தமிழக அரசு நேற்று கொண்டாடிய குடியரசு தினவிழாவில் தமிழகத்தின் பல்வேறு நலத்திட்டங்களை பறைசாற்றும்விதமாக வாகன அணிவகுப்பு நடைபெற்றது. அதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படங்கள் இடம்பெற்றது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து, ‘குடியரசு தினவிழா அணிவகுப்பில் ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் உருவப்படங்கள் இடம் பெற்றது அவமானகரமானது; இந்தியாவுக்கு இழுக்கு என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேபோல் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் கிரண்பேடி, குடியரசுதினக் கொண்டாட்டத்தின் போது முன்வரிசையில் அமர்ந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த்சர்மா, கிரண்பேடிக்கு எந்தத் தகுதியின் அடிப்படையில் முன்வரிசையில் இடமளிக்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பினார். தேர்தல் ஆணையம் இதனைக் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இது தொடர்பாக டிவிட்டர் இணையதளப் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள ஆம்ஆத்மியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆதிஷி மர்லேனா, முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்புக் கூட விடுக்கப்படாத நிலையில், கிரண்பேடி முன்வரிசையில் அமரவைக்கப்பட்டிருக்கிறார் என கூறியுள்ளார்.
ஏற்கனவே குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் அழைப்பு அனுப்பாதது குறித்தும் சர்ச்சை எழுந்த நிலையில் பாஜக டெல்லி முதல்வர் வேட்பாளர் கிரணுக்கு முன்வரிசை இருக்கை அளிக்கப்பட்டிருக்கிறது.