செல்வ களஞ்சியமே – 88
ரஞ்சனி நாராயணன்

நேரமே இல்லை என்று சொல்லும் என் மாணவர்களிடம் வேடிக்கையாகக் கேட்பதுண்டு: யாருக்கெல்லாம் ஒரு நாளைக்கு 25 மணி நேரம் வேண்டும் என்று. எல்லோரும் என்னை விநோதமாகப் பார்ப்பார்கள். ஒரு மாணவரைப் பார்த்து ‘நீங்கள் எத்தனை மணிக்குக் காலையில் எழுந்திருப்பீர்கள்?’ என்று கேட்பேன். 7 மணிக்கு என்று சொன்னால் ‘6 மணிக்கு எழுந்திருங்கள் உங்களுக்கு 25 மணி நேரம் கிடைக்கும்’ என்பேன்.
சில பல சமயங்களில் நம்மால் நாம் எதிர்பார்ப்பதை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க இயலாமல் போகலாம். அப்போது ஒருநாளைக்கு இன்னும் ஒரு மணிநேரம் கூட இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றும். சரி தூங்கும் நேரத்தைக் குறைக்கலாம் என்றும் நினைப்போம். ஆனால் காலையில் கண்விழிக்கவே இயலாது போகும்.
தேர்வு சமயத்தில் இரவெல்லாம் கண் விழித்துப் படிக்கும் மாணவர்களை நினைத்தால் எனக்கு வருத்தமாக இருக்கும். ஒரு உண்மையை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். உடலுக்குத் தேவையான ஓய்வைக் கொடுத்தால் தான் அது உங்களுக்கு தன் முழு ஒத்துழைப்பைக் கொடுக்கும். உழைப்பிற்குத் தகுந்த ஓய்வும் கட்டாயம் தேவை.
ஓய்வு கொடுப்பதனால் உடல் மட்டுமல்ல; உங்கள் மூளையும் உங்களுடன் நன்றாக ஒத்துழைக்கும். நன்றாகப் படித்துவிட்டு நல்ல ஓய்வும் – முக்கியமாக இரவுத் தூக்கம் நன்றாகத் தூங்கி எழுந்தால் மனமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். படித்ததெல்லாம் நினைவில் நன்றாக இருக்கும். அதிகாலை வேளையில் மூளை நல்ல சுறுசுறுப்புடன் இருக்கும். அதனாலேயே நம் பெரியவர்கள் இரவு சீக்கிரம் தூங்கி காலையின் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என்று சொன்னார்கள். இதை பழக்கத்திற்குக் கொண்டு வருவது இந்தக் காலத்தில் சற்று சிரமம் தான். ஆனால் சிறிது முயன்றால் எல்லாமே கைகூடும்.
மனிதர்களுக்கு மட்டுமல்ல; இயந்திரங்களுக்கும் ஓய்வு என்பது மிக முக்கியம். நமது கணணியை இரவு அணைத்துவிட்டு காலையில் மறுபடி இயக்க ஆரம்பிக்கிறோமே. அதேபோல மனித உடலுக்கும் கொஞ்சம் ஓய்வு நிச்சயம் தேவை. கணனியைக் கண்டு பிடித்ததே மனிதன் தானே. கணனிக்கு ஓய்வு தேவை என்றால் அதைக் கண்டுபிடித்த மனிதனுக்கும் ஓய்வு தேவைதானே?
தூக்கத்தின் போது நமது உடலில் சைடோகின்ஸ் என்ற ஒரு புரதம் நமது நோய் எதிர்ப்பு தன்மையினால் சுரக்கிறது. இந்தப் புரதத்தின் காரணமாக நம் உடலில் ஏற்படும் காயங்கள், வீக்கங்கள் சீக்கிரம் குணமடைகின்றன. நமது மன அழுத்தம் குறைகிறது. பழுதடைந்த செல்கள் புதுப்பிக்கப் படுகின்றன. அதனால் ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு மணிநேர தூக்கம் தேவை.
தூக்கம் குறையும்போது இந்தப் புரதத்தின் சுரப்பும் குறைகிறது. தூக்கம் குறைந்தவர்கள் எப்போதுமே ஒருவித தூக்கக் கலக்கத்தில் இருப்பார்கள். அதீத சோர்வு, எரிச்சல், கவனமின்மை, அடிக்கடி தலைவலி, உடல்வலி, மறதி ஆகியவற்றிற்கு ஆளாகிறார்கள். உடலின் வளர்சிதை மாற்றம் சரிவர நடப்பதில்லை. மனஅழுத்தம் அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நினைவுத் திறன் குறைகிறது.
பொதுவாகவே இந்தக் காலத்தில் சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழுந்திருக்கும் பழக்கம் மறைந்தே விட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இரவு வெகு நேரம் கழித்தே உறங்கச் செல்லுகின்றனர். இதற்கு தொலைகாட்சி நிகழ்ச்சிகளும் ஒரு காரணம் என்று சொல்லலாம். பெரியவர்களுக்கு தொலைகாட்சி நிகழ்ச்சிகள் போல இளைஞர் இளைஞிகளுக்கு வேறு மாதிரியான வேலைகள். இரவில் தான் எல்லோருக்கும் நேரம் கிடைக்கிறது. பள்ளி செல்லும் சிறுவர் சிறுமிகளுக்கும் கூட இரவில் தான் படிக்க நேரம் கிடைக்கிறது. அதனால் இரவில் வெகு நேரம் கண் விழித்துப் படித்துவிட்டு காலையில் எழுந்திருக்கவே முடிவதில்லை என்கிறார்கள். என்ன செய்யலாம்?
சாதாரண நாட்களில் பரவாயில்லை. தேர்வு சமயங்களில் இந்தப் பழக்கத்தை கொஞ்சம் முயற்சி செய்து மாற்றிக் கொள்ளவேண்டும். ஏனெனில் ஒருநாளைப் போல தினமும் இரவு வெகு நேரம் விழித்துப் படித்தால் உடல் சோர்ந்து போகும். படிப்பதும் மனதில் பதியாது. உடலுக்கும் மனதிற்கும் நிச்சயம் ஓய்வு தேவை. ஒரு மிகப்பெரிய தொழிற்சாலையை எடுத்துக் கொள்ளுங்கள். வருடத்திற்கு ஒருமுறை மெயிண்டனன்ஸ் என்ற பெயரில் எல்லா இயந்திரங்களையும் நிறுத்திவிட்டு ஏதாவது மறுபடி இயக்குவார்கள். இதனால் இயந்திரங்களின் திறன் அதிகரிக்கும். அதேபோலத்தான் நமது உடலாகிய இயந்திரமும். அதற்குத் தேவையான ஓய்வு கொடுத்தே ஆக வேண்டும். அப்போதுதான் அதன் முழுத் திறனையும் நாம் அனுபவிக்க முடியும். இந்த ஓய்வுதான் நாம் தினமும் தூங்கும் தூக்கம்.
சாதாரண நாட்களைவிட தேர்வு நேரத்தில் நமது உடலுக்கு நிச்சயம் நல்ல தூக்கம் தேவை. படித்து முடித்தவுடன் நல்ல தூக்கம் தூங்கினால் நமது நினைவுத் திறன் கூடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இரவுத் தூக்கம் நமது களைப்பை போக்குவதுடன் நமது மூளையின் ஆற்றலையும் அதிகரிக்கிறது. இப்படிச் சொல்வதால் படிக்காமலே தூங்க வேண்டும் என்று சொல்வதாக நினைக்க வேண்டாம். முழு கவனத்துடன் படித்துவிட்டு நல்ல தூக்கமும் தூங்கினால் படித்தவைகள் நன்றாக நினைவில் இருக்கும்.
சரி, இத்தனை சொல்லியும் தேர்வு டென்ஷன் தூக்கம் வரவில்லை, என்ன செய்யலாம்? தொடர்ந்து படிப்பதை நிறுத்திவிட்டு வேறு விதமாக மனதை உடலைத் தளர்த்திக் கொள்ளலாம். யோகா, தியானம், அக்குபிரஷர் போன்ற வகைகளில் பலன் பெறலாம். இப்போது சில பள்ளிகளில் இளம் வகுப்புகளிலேயே யோகா, தியானம் என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். உடற்பயிற்சி, ஓடுதல் முதலானவற்றை செய்வதால் உடல் களைத்து உறக்கம் வரும்.
படிப்பதற்கு நடுவே கண் இழுத்துக் கொண்டு போகிறதா? ஒரு பவர் நேப் (power nap) ஒரு பதினைந்து இருபது நிமிடங்களுக்கு போட்டு விடலாம். உடல் களைப்பு நீங்குவதுடன், மனமும் உற்சாகம் பெறும்.
இன்னும் பேசுவோம்….
Reblogged this on ranjani narayanan.
மிக மிக அருமையான பதிவு சகோதரி! நல்ல கருத்துக்கள். பலர் என்ன நினைக்கின்றார்கள் என்றால் இரவு வெகு நேரம் படித்தால் நன்றாக படிக்க முடியும் என்று….ம்ம் குவாண்டிட்டி டைம் விட குவாலிட்டி டைம் தான் முக்கியம்…நல்ல கருத்துக்கள் சகோதரி!
நல்ல தூக்கம் = அருமையான மருந்து…
நல்ல பதிவு. தற்காலத்திற்குத் தேவையான பதிவும் கூட. உங்கள் நேரப் பிரச்னைகளிலும் தொடர்ந்து இணையத்திற்கு வருவதற்கு வாழ்த்துகள். விரைவில் பழைய மாதிரி சுறுசுறுப்புடன் பதிவுகள் கொடுக்கவும் வாழ்த்துகள்.