வீட்டுத் தோட்டம் : சீசன் – 2

பிளாஸ்டிக் பாட்டில்களின் மறுபயன்பாடு குறித்து அதிகம் பேசியாகிவிட்டது. இனி செயல்பட களத்தில் இறங்க வேண்டியதுதான். வீட்டுத் தோட்டம் அமைக்க தேவைப்படும் முதலீட்டில் முக்கால் பங்கு தொட்டிகளுக்காகவே செலவிட வேண்டியிருக்கிறது. அதை குறைக்க, பிளாஸ்டிக் பாட்டில்களை மறுபடியும் பயன்படுத்தலாம். பெரிய அளவில் வேர்பிடிக்கும் செடிகளை நட முடியாது எனினும், கீரைகள், முள்ளங்கி, வெற்றிலை, மணி பிளாண்ட் போன்றவற்றை பாட்டில்களில் வளர்க்கலாம்.
பாட்டில்களின் மேல்பக்கத்தை, பிளேடால் வெட்டிக் கொள்ளுங்கள். கனமான கத்திரிகோலாலும் பாட்டில்களை வெட்டலாம். பாட்டிலின் அடிப்பாகத்தில் அதிகப்படியான தண்ணீர் வெளியேற துளைகள் இடுவது அவசியம். தயார் செய்த பாட்டில்களில் மண், உரம் கலந்த (2:1 என்ற விகிதத்தில்) கலவையை இட்டு, தண்ணீர் ஊற்றி செடி வளரும் ஊடகத்தை தயார் செய்யுங்கள். இந்த ஊடகத்தில் உதாரணத்துக்கு முள்ளங்கி எடுத்துக் கொள்வோம்…முள்ளங்கின் விதைகளை ஒரு இன்ச் ஆழத்தில் விதைத்து விடுங்கள். மூன்றாவது நாள் முள்ளங்கிச் செடி முளைக்க ஆரம்பிக்கும். இதேபோல கீரை விதைகள் போட்டு வளர்க்கலாம். மணி பிளாண்ட், வெற்றிலை போன்றவற்றின் வேருடன் கூடிய கிளைப்பகுதியை நட்டு வளர்க்கலாம். இவை நீண்ட காலம் வளரும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உரக் கரைசலை விட்டு வளர்த்தால் செடிகள் ஊட்டம் பெற்று நன்கு வளரும்.
வீட்டிலேயே உரம் தயாரிக்கும் வழிமுறை விடியோ இங்கே…
காய்கறிகளில் முள்ளங்கியை ஒரு மாதத்தில் அறுவடை செய்யலாம். கீரைகளின் காலமும் ஒரு மாதம்தான். கீரைகளை கிள்ளி பயன்படுத்தினால் மூன்று முறை துளிர்க்கவிட்டு பயன்படுத்தலாம். அரிசி, பருப்பு களைந்த நீரை கீரைச் செடிகளுக்கு ஊற்றலாம். புதிய செடி நடும்போது பாட்டில் உள்ள மண்ணைக் கொட்டிவிட்டு அதிலுள்ள பழைய செடியின் வேர்களை நீக்கிவிட்டு, உரம் சேர்த்து கலந்து புதிய செடி நடும் ஊடகமாகப் பயன்படுத்தலாம்.
இனி நீங்கள் செயலில் இறங்க வேண்டியதுதான் அடுத்தது! பாட்டில் தோட்டத்துக்கு வாழ்த்துக்கள்!!