இதென்ன விநோதமான தலைப்பு என அம்மாக்கள்(அப்பாக்களும்கூட) கேட்கமாட்டீர்கள் என நம்புகிறேன். ஏனெனில் பாக்கெட்டில் அடைபட்ட உருளைக்கிழங்கு சிப்ஸை நொறுக்கும் குழந்தைகள், சத்துமிக்க வடையை விரும்புவதில்லை. கருவேப்பிலை இருக்கிறது, வெங்காயம் இருக்கிறது என குழந்தைகள் ஒரு வாய்க்குக்கூட சாப்பிடுவதில்லை. என் மகனும் அப்படியே… ஒரு முறை வடை மாவை அரைத்துவிட்டு, கருவேப்பிலை, வெங்காயம் இன்னபிற பொருட்களை சேர்ப்பதற்கு பதிலாக பருப்புடன் இவறைச் சேர்த்து அரைத்து வடை சுட்டேன். பிரமாதமாக வந்தது. மகன் விரும்பி சாப்பிடுகிறான். எனக்கும்கூட இந்த வடை மிகவும் பிடித்துப் போனது. நான் எல்லா பருப்புகளையும் கலந்து செய்வேன்.
கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, மசூர் பருப்பு இவற்றை கூட குறைய சேர்த்து 2 மணி நேரம் ஊற வையுங்கள். ஊற வைத்த பருப்புடன் கருவேப்பிலை, வெங்காயம், பூண்டு, கொத்தமல்லித் தழை, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் மாவில் வடைகளைத் தட்டி மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்.
எளிதாகச் செய்யக்கூடிய மாலை நேர சிற்றுண்டி இது!