இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

குழந்தை வளர்ப்பில் தாத்தா பாட்டிகள் செய்ய வேண்டியவை!

செல்வ களஞ்சியமே – 85

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி நாராயணன்
ரஞ்சனி நாராயணன்

தாத்தா நாளைக்கும் நாம ஸ்கைப் பண்ணலாமா?சின்னப் பெண் அதிதி ஆசையுடன் கேட்கிறாள். அவள் இருப்பது வெளிநாட்டில். அவளது தாத்தா பாட்டி இருவரும் இருப்பது இந்தியாவில். பேரன் பேத்திகளுக்கும், தாத்தா பாட்டிகளுக்கும் உதவும் தொழில் நுட்பம் இந்த ஸ்கைப். இதன் மூலம் மிக மிக தூரத்தில் இருப்பவர்கள் கூட அருகாமையில் இருப்பது போல உணருகிறார்கள். எல்லா பெரியவர்களும் இரு கரம் நீட்டி வரவேற்கும் தொழில்நுட்பம் இது. குழந்தைகளைப் பார்க்கலாம்; பேசலாம் விளையாடலாம். சொல்லிக்கூடக் கொடுக்கலாம். கதை புத்தகங்கள் படித்துக் காட்டலாம். உண்மையில் பல பெரியவர்களுக்கு இது ஒரு வரம் என்றே சொல்லலாம்.

அந்தக்காலம் போல இப்போது கூட்டுக் குடும்பங்கள் இல்லை. பெற்றோர்கள் இந்தியாவிலும் திருமணமான பெண், பிள்ளை இருவரும் தங்கள் குடும்பங்களுடன் வெளிநாட்டில் இருக்கிறார்கள். தாத்தா பாட்டிகளின் கொஞ்சல் எல்லாம் ஸ்கைப் அல்லது வேறு அதேபோன்ற தொழில் நுட்பங்களின் மூலம் தான். பெரியவர்களுக்கு இந்தத் தொழில்நுட்பங்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் அச்சத்தைக் கொடுத்தாலும் கொஞ்சம் பழகிவிட்டால் சுலபமாகிவிடும்.

பேரப்பிள்ளைகள் அருகில் இல்லாததை பல பெரியவர்களும் ஒரு பெரிய இழப்பாகவே உணருகிறார்கள். முக்கியமாக குழந்தைகளின் பிறந்தநாட்களின் பொழுது அல்லது அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப் படும்போது குழந்தைகளின் அருகில் இருக்க முடியவில்லையே, தங்கள் பெண் அல்லது பிள்ளைகளுக்கு உதவ முடியவில்லையே என்று விசனப்படுகிறார்கள்.

பிள்ளை அல்லது பெண் வெளிநாட்டில் இருப்பதால் அவர்களுக்குக் குழந்தை பிறந்தவுடனே பார்க்க முடிவதில்லை. இது ஒரு பெரிய குறை. நாம் போய் பார்க்கும்போது அவர்கள் கொஞ்சம் வளர்ந்திருப்பார்கள். முதல் சில நாட்களுக்கு நாம் அவர்களுக்கு அன்னியம் தான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நம்மிடம் பழகி விளையாட ஆரம்பிக்கும்போது ஊருக்கு திரும்ப வேண்டிய நேரம் வந்துவிடுகிறது’ என்கிறார் இந்தியாவில் இருக்கும் ஒரு தாத்தா. வெளிநாடுகளுக்குப் போனாலும் இந்தப் பெரியவர்களால் அங்கு சுதந்திரமாக வெளியே செல்லமுடிவதில்லை. எல்லாவற்றுக்கும் பிள்ளைகளை சார்ந்திருக்க வேண்டிய நிலை. ப்ளே ஹோம் போகும் குழந்தைகளை தாத்தா பாட்டி வந்திருக்கும்போது வீட்டில் வைத்துக் கொள்ள விரும்புவதில்லை பெற்றோர்கள். ஏனெனில் தாத்தா பாட்டியுடன் விளையாடி அவர்கள் அன்பில் திளைக்கும் குழந்தை மறுபடியும் ப்ளேஹோம் போக விரும்பாது. அதனால் தாத்தா பாட்டிகள் வீட்டில் தனியாகத்தான் இருக்கிறார்கள். இன்னொரு விஷயம். வெளிநாட்டில் நீண்ட காலம் இருக்கவும் முடியாது. திரும்பி வந்தே ஆகவேண்டும்.

உறவுகள் என்பது மரம் செடி கொடி போல. நீர் ஊற்றி அவற்றைப் போற்றிப் பாதுகாப்பது போலவே உறவுகளையும் போற்றிப் பாதுகாக்க வேண்டும். முக்கியமாக நமது பாரம்பரியத்தின் வரலாறு சொல்லும் தாத்தா பாட்டிகளின் உறவு நிச்சயம் குழந்தைகளுக்கு வேண்டும். குழந்தைகளுக்கு அவர்களது அன்பும் அரவணைப்பும் தேவை. அவர்கள் மூலமே குழந்தைகள் தங்கள் உறவுகளின் வேர்கள் பற்றி அறிகிறார்கள். தாத்தா பாட்டிகளும் தங்களது பிரதிபிம்பத்தை இந்தக் குழந்தைகளில் காண்கிறார்கள். இந்த உறவுப் பாலத்தை கட்டிக்காப்பதில் பெற்றோர்களின் பங்கும் மிக மிக முக்கியமானது.

1

தாத்தா பாட்டிகள் செய்ய வேண்டியவை:

 • உள்ளூரில் இருந்தாலும் வெளியூரில் அல்லது வெளிநாட்டில் இருந்தாலும் குழந்தைகளுடன் அடிக்கடி பேசுங்கள். தொடர்புடன் கூடிய உறவுதான் நீடித்து நிற்கும். அவர்கள் நிலைக்கு நீங்கள் இறங்கி வரவேண்டியது மிகவும் முக்கியம். உள்ளூரில் இருந்தால் அடிக்கடி குழந்தைகளுடன் நேரம் செலவழியுங்கள். வெளியில் அழைத்து போங்கள். பாட்டி கதை சொல்லலாம். தாத்தா ஊர் சுற்றிக் காட்டலாம்.
 • கணணி தெரிந்தவர்கள் அவர்களுடன் விளையாட்டுக்கள் விளையாடலாம். இணைய தளங்களை அவர்களுக்குக் காட்டலாம்.
 • உங்களுக்குத் தெரிந்த உங்கள் பள்ளி நாட்களில் நீங்கள் பாடிய பாடல்களை சொல்லிக் கொடுங்கள். உங்கள் பள்ளி நாட்களைப் பற்றி அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் இளம் வயது விளையாட்டுக்கள் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
 • குழந்தைகளை பள்ளியில் கொண்டுபோய் விடலாம். திரும்ப அழைத்துக்கொண்டு வரலாம். சில குழந்தைகள் பள்ளியில் என்ன நடந்தது என்று சொல்லவே மாட்டார்கள். நீங்கள் உங்கள் பள்ளி நினைவுகளை பகிர்ந்து கொண்டால் அவர்களும் சொல்லுவார்கள்.
 • உங்கள் தாய் தந்தையரைப் பற்றிய நினைவுகளை அவர்களுக்குச் சொல்லுங்கள். அவர்களது தாய் தந்தையரைப் பற்றிச் சொல்லுங்கள். இவற்றையெல்லாம் ஒரு குழந்தை அறிய வேண்டியது ரொம்பவும் அவசியம்.
 • வெளிநாட்டில் பிறந்து வளரும் குழந்தைகள் அந்த ஊர் மொழியைப் பேசும். நம் தாய் மொழி வராது. பெற்றோர்களும் அந்த மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து அதையே பேசச் சொல்லுவார்கள். அவர்களும் குழந்தையுடன் அந்த மொழியிலேயே பேசுவார்கள். இதுவும் இந்தியாவில் இருக்கும் தாத்தா பாட்டிகளுக்கு குழந்தைகளுடன் பேசி பழக ஒரு இடைஞ்சல் ஆக இருக்கும். என்னிடம் ஒரு எழுபது வயதான ஒரு பெண்மணி ஆங்கிலம் சொல்லிக் கொடுங்க என்று சொல்லி வந்தார். எனக்கு அவரைப் பார்த்து கொஞ்சம் வியப்பு. எதுக்கு உங்களுக்கு இப்போ ஆங்கிலம்?என்று கேட்டதற்கு பேரப்பிள்ளைகள் வெளிநாட்டில் இருப்பதால் தாய்மொழியில் பேசுவதில்லை என்றும் அவர்களுடன் உறவாட ஆங்கிலம் தேவை என்றும் சொன்னார். நான் அவருக்கு சொன்னேன். நீங்கள் உங்கள் தாய்மொழியில் குழந்தைகளுடன் பேசுங்கள். கொஞ்சல் என்பது தாய்மொழியில் தான் இருக்க வேண்டும். நீங்கள் தொடர்ந்து உங்கள் தாய்மொழியில் பேசினால் குழந்தைகள் வெகு சீக்கிரம் அந்த மொழியைக் கற்றுக் கொண்டு விடுவார்கள்’. இதுபோன்ற சமயங்களில் தாத்தா பாட்டிகள் குழந்தைகளுக்கு தாய்மொழி தொடர்ந்து பேசுவது மூலம் கற்றுத் தரலாம். பெற்றோர்களுக்கும் இது பெரிய உதவியாக இருக்கும்.
 • வேலைக்குச் செல்லும் பெற்றோர்களால் அதிக நேரம் குழந்தைகளுடன் செலவழிக்க இயலாது. அந்த இழப்பை தாத்தா பாட்டிகள் ஈடு செய்யலாம்.

தொடர்ந்து பேசுவோம்…!

“குழந்தை வளர்ப்பில் தாத்தா பாட்டிகள் செய்ய வேண்டியவை!” இல் 3 கருத்துகள் உள்ளன

 1. ரஞ்ஜனி நிகழ்காலத்தைப் பற்றி தத் ரூபமாக எழுதியிருக்கிராய். தாத்தா பாட்டி உடனிருந்தால் தாய்மொழியைப் பேசக் கற்றுக் கொள்கிரார்கள். குடும்ப முன்னோர்களைப் பற்றியும் கேட்டுத் தெரிந்து கொள்கிரார்கள். ஸ்கைப்போன்ற ஸௌகரியங்களை பாட்டி,தாத்தாவும், கற்றுக் கொள்கிரார்கள்.
  முக்கியமாக வெளி நாட்டில் வாழும் பேரன் பேத்திகளுடன் விளையாடி மகிழ்கிரார்கள். இரண்டொரு வருஷம் போக முடியாவிட்டாலும் பேசி,மகிழ்ந்து
  ஞாபகம் விட்டுப்போகாமலிருக்கவும் நவீன வசதிகள் உதவுகிறது.
  அந்தக் குழந்தைகளும் எவ்வளவு அட்வான்ஸாக ஒவ்வொன்றையும் அறிந்து தெரிந்து இயக்குகிறார்கள். கட்டுரையில் குறிப்பிட்டது அனைத்தும், என் பெண் ,மாப்பிள்ளை சென்னையினின்றும் பேச,அமெரிக்காவிலிருந்து அது ஒவ்வொரு ஸமாசாரத்தையும் சொல்ல,காட்ட,பாட,பேச,இயக்க என்று பரிவர்த்தனை அழகாக நடக்கிறது. சுயபுராணமாகப் போய்விடும். தாத்தா,பாட்டிகள் பாலங்களே.

  மிக்க அழகாகத் தொகுத்துக் கொடுக்கிராய். மிக்க ஸந்தோஷம். கொள்ளுபாட்டிக்குக்கூட இந்த அனுபவங்கள் இருக்கிறது. பதிவு மனதைக் கவர்கிறது. அன்புடன்

 2. சிறுவயதில் நான் கேட்ட கதைகள், ராமாயணம், மகாபாரதம், தெனாலிராமன், விக்கிரமாதித்தன் மட்டுமல்ல, சிரிப்பூட்டும் கேனை கோபாலன் கதை கூட வாழ்க்கையில் முக்கியம் என்பது என் சொந்த அனுபவம்…

  இதையெல்லாம் இப்போது உள்ள வேலைப்பளு, வேகமான வாழ்க்கையில் தாத்தா பாட்டிகள் மட்டுமே செய்ய முடியும்…

  ஆனாலும் பெரும்பாலான குழந்தைகளுக்கு இவையெல்லாம் இப்போது உள்ள காலச்சூழலில் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும், மொபைல், வீடியோ கேம், டிவி இவற்றுக்கு நடுவில் அதன் அருமை புரிவதில்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.