
இந்தியாவின் புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்டான ஆர்.கே. லட்சுமண் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 94. சிறுநீரக நோய்த்தொற்றால் உறுப்புகள் செயலிழந்த நிலையில் கடந்த 18-ம் தேதி புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
ராசிபுரம் கிருஷ்ணசுவாமி அய்யர் லட்சுமண் என்ற பெயருடைய ஆர்.கே. லட்சுமண், மைசூரில் பிறந்தவர். பிரபல எழுத்தாளர் ஆர்.கே. நாராயணனின் இளைய சகோதரரான இவர் ஆரம்ப காலத்தில்,’தி இந்து’ நாளிதழில் வெளியான ஆர்.கே.நாராயண் சிறுகதைகளுக்கு ஓவியங்கள் வரையத் தொடங்கினார். அதன் பிறகு மைசூரில் இயங்கிய “கொரவஞ்சி’ என்ற கன்னடப் பத்திரிகைக்கும், உள்ளூர் செய்தித் தாள்களுக்கும் கேலிச் சித்திரம் வரைந்து வந்தார். அதன் பிறகு “டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகையில் 1951-ஆம் ஆண்டு கார்ட்டூனிஸ்ட்டாகச் சேர்ந்த லட்சுமண், சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு பணியாற்றினார். அரசியல், நாட்டு நடப்பு உள்ளிட்ட விஷயங்களை பக்கம், பக்கமாக எழுதி விமர்சித்து வந்த காலகட்டத்தில், தனது கேலிச் சித்திரத்தின் மூலம் அரசியல் சூழல்களை எளிமையாக விளக்கிய பெருமை ஆர்.கே.லட்சுமணுக்கு உண்டு. அவர் உருவாக்கிய “பொதுஜனம்’ என்ற கதாபாத்திரம், மும்பையில் சிலையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘யு செட் இட்’ என்ற தலைப்பில் அவர் வரைந்த கேலிச் சித்திரங்கள் நாடு முழுவதும் பேசப்பட்டன.
பத்ம விபூஷண், பத்ம பூஷண், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் சிறந்த கார்ட்டூனிஸ்ட்டுக்கான பி.டி.கோயங்கா விருது,ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் தங்கப் பதக்கம் உள்பட பல்வேறு விருதுகளை ஆர்.கே.லட்சுமண் பெற்றுள்ளார். பத்திரிகை மற்றும் இலக்கியத் துறையில் சிறந்த பங்களிப்பு வழங்கியவர்களுக்கான மகசேசே விருதினையும் ஆர்.கே. லட்சுமண் பெற்றுள்ளார்.
‘ஹோட்டல் ரிவியேரா’, ‘தி மெசஞ்சர்’ உள்ளிட்ட நாவல்களையும் அவர் எழுதியுள்ளார். ஆர்.கே.லட்சுமணின் சுயசரிதையான ‘தி டனல் ஆஃப் டைம்’ நூல், மராத்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
கடந்த 1985-ஆம் ஆண்டு பிரிட்டனில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில், ஆர்.கே.லட்சுமணின் கேலிச் சித்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பிரிட்டனில் இந்தியர் ஒருவரின் கேலிச் சித்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது அதுவே முதல் முறை.
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட அவர், அதிலிருந்து மீண்டு வந்து திரும்பவும் கேலிச் சித்திரங்கள் வரையத் தொடங்கினார்.மறைந்த ஆர்.கே.லட்சுமணுக்கு கமலா என்ற மனைவியும் ஸ்ரீனிவாசன் என்ற மகனும் உள்ளனர்.