செல்வ களஞ்சியமே – 84
ரஞ்சனி நாராயணன்

சென்ற இரண்டு வாரங்களாக குழந்தைகளுக்கு எப்படி நல்ல வழக்கங்களைப் பழக்கப்படுத்துவது என்று பேசிக் கொண்டிருந்தோம். இப்படியெல்லாம் செய்ய முடியுமா என்று கேட்பவர்களுக்கு இன்று நான் எழுதப்போவதை படித்தால் நிச்சயம் முடியும் என்று சொல்வீர்கள்.
மனிதன் தீவல்ல என்பார்கள். நம் எல்லோருக்குமே மனிதர்கள் வேண்டும். உறவாகவும் இருக்கலாம். நண்பர்களாகவும் இருக்கலாம். நம்மால் தனியாக நீண்ட நாட்கள் இருக்க முடியாது. உறவினர்கள் நம் வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் இருந்துவிட்டு கிளம்பிப் போனால் வீடு வெறிச்சோடி போனதுபோல இருக்கிறது. நாம் எல்லோருமே இதை அனுபவித்திருப்போம்.
குழந்தைப் பருவத்திலிருந்தே தாத்தா பாட்டிகளுடன் இருக்கும் குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும் சுலபமாக மற்றவர்களுடன் பழகுகிறார்கள் என்று ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன. அப்பா அம்மாவுடன் தனியாக இருக்கும் குழந்தைகளை நாம் கொஞ்சம் பழக்கினால் அவர்களும் எதிர்காலத்தில் தங்கள் வாழ்க்கையை நல்லவிதத்தில் எதிர்கொள்ளுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
சென்ற வாரம் எனது உறவினரின் பேரனைப் பார்க்கச் சென்றோம். இரண்டு வயதுக் குழந்தை. வா என்று கூப்பிடவுடன் என்னிடம் வந்துவிட்டது. ரொம்பவும் வியப்பாக இருந்தது. அதுமட்டுமல்ல; ‘நான் யாரு தெரியுமா?’ என்று கேட்டவுடன் என்னுடைய பெயர் நான் என்ன உறவு என்றெல்லாம் சொல்லியது அந்தக் குழந்தை. நான் வருவதற்கு முன்பே அந்தக் குழந்தையிடம் நாங்கள் வரப் போகிறோம் என்று சொல்லி என்ன உறவு, என்னை எப்படி அழைக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்திருந்தார்கள் அந்தக் குழந்தையின் தாத்தாவும் பாட்டியும். ரொம்பவும் ஆச்சர்யப்பட்டேன், என்ன அழகான ஒரு பழக்கத்தை குழந்தையிடம் ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று. இதனால் எங்களுக்கு அந்தக் குழந்தையுடன் பழகுவது ரொம்பவும் சுலபமாக இருந்தது.
பொதுவாகவே, வீட்டிற்குப் புதியவர்கள் வந்தால் குழந்தைகள் அவர்களிடம் பழக சற்று நேரம் ஆகும். சில குழந்தைகள் வரவே வராது. நம் முகத்தையும் பார்க்காது. சிரிக்காது. அம்மா அல்லது அப்பாவின் பின்னால் ஒளிந்துகொண்டு நம்மை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருக்கும். கிளம்பும்போது ‘டாடா’ சொல்லும் அவ்வளவுதான். அது கூட ‘மூட்’ இருந்தால்தான். அந்த மாதிரிக் குழந்தைகளைப் பார்த்து பழகிய எனக்கு இந்தக் குழந்தை அதிசயமாகத் தெரிந்தான்.
குழந்தைகளை நாம் பழக்குவதில்தான் இருக்கிறது எல்லாமே, இல்லையா? உறவுகள் ஆகட்டும் நட்பு ஆகட்டும் வளருவதும், சட்டென்று முடிந்துவிடுவதும் எல்லாமே நமது கையில் தான் இருக்கிறது என்று எனக்குத் தோன்றும். நமக்குள் சில உறவுகளுடன் பகைமை இருக்கலாம், மனத்தாங்கல்கள் இருக்கலாம் அவை அடுத்த தலைமுறையை பாதிக்கக்கூடாது. நமது பகைகள் நம்முடன் முடிந்துவிட வேண்டும் என்று தோன்றும்.
நாங்கள் போனபோது மட்டும் அந்தக் குழந்தை அப்படி சுலபமாக பழகியது என்று சொல்ல முடியாத அளவிற்கு இன்னொன்றும் நடந்தது. நாங்கள் போய்விட்டு வந்து சில தினங்களுக்குப் பிறகு என் பெண், பிள்ளை இருவரும் குழந்தையைப் பார்க்கப் போனார்கள். அவர்கள் இருவரது பெயர்களையும் சொல்லி உறவுமுறையையும் சொல்லி அழைத்ததாம் அந்தக் குழந்தை. அவ்வளவுடன் நிற்கவில்லை அந்தக் குழந்தை. ஒரு பாட்டுப் பாடியிருக்கிறது. அதுவும் ‘தேவ பந்தா நம்ம ஸ்வாமி பந்தானோ…’ என்கிற கன்னடப் பாட்டு. என் பெண்ணிற்கு மிகவும் வியப்பு. ‘இந்தப் பாட்டு உனக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்டபோது ‘நீங்க தானே இந்தப் பாட்டைப் பாடியிருக்கீங்க’ என்றதாம் அந்தக் குழந்தை. ‘அப்படியா? எப்போ இந்தப் பாட்டை நான் பாடி நீ கேட்டே?’ என்றபோது, ‘எங்க அப்பா அம்மா கல்யாணத்துல நீங்க பாடியிருக்கீங்களே’ என்றதாம் அந்தக் குழந்தை.
‘உனக்கு எப்படித் தெரியும்?’ – என் பெண்
‘நான்தான் எங்கப்பா அம்மா கல்யாணத்தை வீடியோ ல பார்ப்பேனே….!’ – குழந்தை
‘நான் இன்னொரு பாட்டுக் கூடப் பாடியிருக்கேனே..அதை கத்துக்கலையா?’ – என் பெண்.
‘ஊஹூம்…இந்தப் பாட்டுல தான் எம்பேரு வரது…அதுனால கத்துண்டேன்…’ என்று அந்தப் பாட்டை தான் கற்றுக்கொண்டதற்கு ஒரு காரணத்தையும் சொல்லிற்றாம் அந்தக் குழந்தை.
அந்தக் குழந்தையைப் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து என் பெண் அந்தக் குழந்தையைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாள். என் பிள்ளையும் அவன் பங்கிற்கு அந்தக் குழந்தையைப் பற்றிச் சொன்னான். ஆகாய விமானம் என்றால் அந்தக் குழந்தைக்கு ரொம்ப பிடிக்குமாம். நிறைய புத்தகங்கள் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள் அம்மாவும் அப்பாவும். ஒவ்வொரு புத்தகத்திலிருக்கும் படங்களையும் காண்பித்து அந்த விமானங்களின் பெயர்களையும் சொல்லுகிறானாம். விமானங்களின் பெயர்கள் சில வெளிநாட்டுப் பெயர்களாம். அவைகளையும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லுகிறானாம்.
நாங்கள் எல்லோருமே அந்தக் குழந்தையின் சமர்த்தை எண்ணி வியக்கிறோம். அடிக்கடி அந்தக் குழந்தை பேசியதை நினைத்து நினைத்து மகிழ்கிறோம். அந்தக் குழந்தை சமர்த்தாக இருப்பதில் அவனது அம்மா, அப்பா இரண்டு பக்கத்துப் பாட்டி தாத்தா எல்லோருடைய பங்களிப்பும் இருக்கிறது. குழந்தை வளர்ப்பு என்பது வீட்டிலுள்ள அனைவரின் பொறுப்பும் தான்.
குழந்தைக்கு யார் வேண்டுமானாலும் நல்ல பழக்கங்களை சொல்லித் தரலாம். அதேபோல குழந்தை தவறு செய்யும்போது உடனே கண்டிக்க வேண்டும். தாத்தா, பாட்டி, அம்மா அப்பா யார் வேண்டுமானாலும் கண்டிக்க வேண்டிய நேரத்தில் உடனே கண்டிக்கலாம். நல்ல பழக்கங்கள் சொல்லித் தருபவர்களுக்கு கண்டிக்கவும் உரிமை உண்டு.
குழந்தைகளை நல்லவிதமாக வளர்ப்போம். அவர்களால் நம் வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை வரட்டும்.
test
‘மனிதன் தீவல்ல’ என்ற புத்தகத்தை எழுதியவர் சிவசங்கரியோ? உங்கள் வரியைப் பார்த்ததும் எனக்கு அந்தப் புத்தகம் நினைவு வந்து விட்டது.
நல்ல குழந்தைகள் அமைவது வரம் என்பார்கள். அந்தக் குழந்தைகள் நல்ல குழந்தைகளாக வளர, அவர்களுக்கு நல்ல பெற்றோர்கள் அமைவதும் வரமே. அன்றைய கூட்டுக் குடும்பத்தில் தாத்தா பாட்டிக்களுடன் குழந்தைகள் வளர்வது சாத்தியமாயிருந்தது. இன்றைய நிலையில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்ல, கிரிஷிலோ, ஆயாவிடமோ வளரும் குழந்தைகளின் நிலை பரிதாபம்.
வாங்க ஸ்ரீராம்!
சிவசங்கரியா, இந்துமதியா? சரியாகத் தெரியவில்லை.
அந்தக் குழந்தை எங்களையெல்லாம் உறவு முறையுடன் கூப்பிட்டது ரொம்பவும் ஆச்சர்யமான அனுபவம். முதல்முறையாக இப்படி ஒரு குழந்தையைப் பார்த்தேன்.
நீங்கள் சொல்வதுபோல க்ரஷிலோ ஆயாவிடமோ வளறும் இந்தக் கால குழந்தைகள் ரொம்பவும் பாவம் தான்.
நமக்குள் சில உறவுகளுடன் பகைமை இருக்கலாம், மனத்தாங்கல்கள் இருக்கலாம் அவை அடுத்த தலைமுறையை பாதிக்கக்கூடாது. நமது பகைகள் நம்முடன் முடிந்துவிட வேண்டும் என்று தோன்றும்//
உண்மை.
நல்ல பழக்க. வழக்கங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டி சொல்லி தருவது தான்,
நல்ல பதிவு வாழ்த்துக்கள்.
வாங்க கோமதி!
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!
சிறப்பான கட்டுரை. நிச்சயம் முடியும் என்பதை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.