களிமண் (டெரகோட்டா ) நகைகள் செய்வது இப்போது மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இதைக் கற்றுக் கொள்வது மிகவும் பணம் பிடிப்பதாகவும் உள்ளது. சிலர், 2 மணி நேர வகுப்புக்கு கிட்டத்தட்ட ரூ. 2 ஆயிரம் வரை வசூலிக்கிறார்கள். சற்றே நேரம் ஒதுங்குங்கள், நான்கு பெண்கள் தளத்தின் மூலம் கற்றுக் கொள்ளுங்கள். கற்றுத் தருகிறார் கைவினைக் கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன்.
களிமண் நகைகள் செய்யத் தேவையான களிமண் கிராஃப்ட் பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கிறது. ரூ. 500க்குள் செலவழித்தால் போதும், எக்கச்சக்கமான நகைகளை செய்யலாம். இதிலே சுட வேண்டிய களிமண், சுடத் தேவையில்லாத களிமண் என இரண்டு வகைகளில் கிடைக்கிறது. நாம் இங்கே சுடத் தேவையில்லாத, வெயிலில் உலர்த்தினால் போதுமான களிமண்ணை பயன்படுத்தி மணிகள் செய்வதைப் பார்ப்போம்.
களிமண் நகைகள் செய்வதற்கு மணிகள் செய்யக் கர்றுக் கொள்வது அடிப்படை, இவற்றின் மூலம் நீங்கள் அடுத்தடுத்த நிலைக்குச் செல்லலாம். ஜெயஸ்ரீ அணிந்திருக்கும் களிமண் ஆரத்தில் இருப்பது போன்று களிமண் மணிகளைப் பயன்படுத்தலாம். களிமண் மணிகள் செய்வது எப்படி என்று விடியோவிலும் நீங்கள் காணலாம்.
களிமண்ணை தேவையான அளவு மட்டும் எடுத்துக்கொண்டு, மீதியை ஈரம் குறையாமல் இருக்க ஒரு பாலிதீன் பையால் சுற்றி வையுங்கள். களிமண்ணிலேயே தேவையான ஈரப்பதம் இருக்கும் என்பதால் தண்ணீர் எதுவும் சேர்க்கத் தேவையில்லை.
மணிகள் செய்ய ஒரு சிறு உருண்டையளவு களிமண்ணை எடுத்து உள்ளங்கையின் கீழ்பகுதியில் வைத்து உருட்டுங்கள். இப்படி உருட்டுவதால் உருண்டை வடிவம் சரியாக இருக்கும்.
ஒரு டூத் பிக் குச்சியால், அல்லது பிசிர் இல்லாத துடைப்பக் குச்சியால் இப்படி குத்துங்கள்.
இதோ இப்படி எளிதாக களிமண் மணி மேலும் கீழும் சென்றுவரும்படி அழுத்தாமல் செய்யுங்கள். களிமண் மணியை குச்சியில் இருந்து எடுத்து, முதல் முறை விட்ட திசைக்கு எதிர் திசையில் மீண்டும் குச்சியில் நுழையுங்கள். இப்போது மணியின் துளைகள் சீரடைந்து அழகாகும்.
உருண்டை, உருளை என தேவையான வடிவங்களில் மணிகளை இந்த வகையிலே செய்யலாம். இவற்றை அப்படியே நாள் முழுக்க உலர்த்துங்கள். ஈரப்பதம் முற்றிலும் மறைந்தவுடன் வண்ணம் பூசலாம்.
உதாரணத்துக்கு, வெளிர் பச்சை நிறத்துக்கு பச்சை, மஞ்சள் இரண்டு நிறங்களையும் கலந்து பயன்படுத்தவும்.
உலர்ந்ததும் களிமண்ணின் நிறம் சற்றே வெளிர்ந்திருக்கிறது. இதில் டூத் பிக் குச்சியை அப்படியே பிடித்தபடி எளிதாக வண்ணம் பூசலாம்.
எளிதாக, அழகாக விளக்கியுள்ளீர்கள். பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி.