இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

இது குழந்தைகளின் தேர்வு காலம்: பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய 10 கருத்துகள்!

செல்வ களஞ்சியமே87

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி நாராயணன்
ரஞ்சனி நாராயணன்

கோடை வந்துவிட்டது. கோடையின் சூட்டுடன் சுருதி சேர்க்க மின்வெட்டு. இவை இரண்டுடன் கைகோர்த்து வருவது தேர்வு ஜுரம். இந்த ஜுரம் பெரியவர்களையும் குழந்தைகளையும் சேர்த்து ஆட்டிப் படைக்கும். நன்றாகப் படிக்கும் குழந்தைகளையும் பெரியவர்கள் படி படி என்று சொல்லி சொல்லி ஒரு வழி செய்துவிடுவார்கள். இன்றைக்குப் படித்தால் நாளை நன்றாக இருக்கலாம்’ என்று பாசிடிவ் ஆகச் சொல்லும் பெற்றோர்கள் முதல் ‘மாடு மேய்க்கத்தான் லாயக்கு’ என்று நெகடிவ் ஆகச் சொல்லும் பெற்றோர்கள் வரை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

அதிலும் பத்தாவது அல்லது +2 அதாவது பன்னிரெண்டாவது வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்றால் தெருவில் போகிற வருகிறவர்கள் எல்லோரும் ‘இந்த வருடம் உனக்கு படிப்பு ரொம்ப முக்கியம். உன்னோட எதிர்காலமே இதிலதான் இருக்கு, புரியுதா? நல்லா படிம்மா’ என்று அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். பாவம் இந்த வகுப்பு படிக்கும் மாணவர்கள். வெளியில் போனாலே, என்ன வெளில சுத்திண்டு இருக்கே, படிக்கலையா?என்று கேள்வி கேட்டுத் துளைத்து எடுத்து விடுவார்கள். சில பள்ளிகளில் இந்த வகுப்புகளில் படிக்கும் மாணவர்களை வீட்டிற்கே அனுப்புவதில்லை என்றெல்லாம் கேள்விப்படுகிறோம்.

வருடம் முழுவதும் படிப்பதை அந்த மூன்று மணி நேர தேர்வு தீர்மானிக்குமா? மதிப்பெண்கள் தான் முக்கியமா? நெட்டுருப் போட்டு மதிப்பெண்கள் வாங்குவது சிறந்த கல்விமுறையா? நம் கல்விமுறை சரியானதா? என்றெல்லாம் பலர் பல சமயங்களில் கேள்வி எழுப்பினாலும் இன்று வரை தேர்வுகளும் மதிப்பெண்களும் தான் முக்கியமாக இருந்து வருகின்றன. பள்ளிகளோ கல்வியாளர்களோ, பெற்றோர்களோ கல்விமுறையை மாற்ற எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. சில பள்ளிகள் தாங்கள் புதுவிதமான கல்வி கற்பிக்கும் முறையை பின்பற்றுவதாகச் சொன்னாலும், எல்லா மாணவர்களும் எழுதுவது ஒரே மாதிரியான பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புப் தேர்வுகளையே.

நமது செல்வ களஞ்சியமே தொடரில் இதைப் பற்றி பிறகு எப்போதாவது பேசுவோம். இந்த வாரம் குழந்தைகளை எப்படி இந்த தேர்வு என்னும் பூதத்தை எதிர்கொள்ளத் தயார் செய்வது என்பதை பார்ப்போம். முதலில் நாம் அதாவது பெரியவர்கள் செய்ய வேண்டியவை என்ன?

_MG_1391

 1. அனாவசியமாக குழந்தைகளை தேர்வு தேர்வு என்று பயமுறுத்தாமல் இருக்க வேண்டும். சின்னக் குழந்தைகளுக்கு தேர்வு என்பதெல்லாம் ரொம்பவும் சீரியஸ் ஆகத் தெரியாது. நாம் பயமுறுத்தி பயமுறுத்தி அவர்களையும் ஒருவிதமான பயத்திற்கு ஆளாக்கி விடுகிறோம். 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு போட்டி என்பதும் அதை சமாளிக்கும் திறமையும் இயல்பாக வந்துவிடும். பெற்றோர்கள் அனாவசியமாக அதைப் பெரிது பண்ணி அவர்களை குழப்பாமல் அல்லது இல்லாத ஒரு பயத்தை அவர்கள் மனதில் விதைக்காமல் இருந்தால் போதும்.
 2. தேர்வுகளுக்கு சரியான முறையில் தயார் ஆகவில்லை என்னும் போதுதான் குழந்தைகள் மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். பெற்றோர்களின் கடமை அவர்களை தயார் செய்து மனஅழுத்தம் வராமல் பார்த்துக்கொள்வது.
 3. பொதுவாக குழந்தைகளுக்கு மூன்று அச்சங்கள் தோன்றும்: முதலாவது தான் படித்ததெல்லாம் மறந்துவிட்டது; இரண்டாவது தேர்வின் போது விடைத் தாளை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடியாது போய்விட்டால் என்ன செய்வது? மூன்றாவது பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாமல் போய்விடுமோ என்ற சந்தேகம்.
 4. இந்த அச்சங்களைப் போக்குவது பெற்றோர்களின் முதல் கடமை. மறுபடி மறுபடி குழந்தைகளை படிக்க வைப்பதன் மூலம் முதல் அச்சத்தைப் போக்கலாம். வீட்டிலேயே குறிப்பிட்ட கால அளவிற்குள் முடிக்குமாறு பழக்கப்படுத்தலாம். குழந்தைகளின் மேல் உங்கள் அதீத ஆசைகளைக் குழந்தைகளின் மேல் திணிக்காமல் இருப்பது, மற்ற குழந்தைகளுடன், அல்லது குழந்தையின் அக்கா, அண்ணா, தம்பி, தங்கைகளுடன் அவர்களை ஒப்பிட்டுப் பார்த்து எப்போதும் குறை சொல்லிக் கொண்டிருப்பது இவற்றைத் தவிர்த்தால் மூன்றாவது அச்சம் தோன்ற வழியில்லை.
 5. குழந்தைகள் தேர்வுக் காலங்களில் மட்டும் படிக்காமல் தினமுமே படிக்கும் வழக்கத்தை பெற்றோர்கள்தான் ஏற்படுத்த வேண்டும். பள்ளியில் நடப்பதை ஒருமுறையாவது வீட்டில் வந்து படித்தால் நல்லது. நல்ல பள்ளியில் சேர்த்தால் மட்டும் போதாது. அவர்கள் படிப்பது பெற்றோர்களின் கையிலும் இருக்கிறது என்பதை உணரவேண்டும்.
 6. உங்கள் குழந்தையால் எவ்வளவு தூரம் முடியும் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் அறிந்திருக்க வேண்டும். இதை அறிந்துகொள்ள ஒரே வழி தினமும் அவர்களுடன் உட்கார்ந்துகொண்டு பொறுமையாக அன்றன்று நடக்கும் பாடங்களை பற்றி அவர்களிடம் பேசி, எத்தனை தூரம் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டு அதற்குத் தகுந்தாற்போல அவர்களைத் தயார் செய்வது தான். இதற்கு வேண்டியது எல்லாம் நேரமும் பொறுமையும் தான்.
 7. கிடுகிடுவென படித்து முடி’ என்று குழந்தையை அவசரப்படுத்தாதீர்கள். இப்படி சாவகாசமாகப் படித்தால் என்றைக்கு படித்து முடிப்பது?என்று கலவரப்படுத்தாதீர்கள். இரண்டுமே நீங்கள் எதிர்பார்க்கும் விளைவைக் கொடுக்காது.
 8. தேர்வு சமயத்திற்கு முன்னமேயே பாடங்களை நன்றாகப் படித்து முடித்திருக்கவேண்டும். தேர்வுக்கு முன் எல்லாவற்றையும் ஒரு ‘ரிவிஷன்’ செய்ய வேண்டும் அவ்வளவுதான். புதிய பாடங்களை அப்போது சொல்லிக் கொடுக்காதீர்கள். தேர்விற்கு முன் எல்லா சந்தேகங்களையும் ஆசிரியர்களிடம் கேட்டு தெளியச் சொல்லுங்கள்.
 9. ஒரு வகுப்பில் இருக்கும் அத்தனை குழந்தைகளும் முதல் மதிப்பெண் வாங்க முடியாது என்பதை பெற்றோர் நினைவில் கொள்ள வேண்டும். போனதடவைக்கு இந்த தடவை உங்கள் குழந்தையிடத்தில் முன்னேற்றம் இருக்கிறதா என்று பாருங்கள். அதுதான் உண்மையான சாதனை.
 10. தேர்வு சமயத்தில் நல்ல தூக்கம், நல்ல சாப்பாடு, நல்ல ஓய்வு இவற்றை குழந்தைகள் பெறும்படி செய்வதும் பெற்றோர்களின் கடமைகளுள் ஒன்று.

அடுத்த வாரம் தொடர்ந்து பேசுவோம்.

“இது குழந்தைகளின் தேர்வு காலம்: பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய 10 கருத்துகள்!” இல் 12 கருத்துகள் உள்ளன

 1. நம் கல்விமுறை மாற இன்னும் நூறாண்டாகலாம்! வருடம் முழுவதும் படிப்பதை மூன்றுமணி நேரத்தில் சொல்ல முடியுமா? கஷ்டம்தான்!

  மூன்று அச்சங்களில் மூன்றாவதுதான் கொடுமை.

  இன்று தேர்வு எழுதும் எல்லா மாணவ, மாணவியருக்கும் எங்கள் வாழ்த்துகள்.

 2. ஓர் ஆசிரியையாக இதை பலமுறை நான் பெற்றோர்களுக்கும் மாணவ மாணவியர்களுக்கும் சொன்னதைத்தான் நீங்கள் மிக அழகாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள் ரஞ்சனி பெற்றோர்கள் புரிந்து கொண்டால் சரி
  பரிட்சை எழுதும் எழுதப்போகும் அத்தனை மாணவ மாணவியருக்கும் எனது நல்லாசிகள் வாழ்த்துக்கள்

 3. அருமையான பகிர்வு. தாங்கள் சொன்னவைகளைப் பெற்றோர், மற்றோர் அனைவரும் கட்டாயம் உணரனும். செய்வார்கள். தங்கள் செல்வங்களின் வாழ்க்கையல்லவா?. மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துகள். தங்களுக்கு என் நன்றிகள்.

 4. சொல்லி இருப்பவை அனைத்தும் சரியானதே. பெற்றோரும் புரிந்து கொள்ள வேண்டும். ஆனாலும் நம் கல்வி முறை அத்தனை பாராட்டத்தக்கதல்ல. வெறும் மனப்பாடம் செய்து பின் பரிட்சை சமயம் அதைக் கொட்டுவது தான் தொடர்ந்து நடந்து வருகிறது.

 5. ஆசிரியையாக பணியாற்றிய போது மாணவ மாணவிகள் படும் அவஸ்தைகளைக் கன்கூடாகப் பார்த்திருக்கிறேன். எல்லா மாணவர்கள் மனதிலும் தான் தேர்வாக வேண்டும் என்கிற சிந்தனையை விடவும் தன் பெற்றோர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டுமே என்கிறக் கவலை தான் முன்னிற்கும்.

  பரீட்சை நேரத்தில் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் வேண்டிய அறிவுரை. விழிப்புணர்வுப் பதிவு,
  தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் …..
  பாராட்டுக்கள் ரஞ்சனி.

 6. நமது பாடத் திட்டமே மாற வேண்டும். குழந்தைகளின் அறிவுத் திறனை 3 மணி நேரத் தேர்வில் கணித்திட முடியாது. எனவே பெற்றோர்கள் குழந்தைகளை தேர்வை எதிர்கொள்ளும் திறனை வளர்த்தால் நல்லது! எப்போதுமேமுதல்னிலைதான் வர வேண்டும் என்று பெற்றோரும் நினைப்பது தவறு எல்லோருமே முதல் நிலை வந்துவிட முடியுமா என்ன?!!

  நாங்களும் எழுதி வைத்துள்ளோம். இனிதான் பதிவிட வேண்டும்….

  நல்ல பதிவு! சகோதரி!

 7. அருமையான அறிவுரைகள் ஒரு அனுபவசாலியிடமிருந்து…

  இப்போ எல்லாம் எக்ஸாம்க்கு பிள்ளைங்க கண்ணு முழிக்கறாங்களோ இல்லையோ பல பெற்றோர்கள் தூக்கத்தை தொலைத்து விடுகின்றனர். அதுவும் பிளஸ் 12 என்றால் சொல்லவே வேண்டாம்.

  நல்ல மார்க் எடுத்தா நல்ல காலேஜ் இல்லன்ன குப்பை காலேஜ் தான், வாழ்க்கையே அவ்ளோதான்னு சொல்லி சொல்லி அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர்…

 8. அன்பு சகோதரி
  வணக்கம்!
  மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
  இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
  நட்புடன்,
  புதுவை வேலு
  http://WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

  சித்திரைத் திருநாளே!
  சிறப்புடன் வருக!

  நித்திரையில் கண்ட கனவு
  சித்திரையில் பலிக்க வேண்டும்!
  முத்திரைபெறும் முழு ஆற்றல்
  முழு நிலவாய் ஒளிர வேண்டும்!

  மன்மத ஆண்டு மனதில்
  மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
  மங்கலத் திருநாள் வாழ்வில்!
  மாண்பினை சூட வேண்டும்!

  தொல்லை தரும் இன்னல்கள்
  தொலைதூரம் செல்ல வேண்டும்
  நிலையான செல்வம் யாவும்
  கலையாக செழித்தல் வேண்டும்!

  பொங்குக தமிழ் ஓசை
  தங்குக தரணி எங்கும்!
  சீர்மிகு சித்திரைத் திருநாளே!
  சிறப்புடன் வருக! வருகவே!

  புதுவை வேலு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.