இந்தியாவை ஆசியாவில் முன்னிலைப்படுத்தி லாபம் தேட முயற்சிக்கிறது அமெரிக்கா என சீனா பத்திரிகைகள் கட்டுரைகள் எழுதி வருகின்றன். குடியரசு தின கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள 3 நாள் பயணமாக இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகையை ஒட்டி மேற்கத்திய ஊடகங்கள் இந்தியாவை ஆசியாவில் முன்னிலைப்படுத்த அமெரிக்க முயற்சிப்பதாக எழுதியிருந்தன. ஆசிய நாடுகளில் தனது ஆதிக்கத்தை விரிவாக்க விரும்பும் அமெரிக்கா, இந்தியாவை கூட்டாளியாக்க தன்னுடைய நிலைப்பாடுகளில் இருந்து இறங்கி வருகிறது என்றும் எழுதியிருந்தன.
இந்நிலையில், இந்திய குடியரசுத் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் லி கெகியாங் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அவர்கள் தனித்தனியாக விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அமெரிக்காவுடனான இந்தியாவின் நெருக்கம், இந்திய-சீன உறவில் பாதிப்பை ஏற்படுத்தாது என தாங்கள் நம்புவதாகவும், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பிளவு ஏற்படுத்த நினைக்கிற அமெரிக்கச் சதிக்கு இந்தியா இரையாகிவிடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தியாவும், சீனாவும் பழமையான நாகரிகத்தை கொண்டவை. இந்தியாவின் சாதனைகள் மற்றும் வளர்ச்சியில் சீனா பெருமகிழ்ச்சி கொள்கிறது. அமைதி மற்றும் வளர்ச்சியில் உயர்மட்டநிலையை அடைய செய்வது தொடர்பாக ஒத்துழைப்பு நட்புறவை மேம்படுத்த இந்தியாவுடனான ஒருங்கிணைந்த முயற்சிகளை செய்ய சீன விரும்புகிறது என ஜின்பிங் கூறியுள்ளார்.