சிட்டுக்குருவி தினம் சிறப்பு கட்டுரை – 2
ஞா.கலையரசி
மரம், மூங்கில், அல்லது மண் கலயம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றாலான கூடு செய்து வாயில் முகப்பிலோ (Portico), ஜன்னல் பக்கத்திலோ தொங்க விடுங்கள்; காலணி, காம்பளான் அட்டைப் பெட்டிகளின் நடுவில் 32 மி.மீ அளவு ஓட்டை போடுங்கள்; பெரிய ஓட்டையாக இருந்தால் காகம் போன்ற பெரிய பறவைகள், அதன் வழியே அலகை விட்டுக் குஞ்சுகளைத் தின்றுவிடக்கூடும்.
(நான் ‘சர்ப் எக்செல்’ பெட்டிகளைப் பயன்படுத்துகிறேன். நன்கு திறந்து வைத்து சோப் வாசனை முற்றிலும் நீங்கிய பிறகு பயன்படுத்தவும்.)
குஞ்சுகள் சிறகு முளைத்துப் பறந்த பிறகு, பழைய அட்டைப் பெட்டியைக் கழற்றிவிட்டுப் புதிதாக மாட்டவும். ஓரிரு நாட்களில் அடுத்த ஜோடி வந்துவிடும் குடித்தனம் நடத்த! கூட்டுக்கு அவ்வளவு கிராக்கி!
வைக்கோல் இருந்தால் அட்டைப் பெட்டியில் கொஞ்சம் போட்டுவைக்கலாம்; இல்லையேல் வெறுமனே வைத்தால் போதும்.
பழைய பூந்துடைப்பான்களைத் தூக்கிக் குப்பையில் எறியாமல் ஏதாவது ஓர் இடத்தில் போட்டு வைக்கவும்; அவற்றிலிருந்து மிருதுவான பஞ்சு போன்ற நார்களை உருவி எடுப்பதில் சிட்டுக்குருவி கெட்டி!




கூட்டுக்கு அடுத்துத் தேவை உணவு. கம்பு, கேழ்வரகு, அரிசி நொய், போன்ற தானியங்களை உணவளிப்பான் (Bird Feeder) மூலம் போடலாம். தட்டில் போட்டும் வைக்கலாம். குஞ்சு பொரித்திருக்கும் போது சுடு சாதத்தை மோரோ, பாலோ ஊற்றிக் குழைவாகப் பிசைந்து வைக்கலாம்.
மூன்றாவது மிக முக்கியம் தண்ணீர். இரண்டு அதிக ஆழமில்லாத மண்சட்டிகளை வாங்கித் தண்ணீர் ஊற்றி வைக்கவும். ஒன்று குடிப்பதற்கு; இன்னொன்று குளிப்பதற்கு. தினமும் நீரை மாற்றுவது அவசியம்.
இப்போது எங்குப்பார்த்தாலும் புல்தரை (LAWN) வளர்ப்பது நாகரிகமாயிருக்கிறது. பறவைகளோ, வண்ணத்துப்பூச்சிகளோ அண்டாத இந்தப் புல்தரைக்குப் பதில் வீட்டைச் சுற்றிச் சிறிதளவே மண் இருந்தாலும் முல்லை, மல்லிகை, நந்தியாவட்டை, இட்லிப்பூ, அரளி போன்ற செடி, கொடி வகைகளை வளருங்கள். பெரிய தோட்டமாயிருந்தால் பழ மரங்களை வளர்க்கலாம். சிட்டுக்குருவிக்கு மட்டுமின்றி, மற்ற சிறு பறவைகளுக்கும் புதர்ச்செடிகள் அவசியம்.
தோட்டத்தில் இரசாயன பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தவே கூடாது.
கல் மாவுக்குப் பதில் அரிசிமாவைக் கோலத்துக்குப் பயன்படுத்துங்கள்.
கூட்டுக்கு அருகிலோ, கீழேயோ நின்று சத்தம் போடக்கூடாது. பட்டாசு வெடிச்சத்தம் கூடவே கூடாது.
அரச மரத்தைச் சுற்றியவுடன் அடி வயிற்றைத் தொட்டுப் பார்த்த கதையாகக் கூட்டைக் கட்டியவுடனே, குருவி வந்து கூடு கட்டும் என எதிர்பார்க்கக் கூடாது. சில நாட்கள் ஆகலாம்; மாதங்களும் ஆகலாம். ஆனால் ஒரு முறை சிட்டுக்குருவி கூடு கட்டத் துவங்கிவிட்டால், அதற்குப் பிறகு வரிசையாக அடுத்தடுத்த ஜோடி வந்து கொண்டே இருக்கும்.
எங்கள் தெருவில் முதலில் நான்கு சிட்டுக்குருவிகள் மட்டுமே இருந்தன. இப்போது இருபதுக்கும் மேற்பட்ட குருவிகள் உள்ளன. எனவே நாம் மனது வைத்தால் கண்டிப்பாக குருவிகளின் எண்ணிக்கையைப் பெருக்க முடியும் என்பது என் அனுபவத்தில் நான் கண்ட உண்மை. தெருத்தெருவாகச் சுற்றியலைந்து கூடு கட்டத் தோதான இடத்தைக் கண்டுபிடிப்பது ஆண்குருவியின் வேலை. இடம் கிடைத்தவுடன் இது என் இடம்; இங்கு வேறு யாரும் வரக்கூடாது என்று நான்கெல்லை வகுத்துக்கொண்டு பெண்குருவியைக் கவர அதிகச் சத்தத்துடன் ஒலியெழுப்புமாம். (கூட்டை கண்டுபிடித்து பெண் குருவியின் வரவுக்காக குரல் எழுப்பிய ஒரு ஆண் சிட்டுக்குருவியை சமீபத்தில் பதிவு செய்தோம்… அதை இந்த
http://www.youtube.com/watch?v=gZg5LlaIyeY விடியோவில் காணலாம் – நான்கு பெண்கள்)
பெண்ணுக்கு ஆண் பார்த்த இடம் பிடித்திருந்தால், ஜோடி சேரும். தம்பதி சமேதரராக இரண்டும் சேர்ந்து கூட்டுக்கான பொருட்களைச் சேகரம் செய்யும். ‘இது என் வேலையில்லை; நீதான் செய்யணும்,’ என்ற போட்டாப் போட்டி இக்குருவி இனத்தில் இல்லை!
“க்கும்! ரொம்ப யச்சனமா இடம் பார்த்திருக்கு பாரு!” என்று பெண்குருவி ஆணின் முகத்தில் காறித் துப்பிவிட்டுப் போய் விட்டால், அதனைக் கவர ஆண் வேறு இடம் தேட வேண்டும்! இல்லாவிட்டால் இந்தக் கூட்டுக்குச் சம்மதம் தெரிவிக்கும் பெண் கிடைக்கும் வரைப் பொறுத்திருக்க வேண்டும்!
ஆனால் இப்போது இருக்கும் நிலைமையில், கூடு கட்ட ஏதாவது இடம் கிடைத்தால் போதும் என்ற பரிதாபமான நிலைமையில், பெண்குருவி ஆண் தேர்ந்தெடுக்கும் இடத்தை நிராகரிக்கும் வாய்ப்புக்கள் மிகவும் குறைவு தான்.
சிட்டுக்குருவி தினம் பற்றிப் பேசும் போது நேச்சர் பார் எவர் சொசைட்டியின் (Nature Forever Society) நிறுவனர் முகமது திலவார் (Mohamed Dilawar) பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
சிட்டுக்குருவியினத்தைக் காப்பாற்றத் தம் முழு நேரத்தையும் அர்ப்பணித்திருக்கும் இவர் துவங்கிய ‘நம் சிட்டுக்குருவியைக் காப்பாற்றுவோம்,’ (SAVE OUR SPARROWS) (SOS) என்ற விழிப்புணர்ச்சி இயக்கம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. புர்ஹானி பவுண்டேஷனுடன் (Burhani Foundation (India) இணைந்து 52000 பறவை உணவளிப்பான்களை உலகமுழுதுக்கும் வழங்கியிருக்கிறார். இவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இணைப்பு:- http://www.natureforever.org/
வேளாண்மை விளைச்சலுக்குச் சிட்டுக்குருவி எவ்வளவு தூரம் உதவுகிறது என்பதை இவர் சொல்லும் சீனாவின் வரலாற்று நிகழ்விலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடியும்:-
1957 ஆம் ஆண்டு வேளாண் அறுவடை மோசமாகப் பாதிக்கப்பட்டதற்கு எலி, சிட்டுக்குருவி, ஈ, கொசு ஆகியவற்றைக் காரணம் காட்டிய சீன அதிபர் மாசே துங், 1.96 பில்லியன் குருவிகளைக் கொல்லுமாறு உத்தரவிட்டார்.
சிட்டுக்குருவி பூச்சிகளைக் கட்டுப்படுத்தி, விளைச்சலுக்கு உதவி செய்கிறது என்று பறவையியலார் கடுமையாக எச்சரித்தும், அவர் கேட்கவில்லை. இவர் ஆணைப்படி 1958 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் அநியாயமாக 194, 432 அப்பாவிக் குருவிகள் கொல்லப்பட்டன. ஆனால் அதற்கடுத்த ஆண்டு பூச்சிகளின் கடுமையான தாக்குதலால் விளைச்சல் படு மோசமாகப் பாதிக்கப்பட்டதோடு, 1960 -62 ல் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்துக்கு 40000 சீனர்கள் பலியாயினர்.
சரி, நண்பர்களே! உங்களுக்குக் கடைசியாக ஒரு வேண்டுகோள்!
சிட்டுக்குருவிகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தைக் குழந்தைகளுக்கும் இளைய தலைமுறைக்கும் எடுத்துக் கூறி, இயற்கையை நேசிக்கக் கற்றுக் கொடுங்கள்.
இக்கட்டுரையை வாசித்த ஒவ்வொருவரும் இன்று முதல் சிட்டுக்குருவியைக் காக்கும் நடவடிக்கையில் இறங்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்.
கட்டுரையாளர் ஞா.கலையரசி வலைப்பதிவர், வங்கியில் பணியாற்றுகிறார்.
Hats up…. Mam
கட்டுரையை மனந்திறந்து பாராட்டியதற்கு மிகவும் நன்றி!