அரசியல், தமிழ்நாடு

பல்கலைக்கழக பணி நியமனங்களில் இடஒதுக்கீடு: குடியரசுத் தலைவர் உடனடியாகத் தலையிட தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

thirumavalavan-3பல்கலைக்கழக பணி நியமனங்களில் இடஒதுக்கீடு செய்யப்படுவதில்லை என்றும் இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த அறிக்கையில்,’தமிழகத்தில் 19 அரசு பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் பணிநியமனத்தில் அனைத்து மட்டத்திலும் முறையான இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படுவதில்லை. பல்கலைக் கழகங்களில் பயிற்றுவித்தல் மற்றும் பயிற்றுவித்தல் அல்லாத பிற பணியிடங்கள் அனைத்தையும் துணைவேந்தர் அவர்களே நிரப்பிக்கொள்ளும் அதிகாரம் படைத்த அமைப்பாகவே பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.  பணி நியமனங்களில் இடஒதுக்கீட்டை முறையாக கடைப்பிடிக்காமல் இடஒதுக்கீட்டிலேயே தகுதி உள்ளவர்களைத் தேர்வுசெய்யாமல் தலித்துகளைத் தொடர்ந்து புறக்கணிக்கும்போக்கு நீடித்துவருகிறது. அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இதுவரை 8 விழுக்காடு அளவே தலித்துகளுக்கான பணிநியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. அத்துடன், பணம், சாதி மற்றும் அரசியல் தலையீடு என்கிற அடிப்படையில் பணிநியமனங்கள் நடைபெற்று வருகின்றன.
தற்போது சென்னை பல்கலைக்கழகத்தில் அத்தகைய போக்கு கடைபிடிக்கப்பட்டதால் அங்கு செயல்பட்டு வரும் எஸ்.சி., எஸ்.டி., பணியாளர்கள் அமைப்பு நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.

குறிப்பாக, சென்னை பல்கலைக்கழகத்தில் உயிர் தொழில் நுட்பவியல் துறை, உயிர் மருத்துவ வேதியல் துறை, அணு இயற்பியல் துறை மற்றும் உட்சுரப்பியல் துறை ஆகிய துறைகளுக்கு பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் ஆகிய பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும்போது தலித்துகளுக்கான இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படவில்லை.  ஆகவேதான், எஸ்.சி., எஸ்.டி., பணியாளர்கள் அமைப்பைச் சார்ந்தவர்கள் நீதிமன்றத்தை நாடவேண்டிய தேவை எழுந்துள்ளது. மேலும், பணிநியமனங்களில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் அதிகாரம் படைத்த பதவிகளான துணைவேந்தர், பதிவாளர், வளர்ச்சி அலுவலர், தனி அலுவலர், இயக்குநர் மற்றும் தேர்வாணையர் போன்ற பதவிகளுக்கும் இடஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்காமல் காலங்காலமாகவே தலித்துகள் புறக்கணிக்கப்பட்டு அத்தகைய பதவிகளும் பணம், சாதி மற்றும் அரசியல் தலையீட்டின் அடிப்படையில் விற்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், 24 பேர் கொண்ட ஆட்சிக்குழு உறுப்பினர்கள் (சிண்டிகேட்) அடங்கிய அமைப்பிலும் தகுதியுள்ள தலித்துகளுக்கு போதிய வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. அதைப்போல, ஆட்சிப் பேரவை (செனட்) அமைப்பிலும் அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் தலித் சமூகத்தைச் சார்ந்த முதல்வர்கள் மட்டுமே இடம்பெற முடிகிறது. தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் ஒருபோதும் தலித்துகள் கல்லூரி முதல்வராக வர வாய்ப்பில்லை. ஆதலால், எண்ணிக்கையில் அதிகம் உள்ள அக்கல்லூரிகளின் முதல்வர்களே பல்கலைக்கழக ஆட்சிப்பேரவையிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.   தமிழகத்தில் உள்ள ஒரு சில பல்கலைக்கழகங்களைத் தவிர மற்ற அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இதே நிலைதான் நீடித்துவருகிறது.

எனவே, பல்கலைக் கழகங்களில் தலித்துகளுக்கான இடஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த குடியரசுத் தலைவர் அவர்களும் மேதகு ஆளுநர் அவர்களும் நேரடியாகத் தலையிடவேண்டும். அத்துடன், பல்கலைக்கழகங்களின் பணிநியமனங்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் நடைமுறைப்படுத்த மைய அரசு சட்டத் திருத்தங்களைக் கொண்டுவரவேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொள்கிறது. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குடியரசுத் தலைவர் மற்றும் மேதகு ஆளுநர் அவர்களிடம் நேரில் சந்தித்து முறையிடுவோம் எனவும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.