அரசியல், தமிழ்நாடு

விதிமுறைகளை மீறி தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: ராமதாஸ் குற்றச்சாட்டு

_MG_1391விதிமுறைகளை மீறி தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாகவும், மாணவர் சேர்க்கையை முறைப்படுத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் …

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் இரண்டாம் பருவத் தேர்வுகளுக்கான முடிவுகளே முழுமையாக அறிவிக்கப்படாத நிலையில், அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை தனியார் பள்ளிகள் தொடங்கி விட்டன.

சில பள்ளிகளில் கடந்த திசம்பர் மாதமே மாணவர் சேர்க்கை முடிவடைந்துவிட்டது.

தமிழகத்தைப் பொறுத்தவரை மாநிலப் பாடத்திட்டம், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் ஆகிய பாடத் திட்டங்களை பின்பற்றும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஏப்ரல்& மே மாதங்களில் தான் மேற்கொள்ளப் பட வேண்டும். மத்திய இடைநிலைக் கல்வி வாரிய(சி.பி.எஸ்.இ) பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் மார்ச் மாதத்திற்குப் பிறகு தான்
மாணவர் சேர்க்கைத் தொடங்கும். மெட்ரிக் பள்ளிகளில்  ஏப்ரல் 4 ஆம் தேதிக்கு முன்பாக விண்ணப்பங்கள் கூட வழங்கக்கூடாது என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் இம்மாதம் 3 ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. ஆனால், இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனியார் பள்ளிகள் இப்போதிலிருந்தே மாணவர் சேர்க்கையை மேற்கொண்டு வருகின்றன.

இதற்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்காக முதல்நாள் இரவிலிருந்தே பள்ளிக்கூட வாசலில் இருந்து பல கிலோ மீட்டர் தொலைவுக்கு பெற்றோர்கள் காத்துக் கிடக்கும் காட்சிகள் ஊடகங்களில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டு தான் இருக்கின்றன.

அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு விண்ணப்பத்திற்கு ரூ.500 முதல் ரூ.1,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தின் புகழ்பெற்ற பள்ளிகளில் நன்கொடை, கட்டிட நிதி என பல்வேறு  பெயர்களில் ரூ.1 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை பிடுங்கப்படுகிறது. இதுதவிர கல்விக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.50,000 முதல் ரூ.75 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. பல பள்ளிகளில் மழலையர் வகுப்பில் குழந்தைகளை சேர்ப்பதற்காக அக்குழந்தைகளிடமும், அவர்களின்  பெற்றோர்களிடமும் நேர்காணலும், ஆண்டு வருவாய் குறித்த விசாரணையும் நடக்கின்றன.

இந்த விதிமீறல்களும், கல்விக் கட்டணக் கொள்ளைகளும் வெளிப்படையாகவே நடக்கும் போதிலும் இதையெல்லாம் தமிழக அரசு கண்டு கொள்வதில்லை என்பது தான் வருத்தம் அளிக்கும் உண்மை ஆகும். அது என்ன மாயமோ…. மந்திரமோ…. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் இதுவரையிலான 45 மாதங்களில் ஒரு பள்ளி மீது கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எந்த பள்ளியும் தவறே செய்யவில்லை என்று கூறமுடியாது. தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளை வெளிப்படையாகவே நடப்பது அனைவருக்கும்  தெரிகிறது. அதன் பிறகும் எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாததன் மர்மத்தை அரசு தான் விளக்க வேண்டும்.

விதிகளை மீறும் பள்ளிகள் மீதும், கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் பள்ளிகள் மீதும் பெற்றோர் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், பல இடங்களில் பள்ளி நிர்வாகங்கள் மீது புகார் கொடுத்த பெற்றோர்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, கண்ணுக்கு நேராக கட்டணக் கொள்ளை நடைபெறும் போது பெற்றோர் புகார் கொடுத்தால் மட்டும் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறி அரசு அதன் கடமைக் கண்ணை மூடிக்கொள்வது பொறுப்பை தட்டிக் கழிக்கும் செயலாகும்.

தவறு செய்யும் பள்ளி நிர்வாகங்களைக் காப்பாற்றும் நோக்கம் கொண்ட தமிழக அரசின் இந்த அணுகுமுறை கடுமையாக கண்டிக்கத்தக்கது. தனியார் பள்ளிகளின் விதிமீறல்கள் மற்றும் கட்டணக் கொள்ளைக்கு எதிராக நான் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பள்ளிக்கல்வித் துறை என்ற அமைப்பு இருந்தாலும் அது ஊழலில் திளைக்கிறது; செயல்படவில்லை என்பதையே இது காட்டுகிறது.

தனியார் பள்ளிகளில் இப்போதே மாணவர் சேர்க்கை நடத்தி 100% இடங்களும் நிரப்பப்படுவதால் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி அருகமைப் பகுதிகளைச் சேர்ந்த ஏழைக் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் பறி போகின்றன. இது ஏழைக் குழந்தைகளின் கல்வி பெறும் உரிமையை பறிக்கும் செயலாகும். இதைத் தடுக்க அனைத்து மாநிலப் பாடத்திட்டங்களைப் பின்பற்றும் பள்ளிகளில் ஏப்ரல் மாதத்திலும், மத்தியப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் மார்ச் மாதத்திலும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

ஏழை, பணக்காரர்கள் வித்தியாசம் இன்றி அனைவருக்கும் இடம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் கல்வி மாவட்ட அளவில் ஒற்றைச் சாளர முறையில் பள்ளிக் கல்வித்துறையே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்; பள்ளிக்கு அருகில் எவ்வளவு தொலைவில் மாணவர்கள் வசிக்கிறார்கள் என்பது மட்டுமே மாணவர் சேர்க்கைக்கான ஒற்றை அளவீடாக இருக்க வேண்டும்; இந்த விதிமுறைகளை ஏற்காத பள்ளிகளை அரசே ஏற்று நடத்துவது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்க ஆட்சியாளர்கள் தயங்கக்கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.