம்…. உலகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. சேதாரம் அடைந்தது அடைந்ததுதான்…. இனியேனும் சேதாரத்தைக் கட்டுப்படுத்தப் பாருங்கள்…..
( Damage has already been done. Try to contain it ! ) .
பி.கு :
கடந்த இருபதாண்டுகாலத் தியாகுவின் செயல்பாடுகள் குறித்து விசாரணை கேட்டிருக்கிறேன்.
‘ இயக்கம் ‘ என்ற பெயரில் இங்கே என்ன நடக்கிறது, தமிழ் / திராவிடத் தமிழ் அரசியல் என்றால் என்ன , ‘தமிழ்ப்பற்று’ எவ்வெவற்றிற்கெல்லாம் பயன்படுத்தப் படுகிறது என்ற எல்லா உண்மைகளும் வெளிவரும். இனி தமிழின் பெயரால் எந்தப் பெண்ணும் ஏமாற்றப் படக்கூடாது . என் வாழ்க்கையே இனிவரும் இளம்பெண்களுக்கும் / இளைஞர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும்.தெருவுக்குக் கொண்டுவந்த ‘தமிழ் அரசியல்’ தன்னை ஆன்ம விசாரணைக்கு உட்படுத்திக் கொள்ளட்டும்!
(தொடரும்)