அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி, ஆன்மீகம், இன்றைய முதன்மை செய்திகள், பௌத்த மதம், பௌத்தம், வரலாறு

சமணம் தமிழுக்கு என்ன செய்தது?

அறிஞர் மயிலை சீனி. வெங்கடசாமி எழுதிய பௌத்தமும் தமிழும் நம் நான்கு பெண்கள் தளத்தில் தொடராக வெளியானது.  ஆய்வாளர்களுக்கு முன்மாதிரியான ஆய்வுத் தன்மையோடு எழுதப்பட்ட இந்நூல் அச்சில் கிடைப்பதில்லை. அதனாலேயே இதை வெளியிட்டோம். ஏராளமான செய்திகளை போகிறபோக்கில் சொல்லாமல் தக்க சான்றோடு அறிஞர் சீனி. வெங்கடசாமி எழுதியிருந்தார். ஒவ்வொரு அத்யாயமும் கோர்வையோடு ஆய்வு எழுத்துக்கே உரிய சோர்வு இல்லாமல் சுவாஸ்ரய்மாக எழுதப்பட்டிருந்தது. அவர் அளவுக்கு தகவல் தொடர்பு சாதனங்கள் பெருகிவிட்ட சமகாலத்தில் ஒரு ஆய்வாளரை தமிழுலகம் காண்பது அரிதே. அவருடைய எழுத்துக்களை தொடர்ந்து வெளியிடுவது ஏதோ ஒரு வகையில் படிப்பவர்களை தூண்டும் என்கிற நிலையிலேயே சமணம் தமிழும் என்கிற மயிலை அறிஞரின் இன்னொரு நூலையும் தொடராகத் தருகிறோம்.

 

Mayilai-Srinivenkadasamy_40
அறிஞர் சீனி. வெங்கடசாமி

 

சமணமும் தமிழும் என்னும் இந்நூலை எழுதத் தொடங்கிப் பதினான்கு ஆண்டுகள் ஆயின. இதனை எழுத இத்தனை ஆண்டு பிடித்ததா என்று கருதாதீர்கள். எழுதுவதற்கு மூன்று நான்கு ஆண்டுகள்தான் கொண்டன. ஆனால், ‘ஊழ்’ இதனை இது காறும் வெளிவராமல் செய்துவிட்டது.

பௌத்தமும் தமிழும் என்னும் நூலை எழுதி வெளியிட்ட 1940 ஆம் ஆண்டிலேயே சமணமும் தமிழும் என்னும் இந் நூலை எழுதத் தொடங்கினேன். அப்போது சில நண்பர்கள் “பௌத்தமும் தமிழும் எழுதினீர்களே; இஃதென்ன, சமணமும் தமிழும்?” என்று கேட்டார்கள். படித்தவர்களுக்கே பௌத்த சமயத்துக்கும் சமண சமயத்துக்கும் வேற்றுமை தெரியாதிருப்பதைக் கண்டு வியப்படைந்தேன். இன்னும் சில நண்பர்கள், “காஞ்சிபுரத்தில் திருப்பருத்திக் குன்றத்தில் புத்தர் கோயில் இருக்கிறதே, நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். இப்படிக் கேட்டவர்களும் படித்துப் பட்டம் பெற்றவர்கள்தாம். திருப்பருத்திக் குன்றத்தில் இருப்பது புத்தர் கோயில் அன்று; ஜைனக்கோயில்’ என்று விளக்கியபோது தான் அவர்களுக்குச் சமண சமயத்துக்கும் பௌத்த சமயத்துக்கும் உள்ள வேறுபாடு தெரிந்தது. படித்தவர்களுக்கே இந்த வேறுபாடு  தெரியவில்லை யென்றால், பாமர மக்களைப்பற்றிக் கூறவேண்டியதில்லையே.

jainakanchi
காஞ்சிபுரம் திருப்பருத்திக் குன்றத்தில் உள்ள சமண கோயில்

 

முற்காலத்தில், ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே, தமிழ்நாட்டிலே தலைசிறந்திருந்த சமணசமயம் இப்போது மறக்கப்பட்டு விட்டது. சமணசமய வரலாறும், சரித்திரமும் மறக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் போயின. அது மட்டுமன்று, சமண சமயத்தின்மேல் வெறுப்பு உணர்ச்சியும் உண்டாக்கப்பட்டது. இவற்றையெல்லாம் கண்டபோது தமிழ் நாட்டின் வரலாற்றுப் பகுதியாகிய இதனை எழுதிமுடிக்க வேண்டும் என்னும் ஊக்கம் உண்டாயிற்று. இன்னொரு காரணமும் உண்டு. என்னவென்றால், தமிழ்நூல்களைப் படிக்கும் போதும் தமிழ் இலக்கிய வரலாற்றை ஆராயும்போதும் சமணசமயத்தவர், தமிழ் மொழிக்குச் செய்திருக்கும் சிறந்த தொண்டுகளைக் கண்டேன். சமண சமயத்தவர் செய்துள்ள தொண்டுபோல அவ்வளவு அதிகமான தொண்டுகளை வேறு சமயத்தவர் தமிழ் மொழிக்குச் செய்யவில்லை என்பதையும் அறிந்தேன். ஆகவே, பண்டைத் தமிழரின் சமய வாழ்க்கையில் பெரும் பங்குகொண்டிருந்து, தமிழ் மொழியை வளப்படுத்திய சமணசமய வரலாற்றை எழுதவேண்டுமென்னும் அவாவினால் உந்தப்பட்டு இந் நூலை எழுதினேன். இதனை எழுதும்போது அவ்வப்போது என்னை ஊக்கப்படுத்தித் தூண்டியவர் அண்மையில் காலஞ் சென்ற தமிழ்ப் பேராசிரியர் திரு.ச.த.சற்குணர்.க.இ., அவர்கள் ஆவர். அப் பெரியாரின் ஆன்மா சந்தியுறுவதாக.

வரலாறுகளை ஆராய்ந்து எழுதுவது, கதைகளை எழுதுவது போல, எளிதான காரியமன்று, ஒவ்வொன்றையும் துருவித் துருவிப் பார்த்துச் சான்று காட்டி ஆதாரத்தோடு எழுதவேண்டும், அன்றியும், எனது மதம் பிறர் மதம் என்று கொள்ளாமல், காய்தல் உவத்தல் இல்லாமல், நடுநின்று செம்பொருள் காண வேண்டும். சாசனங்களையும், பல நூல்களையும், ஏனைய சான்றுகளையும் ஆராய்ந்து ஒத்திட்டுப்பார்த்து முடிவு காணவேண்டும். (இந்த மனப்பான்மை நூலை வாசிப்பவர்களுக்கும் இருக்கவேண்டும்). வாழ்க்கைப் போரட்டத்தின் இடையே கிடைத்த சிறு சிறு நேரங்களைப் பயன்படுத்திக்கொண்டு, என்னால் இயன்ற வரையில் எனது சிற்றறிவுக்கெட்டியவரையில் ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் இதனை எழுதி முடித்தேன். ஆயினும், முதலில் சொல்லியபடி, ‘ஊழ்’ இதனைப் பத்து ஆண்டுகளாக வெளிவராமல் செய்துவிட்டது. நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டு இந்த நூலை எழுதி ஏன் என் ஆயுளை வீணாக்கினேன் என்று கருதி இதை வெளியிடாமலே இருந்துவிட்டேன். அதற்குச் சில காரணங்கள் உண்டு. அவற்றை இங்குக் கூறவிரும்பவில்லை. ஒன்றைமட்டும் கூற விரும்புகிறேன்; உண்மையாக உழைத்து ஆராய்ச்சி நூல் எழுதும் உழைப்பாளிகளுக்குத் தமிழ் நாட்டிலே இடமில்லை என்பதே அது. பாமர்களைப்பற்றியும் படியாத பணக்காரர்களைப்பற்றியும் கூறவில்லை நான் “கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள் “, கல்வித்துறையிலே மிகவுயர்ந்த நிலை பெற்று ஆராய்ச்சியின் அருமை பெருமைகளை அறிந்தவர்கள்கூட, ஆராய்ச்சியாளரைப் போற்றுவதில்லை யென்றால்  இந்நூல்களை ஏன் எழுதவேண்டும் ஏன் வெளிப்படுத்த வேண்டும்?

பத்து ஆண்டுகள் கடந்தன. இந் நூல் எழுதுவது பற்றிப் பலரும் முன்னமே அறிந்திருந்தபடியினால், பல நண்பர்கள் நேரிலும் கடிதம் எழுதியும் இதைப்பற்றிக் கேட்டார்கள். இலங்கயைலிருக்கும் நண்பர்கள் சிலரும் கடிதம் எழுதிக் கேட்டார்கள். அவர்களுக்கெல்லாம் வெளிவரும் வெளிவரும் என்று கூறினேனே யல்லாமல் என் மனவேதனையைக் கூறவில்லை.

உண்மை அறிந்த நெருங்கிய நண்பர்கள்    சிலர் இதனை வெயிடுமாறு வற்புறுத்தினார்கள். ‘கிருஸ்துவமும் தமிழும் ‘, ‘பௌத்தமும் தமிழும்’, எழுதியது தமிழ்நாட்டின் சமயவரலாறு இலக்கிய வரலாறுகளை அறிதற்கு ஏற்றதாயிற்று. அதுபோலவே ‘சமணமும் தமிழும்’ வெளிவரவேண்டும். அதுமட்டுமல்ல ‘இஸ்லாமும் தமிழும்’. ‘இந்துமதமும் தமிழும்’ என்னும் நூல்களையும் எழுதவேண்டும் என்று அடிக்கடி வற்புறுத்தத் தொடங்கினார்கள். கடைசியாக சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆட்சிப் பொறுப்பாளர் திரு,வ, சுப்பையா பிள்ளை அவர்கள் இந்நூலை அச்சிடுவதாகக் கூறிக் கையெழுத்துப் பிரதியைக் கேட்டார்கள். அதற்கு இணங்கிக் கையெழுத்துப் பிரதியைத் தேடினேன்.அந்தோ! நான் கண்டதென்ன! பெட்டியினுள் சிதல் அரித்த ஏடுகள்! தாள்கள் பெரும்பாலும் மறைந்து விட்டன. சில தாள்களே அரைகுறையாகச் செல்லரிக்கப்பட்டுக்  கிடந்தன. எனது சில ஆண்டு உழைப்பு வீணாய்ப்போயிற்று. மீண்டும்  எழுத வேண்டியதாயிற்று.

இயன்றவரையில் சான்றுகளையும் ஆதாரங்களையும் தேடி மறுபடியும் எழுதினேன். ஆனால், இது முற்பகுதியே. இப் பகுதியில் சமய வரலாறு மட்டும் பேசப்படுகிறது. பிற்பகுதி எழுதப்படுகிறது. அப்பகுதியில்தான் சமண சமயத்தினர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டுகள் கூறப்படுகின்றன. அப் பகுதியும் விரைவில் வெளிவரக்கூடும்.

வாழ்க்கைப் போருக்கிடையே, பல இன்னல்களுக்கிடையே கிடைத்த சிறுசிறு ஓய்வுக் காலத்தைப் பயன்படுத்தி இந் நூல் எழுதி முடிக்கப்பட்டது. இதில் மறைந்து போன வரலாறுகளும் செய்திகளும் கூறப்படுகின்றன. உண்மை காண விரும்புவோர் காய்தல் உவத்தல் இல்லாமல் இவற்றை ஆராய்ந்து பார்த்துக் குற்றங்களைந்து குணங்கொள்வாராக.

இந் நூலில் ஜைனர் என்னும் சொல்லுக்குப் பதிலாகச் சமணர் என்னும் சொல் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணம் இவ் வச்சகத்தில் வடமொழி அச்செழுத்துக்கள் அதிகம் இல்லாமையேயாம். ஜைன நண்பர்கள் இதனைப் பொருட்படுத்த மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

இந்நூலின் பின்னிணைப்பில் சேர்ந்துள்ள “சமணசமயப் புகழ்ப்பாக்கள்” பெரும்பாலும் யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை உரைகளில் மேற்கோள் காட்டப்பட்டவை.

பத்து ஆண்டு அஞ்ஞாதவாசத்தின் பிறகு இந் நூல் இப்போது முதன் முதலாக வெளிப்படுகிறது. இந் நூல் வெளிவருவதற்குக் காரணமாயிருந்து இதனை நன்கு அச்சிட்டு வெளிப்படுத்திய நண்பர், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சிப் பொறுப்பாளர் திரு.வ. சுப்பையா பிள்ளை அவர்களுக்கு எனது நன்றியும் தமிழகத்தின் நன்றியும் உரியவாகும்,

– மயிலை.சீனி. வேங்கடசாமி
மலரகம், மயிலாப்பூர்
சென்னை, 1-11-54

“சமணம் தமிழுக்கு என்ன செய்தது?” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.