அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி, ஆன்மீகம், இன்றைய முதன்மை செய்திகள்

சமணர்களின் கடுமையான துறவறம்!

 

சமணமும் தமிழும் – 4

அறிஞர் சீனி. வெங்கடசாமி

சமணமுனிவர் ஒழுக்கம்

வாழ்க்கையை இல்லறம் துறவறம் என்று சமணர் இரண்டுவிதமாகப் பிரித்துள்ளனர். இவ்விரண்டினையும் முறையே சாவக (சிராவக) தர்மம், யதிதர்மம் என்றுங் கூறுவர். இல்லறம் எனப்படும் சாவக தர்மம், மனைவி மக்கள் சுற்றத்தாருடன் இருந்து ஒழுகும் ஒழுக்கம். துறவறமாகிய யதிதர்மம், உலகத்தைத் துறந்து வீடுபேற்றினைக் கருதித் தவஞ் செய்யும் முனிவரது ஒழுக்கம். சமண சமய ஆராய்ச்சிக்கு, யதிகர்மம் எனப்படும் சமண முனிவர் ஒழுக்கத்தை அறியவேண்டுவது இன்றியமையாததாதலின், அதனைச் சுருக்கமாக ஈண்டு விளக்குவாம்.
பிறவியை நீக்கி, வீடுபேறு பெறுவதை நோக்கமாகக் கொண்டு, உலகத்தைத் துறக்கும் சமண முனிவர் தமது துறவற வாழ்க்கையில் மேற்கொண்டொழுக வேண்டிய ஒழுக்கங்கள் இருபத்தெட்டாகும். இவ்விருபத்தெட்டினையும் மூலகுணங்கள் என்பர்.

அவையாவன:- மாவிரதங்கள் ஐந்து; சமிதி ஐந்து; ஐம்பொறி அடக்கம் ஐந்து; ஆவஸ்யகம் ஆறு; லோசம்; திகம்பரம், நீராடாமை, பல்தேய்க்காமை, தரையிற்படுத்தல், நின்று உண்ணல், ஒரே வேளை உண்ணல் ஆக இருபத்தெட்டாம். இவற்றைச் சுருக்கமாக …

மாவிரதங்கள் ஐந்து: 1. அகிம்சை, 2. வாய்மை, 3. கள்ளாமை, 4. துறவு, 5. அவாவறுத்தல் என்பன. துறவு பெறும் சமண முனிவர் இவ்வைந்து மாவிரதங்களையும் தவறாமல் மேற்கொண்டொழுக வேண்டும்.

1. அகிம்சை : ‘‘அகிம்சா பரமோ தர்ம’’ என்பது சமணரின் அடிப்படையான தர்மம். இன்னா செய்யாமை, அருளுடைமை, கொல்லாமை, புலால் மறுத்தல் ஆகிய இந்நான்கும் ஒன்று சேர்ந்ததே அகிம்சை என்பது, ‘‘ஓரறிவுயிர் முதலாக ஐயறிவுயிர் ஈறாக, அவை சிறியனவாயினும் பெரியனவாயினும், அவற்றைக் கொல்ல மாட்டேன்; கொல்லச் சொல்லவும் மாட்டேன்; கொல்ல நினைக்கவு மாட்டேன்; மற்றவர் கொல்வதற்கும் மனம் மொழி மெய்களால் உடன்படவும் மாட்டேன்’’, என்று உறுதி கூறிச் சமண முனிவர் அகிம்சா விரதத்தை மேற்கொள்கிறார்.

2. வாய்மை : அஃதாவது பொய்யாமை. ‘‘பொய்யாமையாவது, தீமை பயக்கும் சொற்களைக் கூறாமை’’ என்றார் சமணராகிய இளம்பூரண அடிகள். சமணசமயக் கொள்கையின்படி, வாய்மை என்பது, மேற்கூறிய அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது. ஒருவன் ஓர் உயிரைக் கொல்லத் துணிவானாயின், அவ்வமயம் பொய் சொல்லியாகிலுங் கொலையினின்றும் அவ்வுயிரைக் காப்பாற்ற வேண்டியது, சமணத் துறவியின் கடமையாகும். ஓர் உயிரைக் காப்பாற்றப் பொய் சொல்லுவது வாய்மையினுள் அடங்கும் என்பது சமணரின் ஓத்து. இக்காரியத்துக்காக மட்டும் பொய் சொல்லலாமே தவிர மற்றப்படி சமணத் துறவிகள் சிறிதும் பொய் பேசக்கூடாது என்பதும், மனம் மொழி மெய்களால் மெய்பேசுவதை மேற்கொண்டொழுக வேண்டும் என்பதும் சமண சமயக் கொள்கையாகும். வாய்மையைப் பற்றி நீலகேசி (மொக்கல. 60ஆம் செய்யுள்.) உரையில் கூறப்பட்ட செய்தி ஈண்டுக் குறிப்பிடத்தக்கது:
‘‘என்னை?
‘பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்’(குறள். 292)
என்பது எம் (சமணரின்) ஓத்தாதலால், பிராணி பீடா நிவர்த்தியார்த்த மாகப் பொய்யுரைத்தலும் ஆவதாகலின் என்பது…………………ஆகலின் நன்மை பயக்கச் சொல்லும் பொய் குற்றமன்றென்பது’’
‘‘நான் எப்பொழுதும் மெய்ம்மையே பேசுவேன்; ஒரு போதும் பொய் பேசமாட்டேன்; பிறர் பொய் பேசுவதை உடன்படமாட்டேன்; பிறரைப் பொய் பேசத் தூண்டவும் மாட்டேன்; மனம் மொழி மெய்களால் முக்காலங்களிலும் மெய்ம்மையே பேசுவேன்,’’ என்று உறுதி கூறி ஆருகத முனிவர் வாய்மை என்னும் விரதத்தை மேற்கொள்கிறார்.

3. கள்ளாமை: எவ்வளவு அற்பமான பொருளாயிருந்தாலும், அதனை அதற்குரியவர் கொடுத்தாலன்றி, எடுத்துக்கொள்ள மனத்தினாலும் நினையாதிருத்தல். ‘‘நாட்டிலாயினும் காட்டிலா யினும் கிராமத்திலாயினும் நகரத்திலாயினும் பிறர்க்குரிய பொருளை – அஃது அற்பமானதாக இருந்தாலும் விலைமதிக்கத் தக்கதாயிருந்தாலும், உயிருள்ள தாயிருந்தாலும் உயிரற்றதாயிருந்தாலும்-, அதற்குரியவர் கொடுத்தாலன்றி அதனை  எடுத்துக் கொள்ளமாட்டேன்; பிறர் எடுத்துக்கொள்ளவும் உடன்படமாட்டேன். மனம் மொழி மெய்களால் கள்ளாமையை மேற்கொள்கிறேன்’’ என்று உறுதி கூறிச் சமண  முனிவர் இந்த மூன்றாவது விரதத்தை மேற்கொள்கிறார்.

4. பிரமசரியம்: அஃதாவது புணர்ச்சி விழையாமை. சிற்றின்பத்தை மனம் வாக்குக்  காயங்களால், செய்யாதிருத்தல்.
‘‘தெய்வங்களுடனாவது மனிதர்களுடனாவது விலங்குகளுடனாவது இணைவிழைச்சாகிய சிற்றின்பத்தைத் துய்க்க மாட்டேன்; இதனை மனம் மொழி மெய்களால் முக்காலத்திலும் செய்யாதிருக்க உறுதி கூறுகிறேன்’’ என்று கூறிச் சமணத் துறவி இந்த நான்காவது மாவிரதத்தை மேற்கொள்கிறார்.

5. அவாவறுத்தல்: அஃதாவது முற்றத் துறத்தல். ‘‘துறத்தலாவது தன்னுடைய பொருளைப் பற்றறத் துறத்தல்’’ என்றார் சமணராகிய இளம்பூரண அடிகள். இதனைப் ‘பரிக்கிரகத் தியாகம்’ என்பர்.
‘‘அவாவென்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து’’                   (குறள்: 461)
என்றபடி, அவாவினால் மேன்மேலும் வினைகள் ஏற்பட்டு, அவற்றால் பிறப் பிறப்பாகிய சம்சாரம் உண்டாகும். ஆகையால், பிறப்பறுக்கத் துணிந்த துறவி அவா வறுத்தல் வேண்டும்.
‘‘உயிருள்ள பொருளாயிருந்தாலும் உயிரற்ற பொருளாயிருந்தாலும் சிறியதாயினும் பெரியதாயினும் எல்லாப் பொருள்களையும் துறந்து அவற்றின் தொடர்பை நீக்கிக் கொள்கிறேன்; இதனை மனம் மொழி மெய்களால் முக்காலத்திலும் செய்ய உறுதி கூறுகிறேன்’’, என்று கூறி இந்த ஐந்தாவது மாவிரதத்தைச் சமண முனிவர் மேற்கொள்கிறார்.
இந்த ஐந்து மாவிரதங்களைப் பற்றிச் சமண நூல்களில் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது:
‘‘ஐவகைப் பொறியும் வாட்டி, ஆமையின் அடங்கி, ஐந்தின்
மெய்வகை தெரியுஞ் சிந்தை விளக்கும் நின்றெரிய விட்டுப்
பொய் கொலை களவு காமம் அவா இருள் புகாது போற்றிச்
செய்தவம் நுனித்த சீலக் கனைகதிர்த் திங்கள் ஒப்பார்’’
(சிந்தாமணி, 2834)
‘‘கோறல் பொய்த்தல் கொடுங்களவு நீக்கிப்
பிறர்ம னைகள்மேல்
சேற லின்றிச் செழும்பொருண்மேல் சென்ற சிந்தை
வேட்கையினை
ஆறுகிற்பின் அமருலகம் நுங்கட் கடிய தாமென்றான்
நீறும் ஓடும் நிழன்மணியும் பொன்னும் நிகரா
நோக்குவான்.’’ (நீலகேசி, 40.)

சமிதிகள் ஐந்து : 1. இரியை, 2. பாஷை, 3. ஏஷணை, 4. ஆதான நி«க்ஷபனை, 5. உத்சர்க்கம் என்பன. இவற்றை விளக்குவோம்:

1. இரியா சமிதி: சமணத்துறவி, நடக்கும்போது தரையை மூன்றுமுழ தூரம் பார்த்துப் புழுப்பூச்சிகள் இருந்தால் அவற்றை மிதிக்காமல் நடத்தல் வேண்டும். ‘‘நூற்கதிகொண்டு கண்ணால் நுகத்தளவெல்லை நோக்கி,’’ நடக்கவேண்டும் என்றார் சிந்தாமணி ஆசிரியர். கொல்லா நோன்பை அடிப்படையாகக் கொண்டவர் ஆதலால் எறும்பு, புழு, பூச்சி முதலிய  சிற்றுயிர்களும், நடக்கும் போது காலினால் மிதிபட்டிறவாதபடி விழிப்பாகத் தரையைப் பார்த்துச் சமணத் துறவி நடக்க வேண்டும். இது பற்றியே அவர் இராக்காலங்களில் பிரயாணம் செய்யார். வழியில் உள்ள சிற்றுயிர்கள் காலில் மிதிபடாதபடி ஒதுக்குவதற்காக மயிற்பீலிக் குஞ்சத்தை அவர் கையில் வைத்திருப்பார். இதுவே இரியா சமிதி எனப்படும்.

2. பாஷா சமிதி: நாவடக்கம் அல்லது வாக்கடக்கம், பழித்துப் பேசுதல், புகழ்ந்து பேசுதல், கோபமாகப் பேசுதல், கடுஞ்சொற்கூறல் முதலிய பேச்சுக்களை நீக்கி இனிமையாகப் பேசுவதையும், தரும ஒழுக்கம் சமயக் கொள்கை இவற்றைப் போதிப்பதையும் துறவி தமக்கு ஒழுக்கமாகக் கொள்வது பாஷா சமிதி எனப்படும்.

3. ஏஷணா சமிதி: நாற்பத்தாறுவகையான குற்றங்கள் இல்லாத உணவைச் சமணத் துறவி யாசித்துப்பெற்று அதிகமாக உண்ணாமல் அளவாக உண்ணுதல் ஏஷணா சமிதியாகும். உணவின் நாற்பத்தாறுவகைக் குற்றங்களைச் சமண நூல்களில் கண்டுகொள்க.

4. ஆதான நி«க்ஷபனா சமிதி: சமண முனிவருக்குரிய நூல் (புத்தகம்), குஞ்சம் (மயிற்பீலி), கமண்டலம் என்னும் இப்பொருள்களை எடுக்கும்போதும் வைக்கும் போதும் எறும்பு முதலிய சிற்றுயிர்கள் இறந்துபோகாதபடி விழிப்போடு இருந்து பைய எடுத்தலும் பைய வைத்தலுமாம்.

5. உத்சர்க்க சமிதி: சமணத் துறவி மலமூத்திரங்கழிக்கும்போது, ஊருக்கு அப்பால், ஒருவரும் நடமாடாததும் பாராததுமான இடத்தில் கழிக்கவேண்டும். அன்றியும் புழு பூச்சிகள் உள்ள இடங்களிலும் வளை முதலியவையுள்ள இடங்களிலும் கழிக்கக் கூடாது.

ஐம்பொறி அடக்கம்: ஐம்பொறிகளின் வாயிலாகவே நல்வினை தீவினைகள் உயிரைப் பற்றிப் பிணித்து, அதனைப் பிறப்பு இறப்புகளிற் செலுத்துகிறபடியால் ஐம்பொறிகளை அடக்க வேண்டுவது துறவிகள் கடமை. நாட்டியம், நடனம் முதலிய காட்சிகளைக் காண்பதும், பாட்டு,யாழ், வீணை முதலிய இசைகளைக் கேட்பதும், சந்தனம், பூ முதலியவற்றின் நறுமணங்களை முகர்வதும், அறுசுவையுணவுகளை உண்பதும், ஊறு என்னும் புலனுக்கு  இன்பமளிக்கிற பொருள்களைத் தொடுதல் தேய்த்தல் முதலியவற்றைச் செய்வதும் ஆகிய ஐம்புலநுகர்ச்சியை மனம் மொழி மெய்களாலும் நீக்குதல் ஐம்பொறியடக்கம் எனப்படும். தீர்த்தங்கரர், அருகர் முதலிய கடவுளர்களின் தோத்திரப் பாக்களைப் பாடும் இசைப்பாட்டு முதலியவற்றைக் கேட்பது, அவர்களின் சரித்திரங்களை நாடகங்களில் காண்பது முதலியவை கடவுட்பற்றுக்குக் காரணம் ஆகையால் அத்தகையவற்றைச் சமண முனிவர் ஐம்பொறி களாலும் துய்க்கலாம். ஆனால், சிற்றின்பத்திற் செலுத்தக்கூடிய ஐம்பொறி இன்பங்களை மட்டும் அடக்கவேண்டும்.
‘‘மெய்வாய்கண் மூக்குச் செவிஎனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினை – கைவாய்
கலங்காமல் காத்துய்க்கும் ஆற்றல் உடையான்
வலங்காது வீடு பெறும்.’’
என்பது நாலடி நானூறு என்னும் சமண நூல்.

jainism

ஆவஸ்யகம் ஆறு: இவை ஷடாவஸ்யக்கிரியை எனப்படும். அவையாவன:
1. சாமயிகம். 2. துதி. 3. வணக்கம். 4. பிரதி கிர்மணம். 5. கழுவாய். 6. விசர்க்கம் என்பன.
இவற்றின் விளக்கம் வருமாறு:
1. சாமயிகம்:
இன்ப துன்பம், நன்மை தீமை, உயர்வு தாழ்வு முதலியவற்றை ஒரு தன்மையாக (சமமாகப்) பார்த்தல்.
2. துதி:
இருஷபர் முதலிய இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களையும் அருகப் பரமேட்டியையும் போற்றித் துதித்தல்.
3. வணக்கம்:
அருகர், சித்தர், தீர்த்தங்கரர் முதலியவர்களின் திருவுருவங்களையும், சாத்திரங்களைக் கற்ற தபசிகளையும், தீ¬க்ஷ கொடுத்த குருக்களையும், பெரியோர்களையும் மனம் வாக்குக் காயங்களினால் வணங்குதல்.
4. பிரதிகிர்மணம்:
பாவத்திற்குக் காரணமானவை தன்னிடத்தில் மனம் வாக்குக் காயங்களினால் நேராதபடி காத்துக் கொள்ளுதல்.
5. கழுவாய்:
அஃதாவது பிராயச்சித்தம். சமண முனிவர் தமது விரதத்தில் ஏதேனும் குற்றம் நேர்ந்துவிட்டால், அதனையுணர்ந்து வருந்தி மனம் மொழி மெய்களால் தம்மையே நொந்துகொண்டு அக்குற்றத்தைக் கழுவுதல்.
‘‘ஒன்றியும் ஒன்றாதும் தான்செய்த தீவினையை
நின்று நினைத்திரங்கற் பாற்று.’’
‘‘தீயவை எல்லாம் இனிச்செய்யேன் என்றடங்கித்
தூயவழி நிற்றலும் அற்று’’             (அருங்கலச் செப்பு.)
6. விசர்க்கம்:
காயோத்ஸர்க்கம் எனவும் கூறுவர். தவம் செய்யும்போது வரும் துன்பங்களை அஞ்சாமல் பொறுத்தல். வாளும் உறையும்போல உடலும் உயிரும் வேறு வேறு என்பதை உணர்ந்து, தமது உடம்பையும் தமது என்று கருதாமல் யாக்கையிற் பற்றறுத்தல்.
‘‘பிறப்பறுக்க லுற்றார்க்கு உடம்பும் மிகை’’ என்று கருதி உடற்பற்றையும் நீக்கித் துறவின் உயர்நிலையையடைந்த சமண முனிவர், தாம் துறந்த தமது உடலினை எவ்வாறு வைக்கவேண்டும் என்பதைக் கூறுவதுதான் கீழ் வரும் ஏழு ஒழுக்கங்கள். அவையாவன. 1. லோசம், 2. திகம்பரம், 3. நீராடாமை, 4. தரையிற் படுத்தல், 5. பல்தேய்க்காமை, 6. நின்று உண்ணல், 7. ஏகபுக்தம் என்பன. இவற்றை விளக்குவாம்.

1. லோசம்: அஃதாவது மயிர் களைதல், சமண முனிவர் துறவுகொள்வதற்கு முன்னர்த் தீ¬க்ஷபெறுவர். தலைமயிரைக் களைவது தீ¬க்ஷயில் இன்றியமையாதது. தலை மயிரைக் கத்தியால் மழிக்காமல் கையினால் பிடுங்கிக் களையவேண்டும். மீண்டும் மயிர் வளரும்போதெல்லாம் அவ்வப்போது பிடுங்கிக் களையவேண்டும். இதனைச்செய்யும் நாட்களில் பட்டினி நோன்பிருக்கவேண்டும். இவ்வாறு மயிர் களையும்போது தேகத்தில் உண்டாகும் பொறுத்தற்கரிய பெரிய வலிமையப் பொறுத்துக்கொள்வது, சமணத் துறவியின் துன்பத்தைப் பொறுத்துக்கொள்ளும் ஆற்றலையும் மனவலிமையையும் தேகத்தின்மேல் பற்றின்மையையும் காட்டுகிறது.

2. திகம்பரம்: அஃதாவது நிர்வாணமாக இருத்தல். நகை முதலியவற்றை நீக்கித் துணி, தோல், மரவுரி, இலை முதலியவற்றாலும் உடலை மூடாமல் திகம்பரமாக (ஆகாயமே உடையாக) இருத்தல். ‘‘பிறப்பறுக்க லுற்றார்க்கு உடம்பும் மிகை’’ எனக் கண்டு தமது உடலையும் தமதன்று என உடற்பற்றையும் நீங்கிய சமணமுனிவர், அதுதொடர்பான உடை உடுத்தல் முதலியவற்றையும் நீக்கி முழுத்துறவு கொள்வர். அன்றியும், வெயிலின் வெம்மையும் குளிரின் தண்மையும் தேகத்தில்பட்டால் அவற்றையும் பொறுத்துக் கொள்வதும், எறும்பு கொசுகு முதலியவை கடித்தால் அத் துன்பங்களையும் தாங்கிக் கொள்வதும் உடம்பு தமதன்று எனத் துணிந்த சமணமுனிவரின் கடமையாகும்.

3. நீராடாமை: துறவு நிலையின் உயர்ந்தபடியிற் சென்று உடம்பும் தமதல்லவென்று துறந்து அதற்கு உடையுடுத்துவதும் பற்றுக்குக் காரணமாகும் என்று கருதித் திகம்பர நிலையை மேற்கொண்ட சமண முனிவர் உடம்பில் உண்டாகும் வியர்வை அழுக்கு முதலியவற்றைக் கழுவிப் போற்றமாட்டார். நீராடிச் செய்யும் புறத்தூய்மையைவிட அகத் தூய்மையே சிறந்ததெனக் கருதுவர் சமண முனிவர். இதுபற்றி நீலகேசி உரையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ‘இந்திரிய ஜயார்த்தமாக அஸ்நான (நீராடாமை) விரதங்கொண்டதல்லது யாங்கள் சரீரத்து மலமாக்க வேண்டுமென்று சொல்லியதூஉம் செய்ததூஉம் இல்லை’’ (மொக்கல. 318 ஆம் பாட்டுரை).
‘‘செற்றம்விட்டார் திருமேனியெல்லாம் மாசுவிம்ம
வற்றவிட்டார் …. நம்தொழு தெய்வமே’’
என்பது திருநூற்றந்தாதி.
சமண முனிவர் நீராடாமைக்கு இன்னொரு காரணமும் இருக்கக்கூடும். நீரில் மிகச் சிறிய கண்ணுக்குப் புலப்படாத உயிர்கள் உள்ளன என்பது சமண மதக்கொள்கை. சிற்றுயிரையும் கொல்லாத அகிம்சா விரதத்தை முதன்மையாகக் கொண்ட சமண முனிவர், உடற்றூய்மைக்காக நீராடினால் அந்நீரில் உள்ள நுண்ணுயிர்கள் ஊறுபட்டு இறந்துபடும் என்றஞ்சிப்போலும் அவர் நீராடாதொழிந்தது எனக் கருதுவதும் பொருந்தும். நீரில் உயிர் அணுக்கள் உள்ளமை பற்றியே சமணமுனிவர் நீருண்ணும்போது ஏழுமுறை வடிகட்டிய பின்னர்க் குடிக்கவேண்டும் என்னும் ஒழுக்கத்தைச் சட்டமாக வைத்துள்ளனர்.

4. தரையிற் படுத்தல்: பாய் படுக்கைகளின்றித் தரையின்மீது படுத்து உறங்கும்போது கல் மண் உறுத்துவதனால் உண்டாகும் வேதனைகளைப் பொறுத்தல். படுக்கும்போது இடது அல்லது வலது பக்கமாகப் படுக்க வேண்டும் என்பதும், குப்புறப் படுப்பதும் மல்லாந்து படுப்பதும் கூடாது என்பதும் கட்டளை. எறும்பு, புழு, பூச்சிகள் நசுங்கி இறவாதபடி அவை இல்லாத இடங்களில் படுக்கவேண்டும்.

5. பல் தேய்க்காமை: உடம்பும் மிகை என்று தமது உடம்பையுந் துறந்த சமண முனிவர் பல் தேய்த்துச் சுத்தம் செய்யார். அப்படிச் செய்வது, தாம் புறக்கணித்துவிட்ட உடம்பின்மீது மீண்டும் பற்றினை உண்டாக்கும் எனக் கருதுவர். இதனால், அவர்கள் தமது உடலையுங்கூட எவ்வளவு திடமாகப் புறக்கணித்தனர் என்பது அறியப்படும்.

6. நின்று உண்ணல்: சமண முனிவர், நின்றபடியே உணவை உட்கொள்ளவேண்டும். இலை முதலிய உண்கலங்களில் உண்ணாமல் கையில் வாங்கிப் புசிக்க வேண்டும். தமது அன்று என்று உடற்பற்றினையும் நீக்கிவிட்ட அவர்கள், அதற்குச் சுகங்கொடுத்து ஆசனத்தில் அமர்ந்து உண்கலத்தில் உண்பது அதனிடத்துப் பற்றுக் கொண்டு அதனைப் போற்றி வளர்ப்பதற்குக் காரணம் ஆகும் எனக் கருதி, இவ்வாறு நின்றவண்ணமே கையில் உண்பர்.

7. ஏக புக்தம்: ஒரு நாளைக்கு ஒரே வேளை, உண்ணுதல், சமண முனிவர்களில் சிலர் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, மூன்று நாட்களுக்கு ஒருமுறை உண்ணும் விரதத்தையும் கொண்டிருந்தனர். எட்டு நாட்களுக்கு ஒரு முறை உணவுகொண்ட அட்டோபவாசிகள் சாசனங்களில் கூறப்படுகின்றனர். சூரியன் புறப்பட்ட மூன்று நாழிகைக்குப் பின்னரும், சூரியன் மறைவதற்கு மூன்று நாழிகைக்கு முன்னரும், அஃதாவது, பகல் நேரத்திலேயே சமண முனிவர் ஒருவேளை உணவு கொள்ளவேண்டும்.
இதுகாறும், கூறிய இவையே சமண முனிவர் கைக் கொண்டொழுகவேண்டிய இருபத்தெட்டு மூல குணங்களாகும்.

சமண முனிவர் உடற்பற்றினைக் குறைத்துச் சக்திக்குத் தக்கபடி நோன்பிருந்தனர். இப்படிச் செய்வதை அளவுக்கு மிஞ்சிச் செய்யாமல் தமது உடல் நிலைக்கு ஏற்றபடி செய்துவந்தனர். சமணரைக் ‘‘கடுநோன்பிகள்’’ என்று ஏனைய சமயத்தவர் குறைகூறியதற்கு விடையாக, நீலகேசி என்னும் சமண நூலில் கீழ்க்கண்ட செய்தி கூறப்படுகிறது.
‘‘யாங்கள் (சமணர்) கொலை முதலாகிய பாவநிவர்த்தி யார்த்தமாக சக்திக்குத் தக்கவாறு அனசனாதிகள் (உண்ணாவிரதம் முதலியன) செய்து விஷயாநுபவம் (இன்ப நுகர்ச்சி) துறந்தனம். ………..யாங்கள் பலகாலுண்ணவும் குளிக்கவும் தாம்பூல சேவை முதலாயின பண்ணவும் புகுவோமாகில் ஆர்ஜன ரக்ஷணாதி (ஆக்கல் காத்தல் முதலிய) வியாபாரங்களால் கொலை முதலாயின பாவங்களும் ஞானத்தியான விக்கினங்களுமாதலின், ‘‘சக்தி தத்ஸ தியாக தபஸி’’ (சக்திக்குத் தக்கபடி கொடையுந் தபசும்) என்பது எம்மோத்தாகலின், சத்தியை அதிக்கிரமித்து அநசனாதிகள் செய்வதுமில்லை. வெயினிலை முதலாயினவும் வனசரராய் நின்று சகல வியாபாரங்களும் துறந்து ஒருவழி நிற்றல் இருத்தல் செய்து ஞான தியானங்கள் பயில்வுழி வெயிலும் மழையும் காற்றும் முதலாயின வந்தால் அவற்றைச் சக்திக்குத் தக்கவாறு பொறுத்தாம். என்னை?
‘‘உற்ற நோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு.’’                  (குறள். 241)
என்பது எம்மோத்தாகலின், தாமே வந்தன பொறுத்த லல்லது வெயில் முதலாயினவற்றுள் வருந்துதலே தவமென்று சொன்னோமோ? இல்வாழ்க்கைக்கண் நின்றாரும் இல்வாழ்க்கைக் காரியங்களுள் ஒன்று செய்வுழி அழிந்த காரியங்கள் துறந்து கிருஷி முதலாயின செய்ய, அவ்வழி வந்த வெயில் முதலாயினவும் சக்திக்குத் தக்கவாறு பொறுப்பதற்காகக் காயம் வருந்தினாராவரோ?’’ (மொக்கல, 87ஆம் பாட்டின் உரை)

இதுகாறும் கூறிய இவை யதிகர்மம் ஆகும். அஃதாவது சமணசமயத் துறவிகள் ஒழுகவேண்டிய முறையாகும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.