நரேந்திர மோடி அரசுக்கு டெல்லி வாக்காளர்கள் கொடுத்த மரண அடி ஜனநாயகம் காத்த மக்களின் மவுனப்புரட்சி என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உலகின் தலைசிறந்த ஜனநாயக நாடு இந்தியா என்பது 1977 க்குப் பின்னர் மீண்டும் இப்போது டெல்லி மாநில வாக்காளர்களால் நிரூபிக்கப்பட்டுவிட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி இமாலய வெற்றி பெற்றுள்ளது. டெல்லி மாநில வாக்காளர்கள் பாசிச இந்துத்துவ வெறிபிடித்த நரேந்திர மோடி அரசுக்குப் பாடம் புகட்டுகின்ற வகையில், பாரதிய ஜனதா கட்சியை விளக்குமாற்றால் விரட்டி, படுதோல்வி எனும் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார்கள்.
சாமானியனுக்கும், சாதாரண மனிதனுக்கும் ஜனநாயகம் ஆட்சி மகுடத்தைச் சூட்டும் என்பதுதான் ஆம் ஆத்மி கட்சியின் விண்முட்டப் புகழ் படைக்கும் வெற்றியாகும். பன்னாட்டுப் பகாசூரக் கம்பெனிகளுக்கும், உள்நாட்டுக் கொள்ளைக்கார கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஏஜெண்ட் வேலை பார்த்த நரேந்திர மோடி அரசை, எண்ணி எட்டே மாதங்களில் மக்கள் முற்றாக நிராகரித்து விட்டார்கள்.
நடந்து இருப்பது ஜனநாயகப் புரட்சி. மக்களின் மவுனப்புரட்சி. டெல்லி மாநிலத்தில் மட்டும் அல்ல, காஷ்மீரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை மதச்சார்பற்ற தன்மைக்கு உலைவைக்க முற்பட்டுவிட்ட நரேந்திர மோடி அரசுக்கு எதிரான மவுனப்புரட்சி அலை மக்கள் மனங்களில் எழுந்து விட்டது.
இந்தியாவிலேயே பல ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி மிகுந்த பலம் பெற்று இருந்த டெல்லி மாநிலத்திலேயே அந்தக் கட்சியின் அடித்தளம் நொறுங்கிப் போய்விட்டது; நாடெங்கும் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக மக்கள் மனதிலே எழுந்துள்ள கொந்தளிப்பை டெல்லித் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டி இருக்கின்றன.
மக்கள் ஆதரவை இழந்துவிட்ட நரேந்திர மோடியின் மத்திய அரசு பதவி விலக வேண்டும். இந்திய ஜனநாயகத்தின் பெருமையை மேலும் உயர்த்த, நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிதாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்த வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஆட்சி நடத்த ஜனநாயகம் அனுமதிக்கிறதே என சிலர் கேட்கலாம். ஆனால் சுதந்திர இந்திய வரலாற்றில் நெருக்கடி நிலை காலத்திற்கு பிறகு ஒரு அசாதாரணமான நிலை இன்று ஏற்பட்டுள்ளது.
இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையைத் தகர்த்து, ஆணிவேரை அறுக்கும் வேலையில் மோடி அரசின் முழு ஆதரவுடன் இந்துத்துவ சக்திகள் பாசிசத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. இந்தியாவின் ஜனநாயகத்தையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாத்து வரும் அனைத்து அரண்களையும், குறிப்பாக மதச்சார்பற்ற தன்மையையும் நிர்மூலமாக்க பாரதிய ஜனதா கட்சியின் சங் பரிவாரங்கள் மூர்க்கத்தனமாகக் கொக்கரிக்கின்றன. இதற்கு மேல் மத்திய அரசாக நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா அரசு நீடிப்பது ஜனநாயகத்தை நசுக்கும் பாசிச அடக்குமுறை நாட்களாகவே ஒவ்வொரு நாளும் கடக்கும்.
எனவே நரேந்திர மோடி அரசு தானாக விலகாவிட்டால் அந்த அரசுக்கு எதிராக மக்களின் மவுனப்புரட்சியை முன்னெடுக்க ஜனநாயக முற்போக்கு சக்திகள் அறவழியில் போராட்டங்களை விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், வணிகர்கள் என அனைத்துக் களங்களிலும் தொடர வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் கருத்துக் கணிப்புகளையும் கடந்து ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றியை பெற்றிருக்கிறது. மொத்தமுள்ள 70 இடங்களில் 65 இடங்களை வென்று ஆட்சி அமைப்பது சாதாரணமான ஒன்றல்ல. ஆளும்கட்சியின் அனைத்து பலங்களையும் மீறி அசாதாரணமான வெற்றியை குவித்துள்ள அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆம் ஆத்மிக் கட்சியின் வெற்றிக்கான காரணங்களை அலசி ஆராயத் தேவையில்லை. அதன் வெற்றிக்கான காரணம் மிகவும் எளிமையானது. அரசு நிர்வாகத்தில் ஊழல் மலிந்து கிடந்த நிலையில், மாற்றம் வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் மக்களின் மனக் குமுறல்களை உணர்ந்திருந்தார்; உணர்வுகளை மதித்தார். இதற்கெல்லாம் மேலாக தங்களின் எதிர்பார்ப்புகளை அர்விந்த் கெஜ்ரிவால் நிறைவேற்றுவார் என்று மக்களும் நம்பினார்கள்…. அதனால் ஆட்சியை அவரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். ஆம் ஆத்மியின் வெற்றி ரகசியம் இதுதான்.
அதேநேரத்தில் இந்த வெற்றியை அர்விந்த் கெஜ்ரிவால் பொறுப்புடன் கையாள வேண்டும்; கடந்த காலங்களில் செய்தது போன்ற தவறுகளை அவர் மீண்டும் ஒருமுறை செய்துவிடக்கூடாது. இந்த அளவுக்கு பெரிய வெற்றி எனக்கு அச்சத்தைக் கொடுத்திருக்கிறது என்று அர்விந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பதில் இருந்தே அவர் மக்கள் விரும்பும் ஆட்சியைத் தருவார் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது’ என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
பலமொழிகள் பேசும் மக்களைக் கொண்ட டெல்லி மக்கள் கொடுத்தத் தெளிவானத் தீர்ப்பு என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார். இது குறித்து தா.பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில், டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி கேஜ்ரிவால் தலைமையில் பெற்றுள்ள வெற்றி வகுப்புவாத, பிளவு சக்திகளுக்கு எதிராக பலமொழிகள் பேசும் மக்களைக் கொண்ட தில்லி மக்கள் கொடுத்தத் தெளிவானத் தீர்ப்பு. ஒரு வகையில் இந்தியப் பெருமக்களின் பொதுவான அபிப்ராயத்தை வெளியிடுவதாக அமைந்துள்ளது.
ஆளும் கட்சியான பா.ஜ.க தனது முழு அதிகார பலத்தையும், பிரச்சார பலத்தையும், பணபலத்தையும் பயன்படுத்தியும் பரிதாபமான தோல்வியை தலைநகரிலேயே பெற்றிருப்பது தலையில் விழுந்த அடிக்குச் சமமாகும்.
வகுப்புவாத அபாயம் தலைதூக்கிய நேரத்தில் தில்லி மக்கள் கொடுத்துள்ள தீர்ப்பு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுக்கு நம்பிக்கையையும், ஊக்கத்தையும் கொடுத்துள்ளது.
மிகச் சரியான தீர்ப்பை வழங்கிய டில்லி மக்களுக்கும் அதை உறுதிப்படுத்திய ஆம் ஆத்மி கட்சிக்கும் அதன் தலைவர் அரவிந்த கேஜ்ரிவாலுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை வெற்றி பெற்றதையடுத்து இந்த தேர்தல் முடிவு மக்களுக்கு கிடைத்த வெற்றி. பழி வாங்கும் அரசியல், எதேச்சதிகாரம், மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை பரப்புதல் போன்றவற்றுக்கு எதிரான தீர்ப்பு என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும் போது தற்போதைய அரசியல் சூழ்நிலையில் டெல்லி தேர்தல் முடிவு திருப்பு முனையானது. ஜனநாயகத்தில் அரசியல் பழிவாங்கும் போக்குக்கு இடமில்லை என்பதை காட்டியுள்ளது. இந்த மாற்றம் இப்போதைக்கு அவசியமான ஒன்று கூறியுள்ளார்.