திமுக தலைவர் மு.கருணாநிதி
மொழிப் போர்த் தியாகிகள் நினைவு நாள் – வீர வணக்க நாள் – அந்த நாளை, கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கடைபிடித்து வருகிறோம். அந்த நாளில் தமிழகத்தின் ஒவ்வொரு நகரிலும், கழகப் பேச்சாளர்கள் கலந்து கொண்டு, மொழிப்போரிலே கழகம் ஈடுபட்ட வரலாற்றை நினைவுபடுத்தி வருகிறார்கள். அது போல இந்த ஆண்டும் தமிழகம் முழு வதிலும் வீர வணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
பேச்சாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ள கழக மாணவரணிச் செயலாளர், தம்பி இள. புகழேந்தி விடுத்துள்ள அறிக்கையில், நான் எழுதிய கவிதை ஒன்றைத் தான் தொடக்கமாகக் கொண்டுள்ளார்.
ஆம்,
“அடலேறு மொழித் தமிழே – இன்பக்
கடலேறு மலைத் தமிழே – சோலை
மடலேறு சுவைத் தமிழே – நீ என்
உடலேறி உயிரேறி வாழ்விக்கின்றாய்;
வணங்குகிறேன்”
– என்பது தான் அந்தக் கவிதை.
1965ஆம் ஆண்டு கழகம் நடத்திய அந்த மொழிப் போரின் ஐம்பதாம் ஆண்டு நிறைவுதான் 2015. அதாவது மொழிப்போர் வரலாற்றின் பொன் விழா!
ஆனால் அதற்கு முன்பே 1937-38ஆம் ஆண்டிலேயே மொழிப்போர் என்பது தொடங்கி விட்டது.அப்போது எனக்கு வயது பதினான்குதான். திருவாரூர் உயர்நிலைப் பள்ளியிலே நான் மாணவன். அப்போ திருந்த ஆட்சியாளர்கள் கல்வி நிலையங்களில் இந்தி கட்டாயப் பாடம், இந்தி படித்து அதில் போதிய மதிப்பெண் பெற்றால்தான் அடுத்த வகுப்புக்குச் செல்ல முடியும் என்று ஓர் ஆணையைப் பிறப்பித்த போது, அதனை எதிர்த்து தமிழகமே போர்க் கோலம் பூண்டது. அப்போது பள்ளி மாணவனாக இருந்த நான், கையிலே ஒரு பதாகையை ஏந்திக் கொண்டு புறப்பட்டு விட்டேன். அதில் ,
“வாருங்கள் எல்லோரும் இந்திப்
போருக்குச் சென்றிடுவோம்; வந்திருக்கும்
இந்திப் பேயை விரட்டித் திரும்பிடுவோம்!
ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்! நீ
தேடி வந்த கோழையுள்ள நாடிதல்லவே;
வீரத் தமிழ் கொஞ்சும் நாட்டிலே – நாங்கள்
சாரமில்லாச் சொற்கள் ஏற்க மாட்டோம் வீட்டிலே!”
என்று நானே எழுதிய கவிதை வரிகள்! அந்தக் கவிதை வரிகளைப் பாடிக் கொண்டே தேரோடும் திருவாரூர் வீதிகளிலே மாணவர் பட்டாளத்தை உடன் அழைத்துக் கொண்டு பேரணி ஒன்றை நடத்தினேன். அந்த நாளே, என்னை அரசியலில், பொது வாழ்க்கை யில் அடி எடுத்து வைக்கச் செய்த நாள். என்னையும் ஒரு கவிஞனாக்கிய நாளும் அந்த நாள்தான்! 1938இல் தொடங்கிய எனது அரசியல் பயணம், இதோ 92 வயதிலும் தொடருகிறது – அதே உணர்வுகளோடு இது மேலும் தொடரும்!
1950இல் நிறைவேற்றப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தில் 15 ஆண்டுகளுக்குள் அதாவது 1965ஆம் ஆண்டுக்குள் ஆங்கிலம் இருந்த அத்தனை இடத் திலும், இந்தி மொழியே இருக்கும் என்கிற வகையில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் சட்டம் இயற்றப்பட்டு விட்டதும், அதுபற்றி அவ்வப்போது இந்தி பேசாத மாநில மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்ததும் அனை வருக்கும் தெரிந்தவைதான். 1937ஆம் ஆண்டின் இந்தி எதிர்ப்புச் சரித்திரம் 1957ஆம் ஆண்டில் தமிழகத்தில் மீண்டும் சுழன்றது. அடுத்தடுத்துப் படை எடுத்து வந்த பாரசீகர்களின் ஒவ்வொரு போராட்டத்திலும், கூடுதலான பலத்தோடு மோதிப் பொருதிய கிரேக்க மக்களைப் போல, 1937ஆம் ஆண்டைக் காட்டிலும், அதிகப்படியான பலத்தோடும், வேகத்தோடும், உறுதியோடும் இந்தியை தமிழகத்தில் நுழைய விடாமல் தடுத்த பெருமை நம்முடைய கழகத்திற்கு உண்டு.
அதன் காரணமாக 1957 செப்டம்பர் 21 அன்று திருவண்ணாமலையில் “இந்தி எதிர்ப்பு மாநாடு” நடத்தப்பட்டது. அந்த மாநாட்டின் நடவடிக்கைகளும், முடிவுகளும்தான் இன்றளவும் இந்தியை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் நமக்கெல்லாம் பலத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மாநாட்டுக்கு துறவி அருணகிரி அடிகள் தலைமை தாங்க, சி.வி.எம். அண்ணாமலை திறந்து வைக்க, ப.உ. சண்முகம் வரவேற்புக் குழுச் செயலாளராக இருந்தார். பேரறிஞர் அண்ணா அவர்கள் அன்று பேசுவதற்கு எடுத்துக் கொண்ட நேரத்தைப் போல, வேறு எந்த மாநாட்டிலும், நிகழ்ச்சிகளிலும் எடுத்துக் கொண்டதில்லை.
அதன் பின்னர் 1963ஆம் ஆண்டு ஜூன் 8, 9, 10 ஆகிய நாட்களில் கழகத்தின் தலைமைச் செயற்குழுவும், பொதுக்குழுவும் கூட்டப்பட்டன. இந்தியை எதிர்த்துப் போராட்டத்தை நெடுங்காலம் நடத்திடத்தக்க அளவுக்கு செயல் திட்டங்களை வகுப்பதற்காக, அந்தப் பொதுக் குழு அமைத்த போராட்டக் குழுவுக்கு என்னைத்தான் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். 1953இல் நடைபெற்ற சிதம்பரம் மாநாட்டில் கல்லக்குடிப் போராட்டத்திற்குத் தலைவராக என்னை அண்ணா அவர்கள் அறிவித்த போது, எனக்கேற்பட்ட அளவிலா மகிழ்ச்சியே, பெரிதென அதுவரை கருதியிருந்த நான், இந்தி எதிர்ப்புப் போராட்டச் செயல் திட்டக் குழுவின் தலைவராக என்னைத் தேர்ந்தெடுத்ததும், பொதுக் குழுவினருக்கு நன்றி கூறவே திணறிடும் அளவுக்கு மகிழ்ச்சியிலே ஆழ்ந்தேன். அந்தத் தீர்மானத்தின் இறுதிப் பகுதியை மீண்டும் நினைவு கூர வேண்டுமென்றால், “ஆட்சி மொழிகள் மசோதாவும், அரசாங்க உத்தரவுகளும் திட்டங்களும் இந்தித் திணிப்பைத் தீவிரப்படுத்துகின்ற காரணத்தால், நமது மொழி உரிமைகளைக் காக்கவும், இந்தி ஆதிக்க ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தவும், நம்மை இரண்டாந்தரக் குடிமக்களாக்கும் சூழ்ச்சியை எதிர்த்து ஒழிக்கவும், தென்னக மக்கள் உரிமையை நிலைநாட்டவும், தி.மு. கழகம் நேரடிப் போராட்டத்தைத் துவக்கி விட வேண்டும் என இப்பொதுக் குழு முடிவெடுக்கிறது. இதற்கெனத் தோழர் மு. கருணாநிதி அவர்கள் தலைமையில், தோழர் என்.வி. நடராசன் அவர்களும், மாவட்டச் செயலாளர்களும், மாநில அமைப் பாளர்களும் கொண்ட ஒரு போராட்டக் குழுவை இப்பொதுக்குழு அமைக்கிறது”” என்ற அந்தத் தீர்மானத்தை முன் மொழிந்தவர் யார் தெரியுமா? இன்றளவும் எனக்கு இளைய அண்ணனாக இருந்து துணை புரிந்து வரும் நம்முடைய இனமானப் பேராசிரியர் அன்பழகனார் அவர்கள்தான்!
பொதுக் குழு முடிந்து, சென்னை எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் நடைபெற்ற பொதுக் குழுத் தீர்மான விளக்கக் கூட்டத்தில் நான் பேசும்போது,”திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தப் போகிற மிக முக்கியமான போராட்டம் இது. நம்முடைய நாடு மட்டுமல்ல – இந்தத் துணைக் கண்டமே – அனைத்துலகமே – மிக ஆவலோடு எதிர்பார்க்கின்ற இந்த மிகப் பிரம்மாண்டமான போராட்டத் திட்டத்தை வகுக்கவும் வகைப்படுத்தவும் ஆலோசனைகளை மேற்கொள்ளவும் உருவாகியிருக் கின்ற குழுவிலே தலைமை வகித்து நடத்துகின்ற பொறுப்புக்கு – நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை என் வாழ்நாளில் பெற்றுள்ள பெரும் பாக்கியமாகக் கருது கிறேன்” என்று தொடங்கித்தான் பேச்சையே அமைத்துக் கொண்டேன்.
அந்தக் கூட்டத்தில் பேசும்போதுதான், பேரறிஞர் அண்ணா அவர்கள், “நமது போராட்டம் வெள்ளிக் கிழமை ஆரம்பித்துப் புதன்கிழமை தலை தேய்த்து முழுகுவதற்கு வீட்டிற்கு வந்து விடக் கூடியதாக இருக்காது. கர்ப்பிணியாக இருக்கும் மனைவியை விட்டு விட்டுச் சிறை செல்பவர்கள் “குழந்தை பிறந்து தொட்டிலில் படுத்திருக்கும்போது சிறையிலிருந்து வந்து விடலாம்” என்று கருத வேண்டாம். இந்தப் போராட்டம் ஒரு நித்திய நிகழ்ச்சியாக – மாதக் கணக்கில் ஆண்டுக் கணக்கில் நடைபெறும்.இந்தப் போராட்டத்தில் ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் ஈடுபட்டால் போதாது. ஆர்வமும் அவசரமும் கலந்தால் பயனில்லை. யாருடைய ஆர்வம் நீடித்திருக்கிறதோ – யார் யாருடைய வீர உணர்ச்சி நிலைத்திருக்குமோ – யார் யார் கஷ்ட நஷ்டங்களை ஏற்றுக் கொள்ள முடியுமோ, அப்படிப் பட்டவர்கள்தான் போராட்டத்தில் ஈடுபடலாம்”” என்று முரசறிவித்தார்.
நம்முடைய போராட்ட அறிவிப்பு எந்த வகையில் விளைவுகளை ஏற்படுத்தியது என்றால், ஐதராபாத்தில் ஜூலை 21 அன்று விழா ஒன்றில் பேசிய லால்பகதூர் சாஸ்திரி, “தி.மு. கழகத் தலைவர்கள் இந்தியை எதிர்த்து நடத்தவிருக்கும் போராட்டத்தைக் கை விட வேண்டும். இந்தி ஆட்சி மொழி ஆவதை எதிர்த்து அவர்கள் போராட முடிவு செய்துள்ளது மிகவும் வருந்தத்தக்கதாகும். இந்தி, கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலத்தை அகற்றி அந்த இடத்தைப் பிடித்துக் கொள்ளும், இந்தி நமக்கு அந்நிய மொழி அன்று”” என்று பேசினார். இதற்குப் பதிலளித்த அண்ணா அவர்கள், தனது அறிக்கையில், “ஆளுங்கட்சியின் இதயத்தில் இரத்தப் பசி கொண்ட ஓநாய் குடியிருக்கிறது.அதன் பசி அடங்குவதற்கு எவ்வளவு இரத்தம் வேண்டு மானாலும் தருவதற்குத் தி.மு. கழகம் தயாராக இருக்கிறது. எங்களுடைய இரத்தத்தைச் சுவைத்த பிறகாவது அதன் வெறி அடங்கி ஓடி விடுமா என்பதைப் பரிசோதித்துப் பார்க்கும் விதத்திலேயே தி.மு. கழகத் தின் கிளர்ச்சி இருக்கும். இன்னல்களை ஏற்றுக் கொள்வோம், எல்லாத் தியாகங்களையும் புரிவோம்”” என்றெல்லாம் அண்ணா அறிவித்தார்.
4-8-1963 அன்று சேலத்திலும், 25-8-1963 அன்று தஞ்சையிலும், 22-9-1963 அன்று திருநெல்வேலியிலும் இந்தி எதிர்ப்பு மாநாடுகள் நடைபெற்றன.நெல்லையில் நடைபெற்ற மாநாட்டில்தான் அண்ணா, “போராட்ட இரயில் புறப்பட்டு விட்டது, இந்தி ஆதிக்கம் நீடிக்கிற வரை இடையிலே அது நிற்காது”” என்று முழக்கமிட்டார். 23-9-1963 அன்று தேனியில் நடைபெற்ற விழாவில், அண்ணா அவர்கள் போராட்டக் குழுத் தலைவனான எனக்கு வெள்ளி வீரவாளையும், கேடயத்தையும் பரிசாக வழங்கியதோடு, பாராட்டு மொழியாக, “என்னைப் பொறுத்தவரையில் கருணாநிதி யின் தொண்டிலேயே மறக்க முடியாத நிகழ்ச்சி எதுவென்றால் திருவண்ணாமலை வெற்றிக்கு உழைத்தது மட்டுமல்ல; மாநகராட்சி நம் வசம் ஆக அவர் ஆற்றிய தொண்டும் அல்ல; அவர் சிறு வாலிபராகக் கொள்கைப் பிரச்சாரம் நடத்திய போது, அவர் பிரச்சாரத்தால் முறுக்கேறிய மாற்றுக் கட்சியினர் அவரை அடி அடியென அடித்து,””ஆள் தொலைந்து விட்டான்” எனக் கருதும் அளவுக்கு உதைத்து, ஆளுங்கட்சியினர் கொட்டத்தை அம்பலப்படுத்தும் போக்கிரிச் சிறுவனை ஒழித்து விட்டோம்”” என இரத்தம் பீறிடும் அளவிற்கும் புதுவையிலே காட்டுமிராண்டித்தனமாக வெறித் தனமாக தாக்கிய சம்பவம்தான்.
வண்ணங்கள் பல இருந்தாலும், அந்த வண்ணங்கள் மூலம் நல்ல ஓவியத்தை உருவாக்க ஓவியப் புலவன் தேவை. அது போல ஒரு கட்சியில் பல தரப்பட்டவர்கள் இருந்தாலும், அவர்களைச் சிறப்பாகச் செயல்பட வைக்கும் திறமை உள்ளவர்கள் வேண்டும். தம்பி கருணாநிதி அந்தச் சிறப்புக்களை நன்கு பெற்றவர்களில் ஒருவர். கலைத் துறையிலே கருணாநிதி பெற்ற புகழ் கொஞ்ச நஞ்சமல்ல; “பராசக்தி” மூலம் அவர் அடைந்த புகழோடு மேலும் மேலும் பல திரைப்படங் களாலும் அவர் புகழடைந்தார். கருணாநிதி அந்தப் புகழை நம்பி, அந்தத் துறையிலேயே சென் றிருந்தால் பணத்தோடும் வாழலாம், பகட்டோடும் வாழலாம். ஆனால் அவர் கொண்ட இலட்சியத்தை மறந்து விடவில்லை.கழகத்தை மறவாது, எந்தப் புகழுக்கும் மயங்காது பணியாற்று பவர் கருணாநிதி” – என்றெல்லாம் பேசியது மறக்கக் கூடிய வார்த்தைகளா?
இந்தி எதிர்ப்பு அறப்போராட்டத்தில் ஒரு கட்டமாகத் தான் திருச்சி ரயில்வே சந்திப்பிற்கு எதிரேயுள்ள திறந்த வெளியில் சிங்கத் தமிழன் சின்னச்சாமி என்ற கழகக் காளை தீக்குளித்து மாண்டார். அந்தத் தியாகச் சுடரின் திருவுருவப் படத்தினை 6-12-1964இல் திருச்சி தேவர் மன்றத்தில் நான் திறந்து வைத்தேன். பேரறிஞர் அண்ணா 25-1-1965 அன்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். குளித்தலையில் கூட்டத்தை முடித்துக் கொண்டு கோவை கூட்டத்தில் கலந்து கொள்ளப் பயணம் செய்து கொண்டிருந்த என்னை இரவு ஒரு மணி அளவில் கரூர் – பசுபதிபாளையத்தில் வழியிலே வந்து கைது செய்தனர். மற்றும் தலைவர் களும் இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்டனர். அந்த ஆண்டு குடியரசு தினம் துக்க நாளாகக் கழகத்தினால் கடைப்பிடிக்கப்பட்டது. சிவலிங்கம் என்ற கழகத் தோழர் சென்னையில் 26-1-1965 அன்றும், 27-1-65 அன்று விருகம்பாக்கத்தில் அரங்கநாதன் என்ற கழகத் தோழரும், கீரனூரில் முத்துவும் இந்தித் திணிப்பை எதிர்த்து தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். சிதம்பரத்தில் மாணவர்கள் மீது பாய்ந்த ஆட்சியினரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இராசேந்திரன், இளங்கோவன் என்ற மாணவர்கள் பலியானார்கள். 1965 பிப்ரவரி தொடக்கத்தில் நாங்கள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட போதிலும், இரண்டாவது வாரத்தில் தமிழகத்திலே துப்பாக்கிக் குண்டுகளின் வெடிச் சத்தங்களே விண்ணைப் பிளந்தன. ஒரே நாளில் ஒன்பது இடங்களில் துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்றன. ரயில்கள் நிறுத்தப் பட்டன. பேருந்துகள் கொளுத்தப்பட்டன. தந்திக் கம்பிகள் அறுக்கப்பட்டன. தண்டவாளங்கள் பெயர்க் கப்பட்டன. மாயவரம் சாரங்கபாணி உடலுக்குத் தீ வைத்துக் கொண்டு கல்லூரிக்கு எதிரிலேயே கருகிச் செத்தான். இந்தப் பட்டியலில் அய்யன்பாளையம் வீரப்பன், ரங்க சமுத்திரம் முத்து, விராலிமலை சண்முகம், பீளமேடு தண்டபாணி போன்றவர்களும் இணைக்கப்பட வேண்டியவர்களாவர். 1965ஆம் ஆண்டு பிப்ரவரி 16. மறக்க முடியாத நாள். அன்று தான் என்னை சென்னையிலே கைது செய்து, லாரியிலே ஏற்றி பாளையங்கோட்டை வரை கொண்டு சென்று, தனிமைச் சிறையிலே அடைத்தார்கள். என்னைத் தொடர்ந்து 25-3-1965 அன்று சென்னையில் முரசொலி மாறன் இந்தியப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டார் என்ற செய்தி பாளைச் சிறையிலே இருந்த என்னை வந்தடைந்தது. இதற்கிடையே சிறையிலே இருந்த என்னைப் பார்க்க அண்ணாவே வருகிறார் என்று கூறினார்கள். அண்ணா சிறையிலே என்னை வந்து பார்த்ததும், பேசியதும், அன்று நெல்லையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், “என் தம்பி, கருணாநிதி தனிமைச் சிறையில் கிடக்கும் இந்த இடம் தான் இனி எனக்கு யாத்திரை செய்ய வேண்டிய புனித பூமி” என்று கூறியதும், அதன் பிறகு “காஞ்சி” இதழிலே என்னைச் சந்தித்தது பற்றி அண்ணா எழுதியதும், என்னாலோ, கழகத்தினாலோ மறக்கக்கூடிய நிகழ்ச்சிகளா? இவற்றையெல்லாம் நினைவு கூர வேண்டிய நாள் தான் ஜனவரி 25, வீர வணக்க நாள்.
1938லும் 1965லும் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி கூறிக் கொண்டே போகலாம். நேரம் தான் இடம் தரவில்லை. நம்முடைய போராட் டத்தின் விளைவாகத் தான் இந்திய நாடாளுமன்றத்தில் பிரதமர்கள் எல்லாம் நமக்கு வாக்குறுதி அளித் தார்கள். 1959ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 7ஆம் நாள் பண்டித நேரு கூறும்போது, “(இந்தி) திணிப்பு கூடவே கூடாது. இரண்டாவதாக, காலவரம்பற்ற நீண்ட காலத்திற்கு – அது எவ்வளவு காலம் என்பது எனக்குத் தெரியாது – ஆங்கிலத்தை கூட்டு ஆட்சி மொழியாக நீடிக்க விரும்புகிறேன். மக்கள் விரும்புகிற வரை ஆங்கிலத்தை நீடிக்க வைப்பேன். ஆங்கிலம் இனி நீடிக்கக் கூடாது என்கிற முடிவினை நான் இந்தி பேசும் மக்களிடம் விட மாட்டேன். அதை முடிவு செய்ய வேண்டியது இந்தி பேசாத மக்களே”” என்றார். மீண்டும் நேரு அவர்கள் 1963ஆம் ஆண்டும் நாடாளுமன்றத் திலே இந்தி பேசாத மக்களின் பூரண சம்மதத்தைப் பெறுகிற வரையில் ஆங்கிலம் அல்லது இந்தி நிலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது என்றார். இதே உறுதி மொழிகளைத் தான் 1965ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் தேதியன்று பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரி அவர்களும், அதன் பின்னர் இந்திரா காந்தி அம்மையார் அவர்களும் தெரிவித்தார்கள். ஆனால் அந்த மூன்று பிரதமர்களும் இந்தி பேசாத மக்களுக்கு அளித்த உறுதிமொழியை இன்றைய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காப்பாற்றுவாரா?அல்லது இந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பைக் கொண்டு வர முனையும் சிலருடைய தூண்டுதலுக்கு இரையாகி விடுவாரோ என்ற அச்சம் ஏற்பட்டு வரும் நேரத்திலேதான் இந்த ஆண்டு வீர வணக்க நாள் நடைபெறுகிறது. அந்த உறுதிமொழியை அளிக்க வேண்டுமென்று பிரதமரை வலியுறுத்தும் நாளாக இந்த ஆண்டு அமைய வேண்டுமென்பதை தமிழ் மக்களிடையே விளக்கிக் கூறுவதைத் தான் நம்முடைய பேச்சாளர்கள் நாளைய கூட்டத்தில் முக்கியமாக வலியுறுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
முன்னாள் பிரதமர்களின் உறுதிமொழி, இந்நாள் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களால் காப்பாற்றப் படுமா?