இந்திய வரலாற்றில் முதன்முறையாக விமான எரிபொருளை விட பெட்ரோல் விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஒட்டுமொத்த உலகிலும் இப்படி ஒரு பொருளாதார நிலைப்பாட்டை எந்த ஒரு அரசும் மேற்கொண்டிருக்குமா என்பது ஐயமே? என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வரும் நிலையில் அதற்கு இணையாக உள்நாட்டில் எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் லாபத்தை உயர்த்திக் கொள்வதற்காக பெட்ரோல், டீசல் விலையை குறைவாகவே குறைத்தன. இன்னொரு புறம் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ. 7.75ம், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.6.50ம் உயர்த்தி கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் பயன் மக்களுக்கு கிடைக்காமல் தடுத்துவிட்டது.
அதன் விளைவாகத் தான் இப்போது சென்னையில் ஒரு லிட்டர் விமான எரிபொருள் ரூ.57.45க்கு விற்கப்படும் நிலையில், பெட்ரோல் விலை ரூ.61.38 ஆக உள்ளது. மத்தியில் புதிய அரசு பதவியேற்ற புதிதில், ஜூன் 1 ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.74.60 ஆகவும், விமான எரிபொருள் விலை ரூ.76.05 ஆகவும் இருந்தது. அதன்பின் இதுவரை விமான எரிபொருள் விலையை லிட்டருக்கு ரூ.18.60 குறைத்த எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் விலையை ரூ.13.22 மட்டுமே குறைத்துள்ளன.
பொதுவாக பணக்காரர்கள் பயன்படுத்தும் பொருட்கள் மீது தான் அதிக வரி விதிக்கப்படுவது வழக்கம். ஆனால், பணக்காரர்கள் பயன்படுத்தும் விமான எரிபொருளின் விலையை பெருமளவில் குறைத்துவிட்டு, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசலின் விலையை போதிய அளவுக்கு குறைக்காமல் இருப்பது எத்தகைய பொருளாதார ராஜதந்திரம் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.
மக்களவைத் தேர்தலின் போது ஏழைகளின் நலன் காப்பதாக அறிவித்து தான் பாரதிய ஜனதா வாக்குகளை வாங்கியது. ஆனால், மத்திய அரசு எடுக்கும் முடிவுகள் வேறுமாதிரியாக இருக்கின்றன. ஒருவேளை இரு சக்கர ஊர்திகளில் செல்பவர்களைவிட விமானங்களில் செல்பவர்கள் தான் ஏழைகள் என்று கருதி இந்த முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறதா? என்பது தெரியவில்லை.
பெட்ரோல், டீசல் விலைகளையும், வரிகளையும் மறு ஆய்வு செய்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை எத்தனை விழுக்காடு குறைந்திருக்கிறதோ, அதே அளவுக்கு உள்நாட்டிலும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்து எரிபொருட்களின் விலையையும் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.