அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் லட்ச வேட்டைக்கு துணை போக மறுத்த பேராண்மைமிக்க அதிகாரி மன உளைச்சல் காரணமாக தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டதற்கு வேளாண் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தான் காரணம் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.
அமைச்சரின் லட்ச வேட்டைக்கு ஒத்துழைக்காத மனம் உடைந்து செயற்பொறியாளர் தற்கொலை செய்துகொண்டதாக ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த அறிக்கையில், ‘தமிழக வேளாண் பொறியியல் துறையின் திருநெல்வேலி மாவட்ட செயற் பொறியாளர் எஸ். முத்துக்குமாரசாமி தச்சநல்லூரில் ஓடும் ரயில் முன்பு நேற்று விழுந்து தற்கொலை செய்து கொண்டதில் பல அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. நேர்மைக்கும், கடமைக்கும் பெயர் பெற்றவரான செயற்பொறியாளர் தற்கொலை முடிவுக்கு ஏன் வந்தார் என்பதில் தமிழக வேளாண்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சம்மந்தப்பட்டிருக்கிறார் என்கிற திடுக்கிடும் தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
திருநெல்வேலி மாவட்ட வேளாண் பொறியியல் துறைக்கு நான்கு ஓட்டுநர்களை பணிக்கு தேர்வு செய்ய மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து மூப்பு பட்டியல் பெற்று அதிலிருந்து தேர்வு செய்து, பணி ஆணை வழங்க செயற்பொறியாளர் எஸ். முத்துகுமாரசாமி முடிவு செய்ததிலிருந்து பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாக வேண்டிய அசாதாரண நிலை ஏற்பட்டது. இதை அறிந்த வேளாண் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி செல்பேசியில் தொடர்பு கொண்டு, ‘நான் சொல்லுகிற நபர்களுக்குத் தான் நீ பணி ஆணை வழங்க வேண்டும். நீயாக எதையும் முடிவு செய்யக் கூடாது” என்று மிரட்டியிருக்கிறார். இத்தகைய சட்டவிரோத செயலை செய்ய முத்துக்குமாரசாமி மறுத்த போது மீண்டும் அமைச்சர் செல்பேசியில் தொடர்பு கொண்டு, ‘நான் கொடுக்கிற பட்டியலின்படி பணி ஆணையை வழங்க முடியாதெனில் உன் பட்டியலில் உள்ள நான்கு பேரிடம் தலா ரூ.3 லட்சம் பெற்றுக் கொண்டு பணி ஆணை வழங்கும்படி” வற்புறுத்தியிருக்கிறார். மேலும் அமைச்சர் ‘அப்படி வழங்கவில்லையெனில் நீ ஓய்வு பெறுவதற்கு 6 மாதங்கள் தான் இருக்கின்றன. நீ ஓய்வூதியம் உட்பட எந்த சலுகையும் பெற முடியாமல் உன்னை உடனடியாக சஸ்பென்ட் செய்து விடுவேன்” என்று உரத்தக் குரலில் மிரட்டியிருக்கிறார். அமைச்சரின் மிரட்டலுக்கு பணிய முத்துக்குமாரசாமியின் மனம் ஒப்பாத காரணத்தால், தமது வருங்கால வைப்பு நிதியிலிருந்து ரூ.5 லட்சத்தை எடுத்து அமைச்சருக்கு வழங்க முடிவு செய்துள்ளார். அதற்கு பிறகு அமைச்சருடன் தொடர்பு கொண்டு ரூ.5 லட்சம் வழங்க தயார் என்று கூறிய போது வேளாண் அமைச்சரோ, ‘ரூ.12 லட்சத்தை ஒரே தவணையாக வழங்க வேண்டும்” என்று கடுமையாக கெடுபிடி செய்த போது மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகி சில நாட்களாக நிம்மதி இழந்தவராக இருந்துள்ளார். இந்நிலையில் விஷயம் என்னவென்று தெரியாத நிலையில் தமது நகையை அடகு வைத்து பணம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று மனைவி ஆறுதல் கூறியிருக்கிறார்.
இந்த பின்னணியில் நேற்று இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்று கொண்டிருந்த போது வந்த செல்பேசி அழைப்பில் பேசிய முத்துக்குமாரசாமி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடைசியாக கோபத்துடன் தமது செல்பேசியை தூக்கி விசிறி எறிந்துவிட்டு வேகமாக ரயில் பாதையை நோக்கி நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கே வந்த ரயில் முன்பு திடீரென ஓடிச் சென்று விழுந்து தற்கொலை செய்து கொண்ட ஓர் கொடூர சோக நிகழ்வு நடந்துள்ளது. அவரது உடல் இரு கூறுகளாக சிதறி பிளவுபட்டுக் கிடந்த காட்சியை கண்ட பொதுமக்கள் அனைவரும் சோக வெள்ளத்தில் ஆழ்நதுள்ளனர். இப்படுகொலைக்கு ஊழலில் ஊறி திளைத்த அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் பதில் சொல்லாமல் தப்ப முடியாது.
அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் லட்ச வேட்டைக்கு துணை போக மறுத்த பேராண்மைமிக்க அதிகாரி மன உளைச்சல் காரணமாக தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டதற்கு வேளாண் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தான் காரணம் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. முத்துக்குமாரசாமி திடீரென தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு செல்பேசியில் கடைசியாக யாரோடு பேசினார் ? கடந்த சில காலமாக அவரோடு செல்பேசியில் பேசியவர்கள் யார் ? இதை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டால் பல அதிர்ச்சி உண்மைகள் ஆதாரத்துடன் வெளிவர வாய்ப்பு இருக்கிறது.
இதனடிப்படையில் பாரபட்சமற்ற தீவிர விசாரணை நடத்தினால் தற்கொலைக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் தற்கொலை நிகழ்வில் சம்மந்தப்பட்டவரோ அமைச்சராக இருப்பதால் இந்த வழக்கின் விசாரணையை தமிழக காவல்துறை விசாரித்தால் நிச்சயம் நீதி கிடைக்காது. முதற்கட்டமாக இந்த தற்கொலையில் நேரடி பங்கு வகித்துள்ள வேளாண் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். அப்போதுதான் பாரபட்சமற்ற விசாரணை நடத்த முடியும்.
எனவே, தற்கொலைக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டிக்க, இவ்வழக்கை மத்திய புலனாய்வுத்துறை விசாரிக்க தமிழக முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழலுக்கு எதிராக போராடி தற்கொலை செய்து கொண்ட பொறியாளர் எஸ். முத்துக்குமாரசாமியின் குடும்பத்திற்கு உரிய நஷ்ட ஈட்டை தமிழக அரசு வழங்க வேண்டும். இத்தகைய நடவடிக்கை எடுத்து ஊழலுக்கு எதிராக நெஞ்சுறுதியோடு இறுதிவரை போராடி மடிந்துள்ள செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தி நீதி கிடைக்கும் வரை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி போராடும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.