அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி, ஆன்மீகம், இன்றைய முதன்மை செய்திகள், சமணமும் தமிழும்

சமணசமயம் தோன்றிய வரலாறு

சமணமும் தமிழும் – 2

அறிஞர் சீனி. வெங்கடசாமி

சமணசமயம் தோன்றிய வரலாறு

WLA_lacma_Jina_Rishabhanatha
விருஷப தேவர் (ஆதி பகவன்)

 

சமணசமயத்திற்கு ஜைன மதம், ஆருகத மதம், நிகண்ட மதம், அநேகாந்தவாத மதம், ஸியாத்வாத மதம் என்னும் பெயர்களும் உள்ளன. சமணர் (ஸ்ரமணர்) என்றால் துறவிகள் என்பது பொருள். துறவை வற்புறுத்திக் கூறி, துறவு பூண்டோரே வீடுபெறுவர் என்று இந்த மதம் சாற்றுகிறது. எனவே, துறவு எனப் பொருள்படும் சமணம் என்னும் பெயர் இந்த மதத்திற்குச் சிறப்புப் பெயராக வழங்கப்படுகிறது. பலன்களையும் கர்மங்களையும் ஜயித்தவர் (வென்றவர்) ஆகலான் தீர்த்தங்கர்ருக்கு ஜினர் என்னும் பெயர் உண்டு. ஜினரைக் கடவுளாக உடைய மதம் ஜைன மதம் எனப்பட்டது. சமண சமயக் கடவுளுக்கு அருகன் என்னும் பெயரும் உண்டு. ஆகவே, அருகனை வணங்குவோர் ஆருகதர்1 என்றும் இந்த மதத்திற்கு ஆருகதமதம் என்றும் பெயர் கூறப்படுகிறது

சமணக் கடவுள் பற்றற்றவர் ஆதலின் நிர்க்கந்தர் அல்லது நிகண்டர் எனப்பட்டார். அதுபற்றிச் சமண சமயம் நிகண்டமதம் எனப் பெயர்பெற்றது. மதங்கள் ஏகாந்தவாதம், அநேகாந்தவாதம் என இருவகை. சமணம் ஒழிந்த ஏனைய மதங்கள் எல்லாம் ஏகாந்தவாத மதங்கள். சமணம் ஒன்றே அநேகாந்தவாதத்தைக் கூறுவது. ஆகவே, இந்த மதத்திற்கு அநேகாந்தவாத மதம் என்று பெயர் உண்டாயிற்று. ஸியாத்வாதம் என்றாலும் அநேகாந்தவாதம் என்றாலும் ஒன்றே. அசோக (பிண்டி) மரத்தைப் போற்றுவது சமணர் வழக்கமாதலின் சமணருக்குப் பிண்டியர் என்னும் பெயர் கூறப்படுகிறது.

சமண சமயக் கொள்கைகளை அவ்வப்போது உலகத்திலே பரவச் செய்வதன் பொருட்டுத் தீர்த்தங்கரர்கள் என்னும் பெரியார்கள் அவ்வப்போது தோன்றுகிறார்கள் என்பது சமண சமயக் கொள்கை, இதுவரை இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் தோன்றியுள்ளார்கள் என்பதும், இனியும் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் தோன்றப் போகிறார்கள் என்பதும் இந்த மதக் கொள்கையாகும்.

இதுவரை தோன்றியுள்ள இருபத்துநான்கு தீர்த்தங்கரர்களின் பெயர் வருமாறு;

1. விருஷப தேவர்       13. விமல நாதர்

(ஆதி பகவன்.)      14. அநந்த நாதர்

2. அஜிதநாதர்  (அநந்தஜித் பட்டாரகர்)

3. சம்பவ நாதர்       15. தருமநாதர்

4. அபி நந்தனர்       16. சாந்தி நாதர்

5. சுமதி நாதர்       17. குந்துநாதர்(குந்து பட்டாரகர்)

6. பதும நாபர்       18. அரநாதர்

7. சுபார்சவ நாதர்      19. மல்லிநாதர்

8. சந்திரப் பிரபர்        20. முனிசு வர்த்தர்

9. புஷ்ப தந்தர்(சுவிதி நாதர்)          21. நமிநாதர்(நமிபட்டாரகர்)

10. சீதள நாதர்       22. நேமிநாதர்(அரிஷ்ட நேமி)

11. சீறீயாம்ச நாதர்        23. பார்சுவ நாதர்

12. வாசு பூஜ்யர்      24. வர்த்தமான மகாவீரர்.

தீர்த்தங்கரர்கள் அருகக் கடவுளைப் போன்றே தெய்வமாகத் தொழப்படுகின்றனர்.

சமண சமயக் கொள்கைகளை, விருஷப தேவர் (ஆதி பகவன்) முதல் முதல் உலகத்திலே பரப்பினார் என்றும், அவருக்குப் பின்னர் வந்த தீர்த்தங்கரர்களும் இந்த மதத்தைப் போதித்தார்கள் என்றும் சமணர் கூறுவர். ஆனால், வரலாற்றாசிரியர்கள் இதனை ஒப்புக்கொள்வதில்லை. இருபத்து மூன்றாவது தீர்த்தங்கரராகிய பார்சவநாதர் சமண மதத்தை உண்டாக்கினார் என்றும் அவருக்குப் பின் வந்த வர்த்தமான மகாவீரர் இந்த மதத்தைச் சீர்திருத்தியமைத்தார் என்றும் வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். இவ்விரு தீர்த்தங்கரருக்கு முன்பிருந்த ஏனைய இருபத்திரண்டு தீர்த்தங்கரரும் கற்பனைப் பெரியார் என்று இவர்கள் கூறுகின்றனர். இவர்கள் இவ்வாறு கூறுவதற்கு இரண்டு காரணங்களைக் காட்டுகின்றனர். அக்காரணங்களாவன;முதல் இருபத்திரண்டு தீர்த்தங்கரர்கள் இயற்கைக்கு மாறுபட்டு, அதிக உயரமும் அதற்கேற்ற பருமனும் வாய்த்திருந்தனர் என்று கூறப்படுவது ஒன்று. இவர்கள் இயற்கைக்கு மாறுபட்டுப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தனர் எனக் கூறப்படுவது மற்றொன்று.

தீர்த்தங்கரர்களின் உயரமும் ஆயுளும் சமண நூல்களில் இவ்வாறு

கூறப்பட்டுள்ளன.

பெயர்       உயரம்      ஆயுள்

1. விருஷபர்       500-வில்    84 லட்ச பூர்வ ஆண்டு

2. அஜிதநாதர்      450-வில்    71 ”

3. சம்பவநாதர்      400-வில்    60 ”

4. அபிநந்தனர்          350-வில்    50 ”

5. சுமதிநாதர்       300-வில்    40 லட்ச பூர்வ ஆண்டு

6. பதுமநாபர்       250-வில்    30 ”

7. சுபார்சவநாதர்      200-வில்    20 ”

8. சந்திரப்பிரபர்      150-வில்    10 ”

9. புஷ்பதந்தர்      100-வில்    2 லட்ச பூர்வ ஆண்டு

10. சீதளநாதர்       90-வில்    1 ”

11. சிறீயாம்சநாதர்     80-வில்    80 லட்சம் ஆண்டு

12. வாசு பூஜ்யர்      70-வில்    72 ”

13. விமலநாதர்      60-வில்    60 ”

14. அருந்தநாதர்      50-வில்    30 ”

15. தருமநாதர்       45-வில்    10 ”

16. சாந்திநாதர்      40-வில்     1 ”

17. குந்துநாதர்      35-வில்    95 ஆயிரம் ஆண்டு

18. அரநாதர்       30-வில்    84 ”

19. மல்லிநாதர்      25-வில்    55 ”

20. முனிசுவர்த்தர்     20-வில்    30 ”

21. நமிநாதர்       15-வில்    10 ”

22. நேமிநாதர்      10-வில்     1 ”

23. பார்சுவநாதர்      9-முழம்    100 ஆண்டு

24. மகாவீரர்       7-முழம்    72 ஆண்டு

இவ்வாறு ஆயிரக் கணக்கான ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தவராகக் கூறப்படுகிற முதல் இருபத்திரண்டு தீர்த்தங்கரர்களை கற்பனைப் பெரியார் என்று ஒதுக்கிவிட்டு முறையே 100 ஆண்டும் 72 ஆண்டும் உயிர் வாழ்ந்தவராகக் கூறப்படுகிற கடைசி இரண்டு தீர்த்தங்கரராகிய பார்சுவநாதரையும், மகாவீரரையும் உலகத்தில் உயிர்வாழ்ந்திருந்த உண்மைப் பெரியார் என்றும் கொண்டு, இவர்கள் காலத்தில்தான் சமணமதம் தோன்றியிருக்க வேண்டும் என்று வரலாற்றாசிரியர் கருதுகிறார்கள்.

ஆராய்ந்து பார்த்தால் தீர்த்தங்கரர் அனைவரும் உண்மையில் உயிர் வாழ்ந்திருந்த பெரியார் என்பதும் கற்பனைப் பெரியார் அல்லர் என்பதும் புலப்படும். பண்டைக் காலத்திலிருந்த சமயப் பெரியார்களைப் பற்றிப் பிற்காலத்தவர், மக்கள் இயற்கைக்கு மேற்பட்ட இயல்புகளைக் கற்பித்துக் கதை எழுதுவது வழக்கம். இது எல்லா மதங்களுக்கும் இயல்பு. தம்முடைய மதப் பெரியார்களின் பெருமை, ஆற்றல், சிறப்பு, தெய்விகத் தன்மை முதலியவற்றை அதிகப்படுத்த வேண்டும் என்னும் சமய ஆர்வத்தினால் ஒவ்வொரு சமயத்தாரும் தத்தம் சமயப் பெரியாரைப் பற்றிப் பலவித செய்திகளைக் கற்பித்து விடுகிறார்கள். இயற்கைக்கு மாறுபட்ட இக் கற்பனைகளைச் ‘சமயப்பற்று’ என ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், அவர்கள் உண்மையில் உலகத்தில் வாழ்ந்திருந்தவர் என்பது புலனாகும். அதுபோன்று தீர்த்தங்கரரின் மிகப் பெரிய உருவத்தையும் நீண்ட வாழ்க்கையையும் சமணரின் ‘சமயக் கொள்கை’ என்று ஒதுக்கிவிடுவோமாயின், தீர்த்தங்கரர் அனைவரும் உண்மைப் பெரியார் என்பது புலப்படும்.

சமணர்கள் தமது தீர்த்தங்கரருக்கு ஏன் பருத்த உயர்ந்த உடலையும் நீண்ட ஆயுளையும் கற்பித்தார்கள்?

உயிர் உடம்பு முழுவதும் பரவி நிற்கிறது என்பதும், உடம்பின் உருவத்திற்கு ஏற்றபடி உயிரானது சிறிதும் பெரிதுமாக அமையும் என்பதும் சமண சமயக்கொள்கை. எறும்பின் மிகச்சிறிய உடலில் பரந்து நிற்கும் உயிர் அதன் உடலுக்குத் தக்கபடி சிறியதாகவும், மிகப்பெரிய யானையின் உடம்பில் பரந்து நிற்கும் உயிர் அதன் பெரிய உடம்புக்குத் தக்கபடி மிகப் பெரியதாகவும் அமைந்து நிற்கும் என்பது ஆருகதமதக் கொள்கை. இக்கருத்துப் பற்றியே ‘‘பெரியதன் ஆவி பெரிது’’ என்னும் பழமொழியும் சமணரால் வழங்கப்படுவதாயிற்று.

அரிதவித் தாசின் றுணர்ந்தவன் பாதம்  

விரிகடல் சூழ்ந்த வியண்கண்மா ஞாலத்  

துரியதனிற் கண்டுணர்ந்தார் ஓக்கமே போலப்  

பெரியதன் ஆவி பெரிது.

என்பது பழமொழி நானூறு.

இச்சமயக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ஆருகதர் தமது தீர்த்தங்கரருக்கு மிகப் பெரிய உருவத்தைக் கற்பித்தார்கள் போலும், மிகப் பெரிய உருவத்தைக் கற்பித்ததற் கேற்ப மிக நீண்ட ஆயுளையும் கற்பித்தார்கள் போலும். இவ்விரண்டு கற்பனைகளையும் தள்ளிவிடுவோமாயின், தீர்த்தங்கரர் உண்மையில் இருந்த பெரியார் என்பது விளங்கும்.

தீர்த்தங்கரர் அனைவரும் உண்மைப் பெரியார் என்றே கொள்வோம். ஆனால், இவர்கள் அனைவரும் சரித்திர காலத்துக்கு உட்பட்டவர் அல்லர். முதல் பத்தொன்பது தீர்த்தங்கரர்கள் சரித்திரகாலத்துக்கு முற்பட்டவராகக் காணப்படுகின்றனர். கடைசி ஐந்து தீர்த்தங்கரர்களாகிய முனிசு வர்த்தர், நமிநாதர், நேமிநாதர் பார்சுவநாதர், மகாவீரர் என்பவர்கள் சரித்திர காலத்துக்குட்பட்டவராவர். எப்படி என்றால், கூறுதும்.

இராமாயணக் கதையையும் பாரதக் கதையையும் சரித்திரக் கதைகளாக ஒப்புக்கொண்டு வரலாற்றாசிரியர் இந்திய சரித்திரத்தை எழுதி வருகிறார்கள். இந்திய சரித்திரத்தின் தொடக்கத்தில் இராமாயண, பாரதக் கதைகள் கூறப்படுகின்றன. இக்கதைகள் இந்துக்களுக்கு (சைவ வைணவர்) உள்ளதுபோலவே சமணர்களுக்கும் உள்ளன. இந்து, சமண இராமாயண பாரதக் கதைகளில் சில சிறு மாறுதல்கள் காணப்படுகிறபோதிலும் இரண்டும் ஒரே கதைகளாகும். இராமாயணமும் பாரதமும் இந்திய சரித்திரத்தில் இடம்பெற்று இருக்கிறபடியால், இராமாயண காலத்தில் இருந்த 20 ஆவது தீர்த்தங்கராகிய முனிசுவர்த் தரும், அவருக்குப் பின் இருந்த நமிநாதர் என்னும் 21 ஆவது தீர்த்தங்கரரும், அவருக்குப் பிறகு பாண்டவர் கண்ணபிரான் காலத்தில் இருந்தவராகிய 22-ஆவது தீர்த்தங்கரராகிய நேமிநாதரும் 2, அவருக்குப் பிறகு இருந்த பார்சுவநாத தீர்த்தங்கரரும். அவருக்குப் பிறகு புத்த பகவான் காலத்தில் இருந்த 24 ஆவது தீர்த்தங்கரராகிய மகாவீரரும் சரித்திர காலத்தில் இருந்தவர் ஆவர்.

இருபத்து மூன்றாவது தீர்த்தங்கரராகிய பார்சுவநாதர் கி.மு. எட்டாம் நூற்றாண்டில் இருந்தவர். அதாவது கி.மு. 817 முதல் கி.பி. 717 வரையில் இருந்தவர். இவருக்குப்பின்னர் 250 ஆண்டுகளுக்குப் பிறகு வர்த்தமான மகாவீரர் தோன்றி 72 ஆண்டுகள் உயிர்வாழ்ந்திருந்தார். இவர் கி.மு. 599 முதல் கி.பி. 527 வரையில் இருந்தவர். வர்த்தமான மகாவீரர் காலத்திலே, பௌத்த மதத்தை உண்டாக்கிய கௌதமபுத்தரும், ஆசீவகமதத்தை உண்டாக்கிய மற்கலியும் இருந்தார்கள். இவர்களில் மகாவீரர் வயதில் மூத்தவர். மற்கலி, மகாவீரருடன் ஆறு ஆண்டு ஒருங்கிந்தார். பிறகு மகாவீரருக்கு மாறுபட்டு ஆசீவகமதம் என்னும் புதிய மதத்தையுண்டாக்கினார். இதனால், பௌத்த மதமும் ஆசிவகமதமும் மகாவீரர் காலத்தில் தோன்றிய மதங்கள் என்பதும் இவ்விரு மதங்களுக்கு முற்பட்டது சமணமதம் என்பதும் விளங்குகின்றன.

சமண சமயம் பிற்காலத்தில் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிவுண்டது. அவை சுவேதாம்பர சமணம், திகம்பர சமணம், ஸ்தானகவாசி சமணம் என்பன. சுவேதாம்பர சமணத் துறவிகள் வெண்ணிற ஆடைகள் அணிவர். இவரின் ஆலயங்களில் உள்ள தீர்த்தங்கரர் திருவுருவங்களுக்கும் வெண்ணிற ஆடை உடுத்துவர். சுவேதாம்பரம் என்பதற்கு வெண்ணிற ஆடை என்பது பொருள். திகம்பர சமணத் துறவிகள் ஆடை அணியமாட்டார்கள், கௌபீனமும் உடுத்தமாட்டார்கள். திகம்பரர் என்றால் திசைகளை ஆடையாக உடுத்தவர் என்பது பொருள். (திக் + அம்பரம் = திகம்பரம்) அதாவது உடையின்றி இருப்பர். இவரின் கோயில்களில் உள்ள தீர்த்தங்கரர் திருவுருவங்களும் ஆடையுடுத்தப்பெறாமல் திகம்பரமாகவே (அம்மணமாகவே) இருக்கும். சுவேதாம்பர சமணரும் திகம்பர சமணரும் உருவவழிபாட்டினர். ஸ்தானகவாசி சமணருக்கு உருவ வழிபாடு உடன்பாடு அன்று; அவர்கள் தம் கோயில்களில் சமண ஆகம நூல்களை வைத்து அவற்றையே தீர்த்தங்கரராகவும், அருகக் கடவுளாகவும் பாவித்து வணங்குவார்கள்.

சுவேதாம்பர, ஸ்தானகவாசி சமணர்கள் வட இந்தியாவில் காணப்படுகின்றனர். திகம்பர சமணர் பண்டைக் காலத்தில் தமிழ் நாட்டிலே பெருந்தொகையினராக இருந்தனர். இப்போதும் தமிழ் நாட்டில் உள்ள சமணர் திகம்பர சமணரே. தமிழ் நூல்களிலே ஜைனர் என்றும், சமணர் என்றும், அமணர் என்றும், ஆருகதர் என்றும் கூறப்படுகிறவர் திகம்பர சமணரேயாவர்.

____________________________________________________________________________

 1.    ‘‘அருகனென நிறுத்தி இவனைத் தெய்வமாகவுடையான் யாவனெனக் கருதியவிடத்து அகரத்தை ஆகாரமாக்கி, ‘ஒற்றுமிகும்’ என்பதனாற் ககர வொற்றின் பின்னே தகரவொற்றை மிகுத்து, ‘சுட்டு மிகும்’ என்பதனால் அகரச் சுட்டை மிகுத்து, முன்னொற் றுண்டேற் செம்மை யுயிரேறுஞ் சிறந்து’ என்பதினால் ஒற்றிலே உயிரை ஏற்றி ஆருகதன் என முடிக்க’’ என்பது நேமிநாதம்; எழுத்ததிகாரம்; 10ஆம் செய்யுளுரை.
 2.   நேமிநாத தீர்த்தங்கரரின் உறவினரான கண்ணபிரான், இனி உலகத்திலே தோன்றப்போகிற சமண தீர்த்தங்கரர்களின் முதல் தீர்த்தங்கரராகத் தோன்றிச் சமண சமயத்தைப் பரவச் செய்யப்போகிறார் என்பது சமணரின் நம்பிக்கை.

“சமணசமயம் தோன்றிய வரலாறு” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.