அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையைக் கண்டித்து, கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்திய குடியரசுத் தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வருகிறார். இதற்கு பல்வேறு இயக்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் அமெரிக்க துணைத் தூதரகத்தை முற்றுகையிட புறப்பட்டபோது, போலீஸார் அவர்களை அங்கேயே தடுத்து நிறுத்தினர். இதனால், அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. சௌந்திரராஜன் தலைமை வகித்தார். பீம்ராவ் எம்.எல்.ஏ., செல்வசிங், எல்.சுந்தரராஜன், ஏ.பாக்கியம், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மு.வீரபாண்டியன், மு.சம்பத், எஸ்.ஏழுமலை, இந்திய கம்யூனிஸ்ட் (மா.லெ.). சார்பில் ஏ.சேகர், எஸ்யுசிஐ(சி) ரங்கசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தின் போது அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல் நாடு முழுவதும் கம்யூனிஸ்டுகள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கேரளாவில் மாவோயிஸ்ட்டுகள் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தினர். வயநாடு மாவட்டம் திருநெல்லி பகுதியில், கேரள வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான தங்கும் விடுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அதிகாலை, 3 மணியளவில் 2 பெண்கள் உள்ளிட்ட 6 மாவோயிஸ்ட்டுகள் விடுதிக்குள் நுழைந்து, அங்கிருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், பராக் ஒபாமாவின் வருகையைக் கண்டிக்கும் வகையிலான வாசகங்களை அவர்கள் எழுதிச் சென்றுள்ளனர்.