தொலைபேசி இணைப்பு தொடர்பான குற்றச்சாட்டு குறித்து ஆடிட்டர் குருமூர்த்தியுடன் விவாதிக்கத் தயார் என முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், நீதிமன்றத்தில் நிரபராதி என நிரூபித்துவிட்டு வரும்வரை, மானநஷ்ட வழக்கு தொடர்வது பயன்தராது என்பதால் தான், ஆடிட்டர் குருமூர்த்தி மீது வழக்கு தொடரவில்லை என விளக்கமளித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் நேரடி விவாதத்துக்கு தயாரா என்ற குருமூர்த்தியின் அறைகூவலை ஏற்க தாம் தயாராக இருப்பதாகவும் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு முன், ஒரு ஐஎஸ்டிஎன் பி.ஆர்.ஐ இணைப்பின் மூலம் ஒரே சமயத்தில் முன்னூறு தொலைபேசி எண்களை குருமூர்த்தியால் இயக்கி காட்ட முடியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவ்வாறு இயக்க முடியும் என்பதை குருமூர்த்தி நிரூபித்தால், அரசியலைவிட்டே விலகுவதாக தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
மேலும், 400 கோடி ரூபாய்க்கு மேல் தொலைபேசி உபயோகித்திருந்தால், அதற்கான மீட்டர் ரீடிங்கை குருமூர்த்தி காட்டட்டும் என கூறியுள்ள தயாநிதி மாறன், அவ்வாறு செய்தால் அவருடன் நேரடியாக விவாதிக்க தயார் என அறிவித்துள்ளார். சிபிஐ தனது குற்றப்ப பத்திரிகையில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் இழப்பு இருக்கக் கூடும் என குறிப்பிட்டிருப்பதாக கூறியுள்ள தயாநிதி மாறன், 400 கோடி ரூபாய் இழப்பு என மீண்டும் மீண்டும் கூறுவதை ஆடிட்டர் குருமூர்த்தி நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.