கவிஞர் தாமரை
” The darkest places of hell are reserved for those who maintain their ‘neutrality’ in times of moral Crisis ” – Dante.
யார் பக்கம் நியாயம் என்று தெரிந்திருந்தும் ‘நடுநிலை’ வகிப்பவர்களுக்காகவே நரகத்தின் ஆக இருண்ட மூலைகள் ஒதுக்கப்படுகின்றன.
1993….. நான் என் பொறியாளர் பணியை விட்டு ‘தமிழுக்காகவும் தமிழ்ச் சமூகத்திற்காகவும் என்னையே அர்ப்பணித்துக் கொண்டேன். 20 ஆண்டுகளாக வேறு சிந்தனையே இல்லாமல் இதற்காகவே இயங்கினேன்….
2013….. என் மொழிப்பற்றும், இனப்பற்றும் தான் என் இன்றைய நிலைமைக்குக் காரணமோ என்று எண்ண வைத்து விட்டது…..
எந்த சமூகத்திற்காக உழைத்தேனோ, அந்த சமூகத்தின் முன் நியாயம் கேட்டு வர வேண்டி நேரிடுமோ என்று அஞ்சுகிறேன்….
இது என் சொந்த வாழ்க்கைப் பிரச்சினை அன்று…
பொதுவாழ்க்கையில் நேர்மை, தூய்மை, ஒழுக்கம், அறம் வேண்டி நிற்கிறேன்….
என் தோல்வி என்பது இவற்றின் தோல்வியே….
இந்தத் துன்பமான காலகட்டத்தில் என்னோடு துணை நிற்க வேண்டுகிறேன் ….”
— அப்போது என்ன சிக்கல், என்ன துயரம் என்று வெளியிடவில்லை. இப்போது எல்லோருக்கும் தெரிந்து வெளியிலும் வந்துவிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக என்ன நடந்திருக்கும், முதலில் ஏன் சொல்ல மறுத்தேன், பிறகு ஏன் வெளியில் வந்தேன் என்பதை ஓரளவு நீங்கள் யூகிக்கலாம்…
என் ‘ நியாயம் கோரும் ‘ போராட்டத்தின் ஐந்தாவது நாளில் வள்ளுவர் கோட்டம் என்ற பொது இடத்திற்கு மாறினேன். அங்குதான் முதன்முதலாகப் பதாகை வைத்தேன். அதற்கு முன் நான்கு நாட்களாக நடந்த என் போராட்டத்தில் எந்தத் தமிழ் / திராவிடத்தமிழ் அமைப்பும் வெளிப்படையாகத் தலையிடவில்லை. விசித்திரமான மௌனம் அது !!!!!!
பொதுமக்களுக்குத் தெரியும் வண்ணம் பொது இடத்தில் வந்து அமர்ந்த பின்பு ‘ தமிழ் உணர்வாளர்கள் ‘ மௌனம் கலைத்து ‘ப் பேச வேண்டும் என்ற நோக்கிலேயே வைக்கப்பட்டது.
1994 இல் முதல்முறையாக நான் தியாகுவைச் சந்தித்த போது அவர் ஜூ.விகடனில் ‘ சுவருக்குள் சித்திரங்கள் ‘ என்ற தொடரை எழுதி வந்தார். அதில் பெரிதும் கவரப்பட்டு, அதை ரசித்து, அவருக்கான கடிதத்தை ஜூ.விகடனுக்கு எழுதினேன் ( அப்போதும் அவர் சிறையிலிருந்துதான் அதை எழுதுகிறார் என்று நினைத்து ).
பிறகு அவரிடமிருந்து ‘ நான் சிறையில் இல்லை. விடுதலையாகி விட்டேன். அந்தத் தொடரை நானே என் சொந்த வார்த்தைகளால் வடிவமைத்து எழுதுகிறேன் ‘ என்று கடிதம் வந்த பிறகே உண்மையறிந்தேன். இப்படித்தான் ஆரம்பமானது நட்பு.
தியாகு ஒரு கொலைக்குற்றம் செய்து, 15 ஆண்டுகள் சிறையிலிருந்து வந்தவர். சமூகத்தின் பார்வையில் அவர் ஒரு கொலைக் குற்றவாளி !. என்னை சந்திக்கும் போது ஓர் அழுக்கு வேட்டி, அழுக்கு சட்டை, தேய்ந்து போன ரப்பர் செருப்பு, சாயம் போன தோள்பை , வயதான தோற்றம் !
கோவையில் ஒரு நல்ல, நடுத்தர வர்க்கத்து ஆசிரியர் குடும்பத்தில் பிறந்து, பொறியியல் படித்து, நல்ல வேலையில் இருந்த இளம்வயதுப் பெண் நான் !.
வேலை இல்லாத, வருமானம் இல்லாத, சொத்துக்கள் ஏதும் இல்லாத, எதிர்காலப் பாதுகாப்பு இல்லாத, தோற்றப் பொருத்தம் இல்லாத ஒருவரை நான் நேசிக்க என்ன காரணம் இருந்திருக்க முடியும் ?.
அவருடைய தமிழ் என்னைக் கவர்ந்தது. ‘சுவருக்குள் சித்திரங்கள்’ எழுத்தில் மட்டுமல்ல, நேரில் சந்தித்த பிறகு, மேடைகளில் பார்த்த பிறகு , அவருடைய பேச்சும்தான் !!!. தமிழை இப்படியெல்லாம் கூடப் பயன்படுத்த முடியுமா என்ற பிரமிப்புக்கே என்னைத் தள்ளி விட்டுவிட்டது.
அப்போதெல்லாம் நான் தமிழ்நாட்டில் எல்லோரையும் போல் ஆங்கிலம் கலந்த ‘தங்கிலீஷ்’ தான் பேசிக் கொண்டிருந்தேன். என்னுடைய கல்லூரி / பொறியாளர் பணியின் கொடை அது !. தியாகுதான் ‘ நல்ல தமிழில் பேசலாமே ? ‘ என்று ஆரம்பித்து வைத்தார். சில மாதங்களிலேயே ‘ திருந்தி ‘ விட்டேன்.
தாய்த்தமிழ்ப் பள்ளி நடத்துவதாகச் சொன்னார். உடனே 1000/- ரூபாய் நன்கொடை கொடுத்தேன்.. ’94 இல் 1000/- ரூ என்பது பெரிய தொகை. என் வீட்டின் ஒரு மாத வாடகை. அன்று கொடுக்க ஆரம்பித்தவள்தான், நவம்பர் 23, 2014 வீட்டை விட்டு ஓடும் கடைசி நாள் வரைக் கொடுத்திருக்கிறேன். இன்றும் வாடகை வீட்டில்தான் இருக்கிறேன் !.
அந்தக் காலகட்டத்தில் நான் அரசியல் மற்றும் திரைத்துறை பற்றி எதுவும் அறிந்திராத அல்லது புத்தகங்கள் மூலம் மட்டுமே அறிந்திருந்த, ஒரு சராசரி, அறிவுத்தாகம் கொண்ட குடும்பப்பெண் ! புத்தகப் புழு !.
அரசியல் என்றால் கட்சிகள், தேர்தல், பதவி இப்படித்தான் தெரியும். அவ்வளவு அரசியல் அப்பாவியான எனக்கு ‘ இயக்கம் ‘ என்ற சொல்லே புதிது !. இவர் முதன்முதலில் ‘தோழர்’ என்ற வார்த்தையைச் சொன்னபோது ‘க்ளுக்’ என்று சிரித்து விட்டேன். பேச்சுத்தமிழில் கூட ‘ தோழர் ‘ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள் என்று அப்போதுதான் முதன்முதலில் தெரிந்து கொண்டேன்.
தன் மனைவி லதாவைப் பற்றிக் குறிப்பிடும் போது, அவரோடு ‘முறித்துக்’ கொண்டதாகவும், ‘ தலித் அரசியல்/ சாதிமறுப்பு ‘ க்காகத்தான் அவரைத் திருமணம் செய்து கொண்டதாகவும் சொன்னார். அதை அவர் சொல்லும்போது , ‘தலித்’ என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது !. ‘சாதி’ என்பது சமூகத்தில் இவ்வளவு பெரிய மலைப்பாம்பு என்பதும் தெரியாது. இந்தியத் தேசியம், தமிழ்த்தேசியம் என்ற வார்த்தைகளெல்லாம் புதிதோ புதிது !! அவர் என்ன பேசினாலும் பிரமிப்போடு கேட்டுக் கொள்வேன். அவர் என்ன சொன்னாலும் அப்படியே நம்புவேன்.
இப்படித்தான் என் அரசியல் அறிவு ‘சுழியத்தில்’ இருந்து ஆரம்பமானது. நான் இன்றைக்கு என்ன அரசியல் பேசுகிறேனோ அவை அனைத்துக்கும் ஆரம்பம் தியாகுதான் !. என் தமிழ் ‘திருத்தப்பட்ட தமிழ்’ ஆனதற்கும் அவரே ஆரம்பம் !.
சில ஆண்டுகள் பேசிப்பேசிப்பேசி , பிறகு , ‘தான்தான் தமிழ்நாட்டின் பிரபாகரன், தன்னால்தான் தமிழ்நாடு மீட்டெடுக்கப்படும்’ என்ற அவரது அரசியல் அலைவரிசையை நம்ப ஆரம்பித்தேன். நம்பியதோடு அதை அப்படியே மறு ஒலிபரப்புச் செய்யும் கொ.ப. செ ஆனேன். ‘நான் கார்ல் மார்க்சின் மறுபிறவி’ என்பார். நான் மறுபிறவிகளை நம்பத் தலைப்படுவேன். மார்க்ஸ் யாரென்றே அப்போது எனக்குத் தெரியாது ! . எங்கெல்சின் எதிர் வீடு தானென்பார்….. நான் வீடு மாறத் தயாராகி விடுவேன்..
ஒரு கொலைக்குற்றவாளியை , அரசியல் தெரியாத, ஒரு சாதாரணமான , மரியாதையான குடும்பத்திற்குள் எவரேனும் அனுமதிப்பார்களா ? அனுமதித்ததோடு, என்னைப் பெண்கேட்டுத் திருமணம் செய்யும் வரை போனதற்கு வேறென்ன காரணம் இருக்க முடியும் ?.
தியாகு என்னோடு பழகிய போது, ‘ நீ அழகாயிருக்கிறாய், நானும் அழகாயிருக்கிறேன், இருவரும் டூயட் பாடலாம் வா என்று அழைக்கவில்லை, நீ நன்றாகப் பேசுகிறாய் , நானும் நன்றாகப் பேசுகிறேன், இருவரும் பொழுதுபோக்குப் பட்டிமன்றம் நடத்திப் பிழைத்துக் கொள்ளலாம் வா என்று அழைக்கவில்லை, நீயும் தமிழ்ப் பற்றாளர் , நானும் தமிழ்பற்றாளர் , இருவரும் தமிழ்ச் சமூகத்திற்காகப் பாடுபடலாம் வா ‘ என்றுதான் அழைத்தார்.
என்னுடை ய தமிழ்ப்பற்றுதான் தியாகுவை வீட்டிற்குள் அனுமதித்தது, என்னுடைய தமிழ்ப்பற்றுதான் தியாகுவைக் கண்மூடித்தனமாக நம்ப வைத்தது, என்னுடைய தமிழ்ப்பற்றுதான் அவரைத் திருமணம் செய்து கொள்ள வைத்தது……..
இப்படி யோசித்துப் பாருங்கள்… என் தகுதிகள் கொண்ட ஓர் இளம்பெண், தமிழ்ப்பற்றில்லாதவள் என்று வைத்துக் கொள்ளுங்கள், தியாகுவைத் திரும்பியேனும் பார்த்திருக்க வாய்ப்புண்டா ?????.
சுருக்கமாகச் சொன்னால், He tricked me into loving him….. is the right statement to make here.
‘ புதிய பறவை ‘ திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் ஒரு வசனம் வரும். ஏமாந்து, மாட்டிக் கொள்ளும் சிவாஜி, சரோஜா தேவியைப் பார்த்து இப்படிச் சொல்வார் :
” பரிதாபத்திற்குரிய என் வாழ்க்கையில் படையெடுக்க உன் கைக்குக் கிடைச்சது காதல்ங்கற அந்தப் புனிதமான மலர்தானா ?? அதை வச்சா நீ என்னை வீழ்த்திட்டே….? ”
தியாகுவின் கைக்குக் கிடைத்தது ‘தமிழ்’ என்னும் புனிதமான மலர். ‘தமிழ்’ என்னும் ஆயுதத்தை வைத்துதான் என்னை வீழ்த்தினார். ‘தமிழ்’ தவிர வேறெதைக் கொண்டும் என்னை நெருங்கியிருக்க முடியாது. இந்த என் தமிழ்ப்பற்றும், அவரோடு சேர்ந்து தமிழினத்துக்குப் பணியாற்றலாம் என்கிற இனப்பற்றும் தாம் இன்று நான் ‘ தெருவுக்கு ‘ வந்ததற்குக் காரணம்.
(தொடரும்)
நம் பிரச்சினை நான்கு பேருக்குத் தெரிந்தால் நமக்குத் தான் அவமானம் என்று பிரச்சினைகளை நான்கு சுவர்களுக்குள் மறைத்து வைத்துக் கொண்டு வாழ்நாட் முழுக்கத் துன்பம் அனுபவிக்கும் பெரும்பாலான பெண்களுக்கு மத்தியில் தாமரை வித்தியாசமானவராய்த் தெரிகிறார். அவருடைய துணிச்சலைப் பாராட்டியே தீர வேண்டும். தெருவில் இறங்கும் போராடும் அவருக்கு மாதர் சங்கங்கள் கண்டிப்பாக உதவிக்கரம் நீட்டி ஆதரவு கொடுக்க வேண்டும்.