இன்று சிட்டுக்குருவி தினம்
ஞா.கலையரசி
சிட்டுக்குருவி தினம் கொண்டாடுவதால் ஏதேனும் பலன் இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இருக்கிறது. 20/03/2010 அன்று முதன்முதலாக இது கொண்டாடப்பட்ட பின்னரே, இக்குருவி அழிவின் விளிம்பிலிருந்த உண்மை வெளியாகி, நாடுமுழுதும் பரவலான விழிப்புணர்வு ஏற்பட்டது. .
அதுவரை இளம்வயது தோழர்களாய் கூட்டங்கூட்டமாக நம்மோடு கூடவே வளர்ந்த இக்குருவிகள், நம்மூரில் மட்டும் தான் இல்லை என்று நினைத்திருந்த பலருக்கு, இவை எங்குமே இல்லை, எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது என்ற தகவல் அதிர்ச்சியைத் தந்தது.
இவற்றின் அழிவுக்கு முக்கிய காரணங்களாகச் சொல்லப்படுவன:-
சிட்டுக்குருவி மனிதரை அண்டியே வாழுமினம். அக்காலத்தில் இவை கூடு கட்ட, நம் ஓட்டு வீடுகளில் சந்து, பொந்து, மாடம், பரண், பனஞ்சாத்து, சுவரில் தொங்கிய புகைப்படங்கள் போன்ற மறைவிடங்கள் பல இருந்தன. மேலும் தோட்டத்திலிருந்த புதர்ச்செடிகளும், குறுமரங்களும் காகம், கழுகு போன்ற பெரிய பறவைகளிடமிருந்து சரியாகப் பறக்கத் தெரியாத இளங்குஞ்சுகளுக்கு (FLEDGLING)அடைக்கலம் கொடுத்தன.
இன்று கான்கிரீட் வீடுகளில், இவை கூடு கட்ட மறைவிடம் ஏதுமில்லை. காணுமிடமெல்லாம் பெருகி வரும் அடுக்கக வீடுகளில், தோட்டத்துக்கு ஏது இடம்?
இயற்கை வேளாண்மையைக் கைவிட்டு நாம் வயல்களில் அளவுக்கதிகமான இரசாயன பூச்சிக்கொல்லி மற்றும் உரங்களைப் பயன்படுத்தியதன் விளைவாகப் புழுக்கள் முற்றிலுமாக அழிந்து விட்டன. .
எனவே உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரோட்டீன் மிக்க புழுக்களை மட்டுமே இரையாகக் கொள்ளும் இளங்குஞ்சுகளுக்குக் கடுமையான உணவுப் பற்றாக்குறை. மேலும் இத்தானியங்களைத் தின்னும் குருவிகள், இரசாயன வீரியம் தாங்காமல் இறந்துவிடுகின்றன.
அரிசி, நெல் போன்ற வறண்ட தானியங்களை உண்ணும் இவற்றுக்குத் தண்ணீர் அதிகம் வேண்டும். ஆனால் வெயில் காலங்களில் நீர்நிலைகள் வறண்டு கிடப்பதால், தேவையான தண்ணீர் கிடைப்பதில்லை.
செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சு ஒரு காரணம் என்று சொல்லப்பட்டாலும், இது ஆதாரபூர்வமாக இன்னும் நிரூபிக்கப் படவில்லை.
காலத்துக்கேற்ப ஓட்டு வீட்டை கான்கிரீட் கட்டிடங்களாக மாற்றிக் கொண்ட நாம், நம்மை அண்டியே அதுவரைக் குடித்தனம் நடத்தி வந்த இந்தச் சின்னஞ்சிறு உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், அம்போ என்று நட்டாற்றில் விட்டது நியாயமா?.
‘சிட்டுக்குருவியின் கூட்டைக் கலைத்தால் பாவம்; அது கூடு கட்டுவது குடும்பத்துக்கு நல்லது,’ என்று நம் முன்னோரிடமிருந்த நம்பிக்கையால் தடையேதுமில்லாமல், அக்காலத்தில் இதன் இனப்பெருக்கம் நடைபெற்றது. மேலும் கிராமத்தில் வீட்டுக்கூரையின் முன்பக்கம் இவை கொத்தித் தின்னப் வயலில் புதிதாக அறுத்த நெல்மணி கொத்துக்களைச் செருகி வைப்பார்களாம். இயற்கையை நேசித்தல் அவர்கள் வாழ்வோடு இரண்டறக் கலந்திருந்தது. ஆனால் நாமோ இயற்கையை விட்டு வெகுதூரம் விலகி வந்து விட்டோம்! அதன் விளைவைத் தான் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
மனிதரிடம் அடைக்கலம் புகுவதால், இதற்கு அடைக்கலக்குருவி என்ற பெயரும் உண்டு. ஆனால் இன்று இக்குருவிக்கு அடைக்கலம் கொடுப்பார் யாருமில்லை.
‘சிட்டுக்குருவியால் நமக்கென்ன பயன்? ஏன் அதைக் காப்பாற்ற வேண்டும்?’ என்று கேட்கும் அறிவாளிகளும்(!) இன்று நம்மிடையே இருக்கத் தான் செய்கிறார்கள்.
இவர்களுக்கு நான் சொல்லும் பதில் இது தான்:-
இயற்கையில் தாவரம், புழு, பறவை, விலங்கு, மனிதன் என அனைத்தும் ஒன்றோடொன்று தொடர் சங்கிலி போலப் பின்னிப் பிணைந்து ஒன்றையொன்று சார்ந்து வாழுமாறு படைக்கப்பட்டுள்ளன. பறவைகள் அழிகின்றன என்றால், இச்சங்கிலி ஏதோ ஓர் இடத்தில் அறுபட்டிருக்கிறது என்ற உண்மையை நாம் அறிந்து கொண்டு, உடனடியாக மீட்பு நடவடிக்கையில் இறங்க வேண்டும். இல்லையேல் மொத்த சங்கிலியும் அறுபட்டு வீழ்ந்து விடும்.
இன்று சிட்டுக்குருவி; நாளை நம் சந்ததிகள்!
“இயற்கைச் சுற்றுச்சூழலின் சமன்நிலையை அறிவிப்பவை பறவைகள் தாம்; அவற்றுக்குக் கேடு எனில், நாமும் கூடிய விரைவில் சிக்கலுக்கு ஆளாகப் போகிறோம் என்று அர்த்தம்,” என்கிறார் பறவை ஆராய்ச்சியாளர் ரோஜர் டோரி பீட்டர்சன் .
சிட்டுக்குருவியைக் காப்பதால் எனக்கென்ன நேரடி நன்மை என்று ஒவ்வொன்றுக்கும் லாப நஷ்டம் கணக்குப் போட்டுப் பார்த்து உதவி செய்யுமளவுக்கு மனங்கள் குறுகிப்போன இந்நாளில், முன்னெப்போதும் இல்லாத அளவு, வாஸ்து சாஸ்திரம் மிகப் பிரபலமாயிருக்கிறது.
கீரைக்காரியிடம் ஒரு ரூபாய்க்கு ஒரு மணி நேரம், பேரம் பேசும் நம் மக்கள், வாஸ்துவுக்காக சீனா மூங்கிலை நூற்றைம்பது ரூபாய்(!) கொடுத்து வாங்கி வரவேற்பறையில் வைத்து அனுதினமும் அக்கறையாகக் கவனிக்கிறார்கள். இந்த மூங்கிலால் இவர்களுக்குப் பலன் கிடைக்கிறதோ இல்லையோ, சீனாக்காரனுக்குக் கண்டிப்பாகக் கிடைக்கிறது. அவனுக்குத் தான் நம் வாஸ்துவினால் கொண்டாட்டம்!
‘சிட்டுக்குருவி உங்கள் வீட்டில் கூடு கட்டிக் குஞ்சு பொரித்தால், ஒரே மாதத்தில் உழைக்காமல் கோடீசுவரன் ஆகி விடலாம்,’ என்று பிரபல வாஸ்து ஜோசியர் யாராவது சொன்னால் போதும்; அதற்குப் பிறகு நாம் சிட்டுக்குருவி தினம் அனுசரித்து, இப்படிப் புலம்பிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. வாஸ்து ஜோசியர் யாராவது மனம் வைக்க வேண்டும்!
http://www.citizensparrow.in/ என்ற தளம் 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிட்டுக்குருவியைப் பார்த்த இடங்களைப் பற்றிய தகவல்களை இணையத்தில் பதிவு செய்யுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. (நானும் கலந்து கொண்டு, எனக்குத் தெரிந்த தகவல்களை அளித்தேன்.)
8780 இடங்களிலிருந்து 5924 பேர் கலந்து கொண்டு அளித்த 11146 தகவல்களின் அடிப்படையில் இத்தளம், சிட்டுக்குருவி எங்கெங்கு இருக்கிறது, எங்கு இல்லை என்ற பட்டியலைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறது. மேற்கூறிய தளத்துக்குச் சென்றால் முழு விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
இப்போதும் கூட இத்தளத்தில் உங்கள் பெயரைப் பதிவு செய்து கொண்டு, உங்களூரில் சிட்டுக்குருவியைப் பார்த்த தகவல்களை அளித்து, இது பற்றிய கணக்கெடுப்புக்கு உங்களால் உதவ முடியும்:- இணைப்பு:- http://www.citizensparrow.in/இந்தச் சிட்டுக்குருவி தினத்தை வீட்டில், பள்ளியில் அலுவலகத்தில் எப்படியெல்லாம் கொண்டாடலாம் என்றறிய, இந்த இணைப்புக்குச் செல்லுங்கள்.- http://www.worldsparrowday.org/
சிட்டுக்குருவி கூடுகள், உணவளிப்பான் (Bird Feeder) போன்றவற்றை வாங்க:- http://www.save.natureforever.org/
(Bird Feeder க்கு தமிழ்ச்சொல் தெரியவில்லை; என் ஆக்கம் உணவளிப்பான்! யாருக்கேனும் சரியான சொல் தெரிந்தால் சொல்லுங்கள்)
முடிந்து போனதைப் பற்றி இனிப் பேசிப் பயனில்லை. ‘சிட்டுக்குருவியை அழிவிலிருந்து மீட்க, இனி நாம் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்கிறீர்களா?
இதை……இதைத் தான்…… நான் எதிர்பார்த்தேன்.
உங்கள் இதயத்தின் ஓரத்தில் இச்சிறு உயிர் பிழைக்க உதவி செய்ய வேண்டும் என்ற துளி ஈரமிருந்தால் போதும்; நிச்சயமாக இதற்கு உங்களால் உதவ முடியும்.
எப்படி என்று அடுத்த பதிவில் விளக்குவேன்.
கட்டுரையாளர் ஞா.கலையரசி வலைப்பதிவர், வங்கியில் பணியாற்றுகிறார்.
ஒரு மாலை நேரம் என் வயது அப்போது 10 Or 13 இருக்கும். என் அன்னையிடம் மின் விசிறியினை அனணைக்க கூக்குரலிட்டேன் தாமதமாக அணைத்தார்கள் அதற்குள் என் வீட்டின் பரனில் வசித்த சிட்டுக்குருவி மின்விசிறியில் அடிபட்டு மரணிக்க நேரிட்டதும் என் அம்மாவை நான் கண்டித்து சங்கடத்துடன் இரவு முழுதும் உணவருந்தாமல் அழுது உழன்றதை இந்த தினத்தில் நினைத்து இன்று எவ்வளவு சிட்டு குருவியின் வாழ்வு சுருங்கி போனதே…
எனக்கு இருகால்களும் போலியோவால் பாதிப்படைந்து விட்ட காரணம் இல்லையேல் நானே அன்று மின்விசிறியினை அனைத்து ஒரு சிட்டு குருவியை காத்திருப்பேன்…
மன்னிக்கவும் வருந்த நேரிட்டால்…
ஒரு சின்னஞ்சிறு உயிருக்காக இரவு முழுதும் சாப்பிடாமல் அழுது உழன்றதைப் படித்த போது மனம் மிகவும் நெகிழ்ந்துவிட்டது. கால்கள் பாதிக்கப்பட்டால் என்ன. உள்ளத்தால் நீங்கள் மிகவும் உயர்ந்து நிற்கிறீர்கள்!. எந்த பிரதிபலனும் பாராமல் உங்களைப் போல் இயற்கையை நேசிக்க நம் இளைய தலைமுறைக்குக் கற்றுக்கொடுக்கத் தவறிவிட்டோமோ என்று தோன்றுகிறது. உங்கள் அனுபவத்தை மனம் திறந்து பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி.
அருமையான கட்டுரை.
குருவிகள் இனம் பெருக வேண்டும் என்பதே என் ஆசையும். வெவ்வேறு ஊரில், நாட்டில் சிட்டுகுருவியை பார்க்கும் போது நம்மூரில் ஏன் இல்லை என்ற எண்ணம் தோன்றும். எங்கள் ஊரில் பலவித பறவைகள் இருக்கிறது. இன்னும் பழைய ஓட்டுவீடுகள் நிறைய உள்ளன ஆனாலும் சிட்டுக்குருவிகள் இல்லை.
அருமையான கட்டுரை என்ற பாராட்டியமைக்கும், சிட்டுக்குருவியைப் பற்றிய உங்கள் ஆதங்கத்தைப் பகிர்ந்தமைக்கும் மிகவும் நன்றி கோமதி!