அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இன்று அதிகாலை மூன்று நாள் பயணமாக டெல்லி வந்தடைந்தார். ஒபாமாவுடன் அவரது மனைவி மிசேல் ஒபாமாவும் வந்தார். இவர்கள் இருவரையும் பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். ஒபாமாவின் வருகையையொட்டி தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவரின் வருகையால் தலைநகர் டெல்லி போலீசாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநகரம் முழுவதும் 15 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் போலீசார் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குடியரசு தினத்தன்று டெல்லி வான்வழியில் விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன், காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பாதுகாப்பு கருதி மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படுகிறது. அன்றைய தினம் உயரமான கட்டடங்களை மூட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. குடியரசு தின விழா நடைபெறும் பகுதியில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒபாமா அமரும் இடத்தில் மட்டும் 150 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 40 மோப்ப நாய்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. பாதுகாப்பு பணிகளை கண்காணிக்க 36 கிலோ மீட்டர் தூரத்திற்கு கேபிள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒபாமா இருக்கும் இடத்தில் இருந்து 200 மீட்டர் வரை 60 அமெரிக்க அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு டெல்லி போலீசாருடன் தொடர்பு கொள்வதற்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.
இன்று ஹைதராபாத் இல்லத்தில் ஒபாமா – மோடி கூட்டாக செய்தியாளர் சந்திந்தனர். அப்போது பேசிய இந்திய பிரதமர் மோடி, பாரபட்சம் பார்க்காமல் தீவிரவாத்தை ஒழிக்க அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவர் அமைதி, நிலைத்தன்மை, முன்னேற்றத்துக்கு இரு நாடுகளுக்கிடையே உறவு முக்கியமானது என்றார். நூற்றாண்டின் போக்கை தீர்மானிக்கும் நாடுகளாக இந்தியா-அமெரிக்கா இருக்கும் என நம்பிக்கை தெரிவித்த அவர், பாதுகாப்பு ஒத்துழைப்பை புதிய கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார். மரபுசாரா எரிசக்தி அனைவருக்கும் கிடைக்க அமெரிக்கா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இதன் பின்னர் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் 60விழுக்காடாக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும் அவர், தூய எரிசக்தி, பருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படும் என்றார். ரஷ்யாவின் நிலை குறித்து பேசிய ஒபாமா , உக்ரைன் விவகாரத்தில் ராணுவ ரீதியாக ரஷ்யாவை அணுகுவது சரியாக இருக்காது என்றும், ரஷ்யாவின் பொருளாதாரம் பலவீனமடைவதை அமெரிக்கா விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.