செல்வ களஞ்சியமே – 83
ரஞ்சனி நாராயணன்

குழந்தைகளை நல்லவிதமாக நன்னெறிப்படுத்துவதற்கு சில எளியமுறைகள்:
- குழந்தையின் வயதுக்கும் வளர்ச்சிக்கும் தகுந்தவாறு சின்ன சின்ன வேலைகளை செய்யப் பழக்குங்கள். கூடவே நீங்கள் இருந்து உதவி செய்யுங்கள். ‘வா..நாம ரெண்டுபேருமா உன் பொம்மைகளை அடுக்கலாம்; ஷூக்களை எடுத்து அலமாரியில் வைக்கலாம். உன் துணிகளை அடுக்கலாம்’ என்பது போல சிறிய வேலைகளை இரண்டு வயதுக் குழந்தைகளுக்குப் பழக்கலாம். உடனடியா அந்தக் குழந்தை செய்யத் தொடங்கவில்லை என்றாலும், நாளடைவில் நீங்கள் சொல்வதற்கு முன்னமேயே அதுவாக பொம்மைகளை அடுக்க ஆரம்பிக்கும். உடனே குழந்தையைப் பாராட்டுங்கள்.
- ஒன்றிலிருந்து பத்துவரை எண்ணுவேன்; அதற்குள்
- சில வீடுகளில் பெரியவர்களாக வளர்ந்த குழந்தைகள் கூட அம்மாவிற்கு கூடமாட எந்த வேலையும் செய்ய மாட்டார்கள். ‘காப்பி சாப்பிட்ட டம்பளர் கூட எடுத்து வைக்க மாட்டாள்’ என்று பெருமையாக அம்மா சொல்வார். இது பெருமைப்படக்கூடிய விஷயம் இல்லை. நம் வீட்டுவேலைகளை நாம் செய்வது கேவலமான விஷயம் இல்லை. வீட்டை சுத்தமாக வைத்திருப்பது, வருகிறவர்களை ‘வாருங்கள் ‘ என்று கூறி வரவேற்பது எல்லாம் நல்ல பழக்கங்கள். இவற்றை ஆரம்பத்திலிருந்தே குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். இந்த நல்ல பழக்கங்கள் அவர்கள் பெரியவர்களாகி தனியாக இருக்க நேரும்போதும் கைகொடுக்கும். பலருடனும் சுலபமாகப் பழக உதவும்.
- குழந்தை தவறு செய்யும்போது அந்தத் தவறை மட்டுமே கண்டியுங்கள். குழந்தையை அல்ல. அதேபோல புகழும்போதும் அந்த செய்கையை மட்டும் புகழுங்கள். தவறு செய்த குழந்தையை கண்டித்தவுடன் அந்த விஷயத்தை அங்கேயே அப்படியே மறந்துவிடுங்கள். திரும்பத்திரும்ப சொல்லிக் காட்டாதீர்கள். நீங்கள் தவறு செய்வதில்லையா? அதுபோலத் தான் இதுவும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
- அப்போதைய தவற்றை மட்டுமே சொல்லித் திருத்துங்கள். பழைய தவறுகளை சுட்டிக்காட்டாதீர்கள்.
- சின்னச்சின்ன பரிசுகள் கொடுங்கள். நல்ல பிள்ளையாக இருப்பதால் என்ன நன்மை என்று குழந்தைக்குப் புரியும். தினசரி வேலைகளைக் கூட குழந்தை உற்சாகமாகச் செய்ய பரிசுகள் உதவும். ‘குளிச்சுட்டு வந்தவுடனே சாக்லேட்’ என்று சொல்லுங்கள். குளிக்க வேண்டும் என்பது கண்டிஷன். ‘நீ குளிச்சேன்னா சாக்லேட்’ என்று சொல்லாதீர்கள். ‘குளிக்கலைன்னா?’ என்று குழந்தை கேள்வி கேட்கும்படி கண்டிஷன் போடக்கூடாது. குளிச்சவுடனே நானும் நீயுமா ‘சோட்டா பீம்’ பார்க்கலாம்’ என்று சொல்லுங்கள்.
- காலையில் எழுந்தவுடன் என்னென்ன செய்ய வேண்டும்; சாப்பிட்டவுடன் என்னென்ன செய்யவேண்டும்; படித்தவுடன், மாலையில் விளையாடிவிட்டு வந்தவுடன் என்று வேலைகளை செய்யப் பழக்குங்கள். சிறிது நாட்களில் நீங்கள் சொல்லாமலேயே அவர்களே செய்யத் தொடங்குவார்கள். அதுவே பழக்கமாக எத்தனை வயதானாலும் மாறாத வழக்கங்களாக குழந்தையின் மனதில் படிந்துவிடும்.
- குழந்தைகளிடம் எனர்ஜி அதிகம். அதை சரியான முறையில் செலவழிக்கக் கற்றுக்கொடுக்கவில்லை என்றால் குழந்தைகளிடம் பிடிவாதம், அழுகை இதெல்லாம் அதிகமாகும். உங்களைப் படுத்துகிறது என்றால் அதற்கு வேறு வேலை இல்லை செய்வதற்கு என்று பொருள்.
- ஒரு வேலையை முடிக்க வேண்டும் என்றால் ‘பத்து எண்ணுவதற்குள் முடித்து விடு’ என்று சொல்லுங்கள். இதில் இரண்டு பலன்கள். குழந்தை வேலையை முடிக்கும். ஒன்று இரண்டு எண்ணக் கற்றுக்கொண்டு விடும்!
- ‘நான் உள்ள போய் உனக்கு படிக்கறதுக்கு ஒரு புத்தகம் கொண்டு வரேன். நீ பத்து வரைக்கும் எண்ணு. அதற்குள்ள அம்மா வந்துடுவேன்’ என்று சொல்லுங்கள். இந்த மாதிரியான ரோல்–மாறுதல் குழந்தை ரொம்பவும் ரசிக்கும்.
- இன்னொரு முறை. நீங்கள் எண்ணாமல் குழந்தையிடம் கடியாரத்தைக் காண்பியுங்கள். ‘இப்போது பெரிய முள் 5இல் இருக்கிறது; 10க்கு வருவதற்குள் இந்த வேலையை முடித்துவிடு என்று சொல்லுங்கள். இது சற்று பெரிய குழந்தைகளுக்கு உதவும். அதாவது எண்களை அடையாளம் கண்டுகொள்ள முடிந்த குழந்தைகளுக்கு.
- சிலசமயங்களில் குழந்தை மிகவும் முரண்டு பிடித்து, உங்கள் கட்டுப்பாட்டை மீறிவிட்டது என்றால் தண்டிக்கவும் தயங்காதீர்கள். என்ன தண்டனை கொடுக்கலாம்? துறுதுறுப்பாக ஓடிவிளையாடும் குழந்தைக்கு சும்மா உட்கார வேண்டும் என்பதுதான் தண்டனை. கையைக் கட்டிக்கொண்டு சுவற்றைப் பார்த்து ஒரு ஐந்து நிமிடம் உட்கார வேண்டும் என்று சொல்லுங்கள். கடியாரத்தில் எத்தனை நேரம் என்பதைக் காண்பித்துவிடுங்கள். கொஞ்சம் அசைந்தால் கூட தண்டனை நேரம் அதிகரிக்கப்படும் என்று முதலிலேயே எச்சரிக்கை செய்யுங்கள். தண்டனை நேரத்தை நீங்களும் தீவிரமாகக் கடைப்பிடியுங்கள். கொஞ்சுவது எப்படியோ அப்படியே தண்டனையும் என்பதை குழந்தை புரிந்துகொள்ளும்.
- கதை சொல்லுவது, புத்தகம் படிப்பது இவற்றை தினசரி நடைமுறையில் கொண்டு வாருங்கள். மதிய நேரத்திலோ இரவில் உறங்குவதற்கு முன்போ புத்தகம் படித்துக் காண்பியுங்கள். சாப்பிடும்போது கதை சொல்லுங்கள்.
- குழந்தை படிக்க கற்றுக்கொள்ளுமுன் பெற்றோர்கள் புத்தகம் படித்துக் காட்டலாம். நிறைய படங்கள் உள்ள புத்தகங்களை வாங்குங்கள். கதையைவிட படங்களைப் பற்றி நிறையச் சொல்லுங்கள். எழுத்துக்களை விட வண்ணவண்ணப் படங்கள் குழந்தைகளின் மனதை கவரும். அந்தப் படங்களை வைத்து நீங்களே பல கதைகளை உருவாக்கலாம். உங்கள் கற்பனைக்கு வானமே எல்லை.
- சின்னசின்னப் பாட்டுக்கள் கற்றுக்கொடுக்கலாம். எந்தக் குழந்தையும் ‘பாட்டு சொல்லித் தருகிறேன், வா’ என்றால் வந்து உட்காராது. குழந்தை விளையாடிக்கொண்டிருக்கும்போது நீங்கள் பாடிக் கொண்டிருங்கள். காதாலே கேட்டுக்கேட்டே கற்றுக் கொள்ளும் குழந்தை.
- மிக முக்கியமாக ஒன்றை நாம் நம் குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டும். அதுதான் தேசப்பற்று. தேசப்பற்று நம்மெல்லாருக்கும் இரத்தத்தில் ஊறிக் கிடப்பது. சுதந்திர தினம், குடியரசு தினத்தன்று நமது தேசியக்கொடியை வாங்கி குழந்தையின் சட்டையில் குத்தி விடுங்கள். டெல்லியில் நடக்கும் இராணுவ மற்றும் மாநிலங்களின் அணிவகுப்பை நீங்களும் குழந்தையுடன் உட்கார்ந்து பார்வையிடுங்கள். தேசியக் கொடி ஏற்றும்போதும், தேசியகீதம் பாடும்போதும் எழுந்து நில்லுங்கள். குழந்தைக்கும் இந்த மரியாதைகளை சொல்லிக் கொடுங்கள்.
உங்கள் குழந்தை உங்கள் வீட்டிற்கு மட்டுமல்ல இந்த நாட்டிற்கும் ஒரு சிறந்த குடிமகனாக வளர இந்த நல்ல பழக்கங்கள் உதவும்.
அடுத்த வாரம் சிந்திப்போம்……!
சோதனை கருத்துரை
மிக அருமையாக சொன்னீர்கள். வீட்டிற்கும் , நாட்டிற்கும் நல்ல குழந்தையாக வளர பெற்றோர் வளர்ப்பதில்தான் இருக்கிறது.
வாழ்த்துக்கள் அருமையான கட்டுரைக்கு.
வாங்க கோமதி!
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!
“……………………… அன்னை வளர்ப்பதிலே”
அருமை.
வாங்க ஸ்ரீராம்! ஒருவழியாக நான்குபெண்கள் தளம் திறக்க வந்ததா? வருகைக்கும், படித்துப் பாராட்டியதற்கும் நன்றி!