ஜெயந்தி நடராஜன், முன்னாள் தமிழக முதல்வர் பக்தவச்சலத்தின் பேத்தி. நான்கு தலைமுறைகளாக இவர்களுடைய குடும்பம் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வருகிறது. ராஜீவ்காந்தி கொலைப் பின் வெளிச்சத்துக்கு வந்தவர் ஜெயந்தி நடராஜன். அதன் பிறகு, காங்கிரஸ் பிளவுபட்டபோது மூப்பனாருடன் தமிழ் மாநில காங்கிரஸில் இணைந்து அமைச்சரானார். தமிழ் மாநில காங்கிரஸ், தாய்க் கட்சியுடன் இணைந்தபோது சோனியாவின் கவனம் பெற்றார் ஜெயந்தி. வழக்கறிஞராகவும், ஆங்கிலப் புலமையும் பெற்றிருந்த ஜெயந்தி காங்கிரஸின் செய்தித் தொடர்பாளராக சிறப்பாக செயல்பட்டார். இதற்காக தேடிவந்தது சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பணி. ஒடிசா, ஜார்கண்ட் மாநிலங்களில் அமையவிருந்த சுரங்க நிறுவனங்களுக்கு சுற்றுச் சூழல் காரணங்களுக்காக இவர் அனுமதி மறுத்ததாகவும் அதன் காரணமாகவே அமைச்சர் பணியிலிருந்து கட்சித் தலைமை அவரை விலகச் சொன்னதாகவும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இவர் அனுமதி தர மறுத்ததால் இந்திய தொழில் துறைக்கு ரூ,30 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டப்பட்டது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக ஜெயந்தி நடராஜன் அறிவித்தார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீது அவர் சரமாரியாகக் குற்றம்சாட்டினார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘2011-இல் நான் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக்கப்பட்டேன்.காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, சில பெரும் நிறுவனங்களுக்கு சூற்றுச்சூழல் தொடர்பாக தடையில்லாச் சான்றிதழ்கள் வழங்க வேண்டாம் என என்னிடம் வலியுறுத்தினார். இதை கடிதங்கள் வாயிலாகவும், இமெயில் வாயிலாகவும், அவரது அலுவலக நிர்வாகிகள் வாயிலாகவும் வலியுறுத்தினார். அவற்றைச் செய்தேன். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெற்றன. அனைத்துக்கும் நானே பொறுப்பேற்றுக் கொண்டேன்.
இந்த நிலையில், 2013-ஆம் ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதி அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் என்னை அழைத்தார். என்னைக் கட்சிப் பணிக்குச் செல்ல வேண்டும் என்றும், உடனே அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் கூறினார். நானும் உடனே பதவியை ராஜிநாமா செய்தேன். அப்போது, சோனியா காந்தியும், பிரதமர் சொல்வதைக் கேளுங்கள் என்று என்னிடம் கூறினார்.
அதன் பிறகு, டெல்லியில் நடைபெற்ற இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின் கூட்டத்தில், ராகுல் காந்தி பேசியபோது, சுற்றுச்சூழல் துறை சார்பில் அனுமதி கொடுப்பதில் தாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்றார். இந்தப் பேச்சைக் கேட்டதும், அவரைத் தொடர்பு கொண்டு பேச முற்பட்டேன். ராகுல் காந்தி வேலை பளு இருப்பதாகக் கூறினார். அதன் பிறகும் பேச முடியவில்லை.
அதோடு, ராகுல் காந்தியின் அலுவலகத்தில் இருந்து, ஜெயந்தி நடராஜன் கட்சிப் பணிக்காக அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படவில்லை என்றும், முறைகேட்டில் ஈடுபட்டது போலவும் செய்திகள் வெளிவந்தன. மேலும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டேன். இதுதொடர்பாக சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் பலமுறை விளக்கம் கேட்க முயற்சித்தேன். ஆனால், அனுமதி கிடைக்கவில்லை.
சுற்றுச்சூழல் துறையில் எந்த முறைகேட்டிலும் நான் ஈடுபடவில்லை. அப்படி நிரூபிக்கப்பட்டால், தூக்கு தண்டனையைக்கூட ஏற்கத் தயாராக உள்ளேன். எனவே காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன். எந்தக் கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை. காங்கிரஸ் கட்சி மீண்டும் அழைத்தாலும் மறுபரிசீலனை செய்யும் எண்ணம் இல்லை என்றார் அவர்.
ஜெயந்தி நடராஜன் விலகியதால் காங்கிரஸூக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
கடந்த காங்கிரஸ் கூட்டணி அரசில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன் காங்கிரஸிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமை மீதும் குற்றம்சாட்டியுள்ளார். இந்த திடீர் ஞானோதயம் மோடியின் அறிவுரையால் ஏற்பட்டதா? அல்லது மோடியின் பயமுறுத்தலால் ஏற்பட்டதா? என்பது தெரியவில்லை. 1984-இல் காங்கிரஸில் இணைந்த ஜெயந்தி, கட்சிக்காக எதுவும் செய்யாமல் 1986 முதல் 2013 வரை 27 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். நான்கு தலைமுறையாக தனது குடும்பம் காங்கிரஸூக்கு உழைத்ததாக ஜெயந்தி கூறியுள்ளார். 1967-இல் காங்கிரஸின் தோல்விக்கும் இவரது குடும்பம்தான் காரணம் என்பதை மறுக்க முடியாது.ஜெயந்தியின் தாத்தா பக்தவத்சலம் ஆட்சியில், ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் உணர்வா ளர்கள் சிட்டுக் குருவிகளைப் போல சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இதனால்தான் 1967-இல் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. காங்கிரஸிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள ஜெயந்திக்கு தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான காங்கிரஸ் கட்சியினர் சார்பில் கோடானகோடி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் விலகியதால் இனி காங்கிரஸூக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.
பதவி விலகும்போது அப்பழுக்கற்ற காங்கிரஸ் தலைவர்கள் மீது சேற்றைவாரி இறைப்பதைவிட நன்றிகெட்ட செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. ஜெயந்தியை யார் மன்னித்தாலும் காங்கிரஸ் தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள். கங்கை தூய்மையாகிறதோ இல்லையோ, ஜெயந்தி விலகியதால் காங்கிரஸ் பல மடங்கு தூய்மைப்படும். எங்கிருந்தாலும் வாழ்க என அவரை வாழ்த்துகிறேன் என இளங்கோவன் தெரிவித்துள்ளார்.