கல்பாத்தி எஸ். அகோரம் வழங்கும் “ஏ.ஜி.எஸ். என்டர்டைன்மென்ட்” நிறுவனம், “அனேகன்” என்ற தமிழ்ப்படத்தைப் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. ‘கனா கண்டேன்’, ‘அயன்’, ‘கோ’, ‘மாற்றான்’ போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய கே.வி. ஆனந்த் இயக்கத்தில், விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தில் பல புதுமைகளைக் காணலாம்.
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் முதன்முறையாக தனுஷ் கதாநாயனாக நடித்திருக்கிறார். ஓர் இடைவேளைக்குப் பிறகு, வெள்ளித்திரையில் தன் முத்திரையை மீண்டும் அழுத்தமாகப் பதிக்கும் விதத்தில், மிக முக்கிய பாத்திரம் ஏற்றிருக்கிறார், நவசர நாயகன் கார்த்திக். மும்பையைச் சேர்ந்த ‘அமைரா தஸ்தூர்’ தனுஷுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமாகிறார். இவரின் திறமையான நடிப்பு தனுஷுக்கு ஒரு சவாலாகவே அமைந்துள்ளது.
இவர்களுடன், தலைவாசல் விஜய், முகேஷ் திவாரி, ஆஷிஷ் வித்யார்த்தி, ஐஸ்வர்யா தேவன், ஜெகன் போன்றவர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் பங்களித்துள்ளனர். ஓம் பிரகாஷ் (களவாணி, வாகை சூடவா, ஆரம்பம்) ஒளிப்பதிவு செய்ய, கிரணின் கலை அமைப்பில், ஆன்டனி படத்தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
கே.வி. ஆனந்தின் முந்தைய படங்களுக்கு பல ஹிட் பாடல்களை வழங்கிய ஹாரிஸ் ஜெயராஜ், அனேகனுக்காக ஆறு ஹிட் பாடல்களை வழங்கியுள்ளார். ஒவ்வொரு பாடலும் வித்தியாசமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. தனுஷ் நடிக்கும் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பது இதுவே முதல் முறை.
இப்படத்தின் பாடல்களை, ”பத்மபூஷண்” வைரமுத்து, சி.எஸ். அமுதன், கபிலன் வைரமுத்து, மற்றும் ரோகேஷ் ஆகியோர் எழுதியுள்ளனர்.
சண்டைக் காட்சிகளை “கனல்” கண்ணன்” மிரட்டலாக எடுத்துள்ளார்.
கே.வி. ஆனந்தின் முந்தைய படங்களில் பணியாற்றிய இரட்டை எழுத்தாளர்கள் சுபா, இத்திரைப்படத்துக்கும் அவருடன் இணைந்து கதை, திரைக்கதை அமைத்து வசனம் எழுதியிருக்கிறார்கள்.
காதலும், நகைச்சுவையும், பொறிபறக்கும் சண்டைக் காட்சிகளும் பின்னிப்படர்ந்த கதையில் தனுஷ் இதுவரை காணப்படாத வெவ்வேறு தோற்றங்களில் தோன்றி கலக்குகிறார்.
பாடல்கள் மட்டுமின்றி, “அனேகன்” படத்தின் படத்தின் பல முக்கியமான காட்சிகளும், பர்மா, மலேஷியா, வட அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் படம்பிடிக்கப்பட்டுள்ளன.
திருட்டுப்பயலே, சந்தோஷ் சுப்ரமணியம், மாசிலாமணி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், பலே பாண்டியா, மதராஸ பட்டினம், எங்கேயும் காதல், அவன் இவன், வேலூர் மாவட்டம், யுத்தம் செய், மாற்றான், தெனாலிராமன் போன்ற பல வெற்றிப்படங்களைத் தயாரித்த “ஏ.ஜி.எஸ். என்டர்டைன்மென்ட்” நிறுவனம், “அனேகன்” திரைப்படத்தைத் தயாரித்து, பெருமையுடன் வழங்குகிறது.
படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து, பின்னணி இசை சேர்ப்பு மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. வெகுவிரைவில் உலகெங்கிலும் ரசிகர்களின் அபிமான திரையரங்குகளில் அனேகன் திரையிடப்படும்.