
தமது இல்லத்தில் தொலைப்பேசி இணைப்பகம் இருந்ததாக கூறுவது முற்றிலும் பொய்யானது என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தமது உதவியாளர் உட்பட மூவரை கைது செய்திருப்பது குறித்து அவர் விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர் உதவியாளர் உட்பட 3 பேரையும் தாக்கி தமக்கு எதிராக வாக்குமூலம் வாங்க சி.பி.ஐ முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். மூவரின் கைது நடவடிக்கைக்கு ஆர்.எஸ்.எஸ் அறிவுஜீவி ஒருவரே முக்கிய காரணம் என சந்தேகிப்பதாக தயாநிதி மாறன் கூறியுள்ளார். அவரை திருப்திபடுத்தவே சி.பி.ஐ நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் பேசிய அவர் தம்மை பிரபலபடுத்திக் கொள்ள ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் முயற்சிப்பதாகவும் புகார் கூறியுள்ளார். மூவரின் கைது நடவடிக்கைக்கு அரசியலும் காரணமாக இருக்கலாம் எனவும் தயாநிதி மாறன் சந்தேகம் தெரிவித்தார். திராவிட இயக்கத்தில் யார் புகழ் பெற்றாலும் ஆர்.எஸ்.எஸ்.க்கு பிடிக்காது எனவும் குறிப்பிட்டார். தமிழகத்திலோ, இந்தியாவிலோ தங்களை தவிர வேறு யாரும் அரசியலில் செயல்படக் கூடாது என்று நினைப்பதும், அப்படி செயல்பட்டால் முளையிலேயே கிள்ளி எறிய முற்படுவதும் தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வேலை என்றும் புகார் தெரிவித்தார்.
தொலைபேசி இணைப்புகள் தொடர்பான வழக்கை சட்டரீதியாக சந்திக்க தாம் தயாராக இருப்பதாகவும் தயாநிதி மாறன் கூறியுள்ளார். தாம் அமைச்சராக இருந்த போதும், தற்போதும் தம் வீட்டில் ஒரு இணைப்பு மட்டுமே இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகளுக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர் தொலைபேசியை அதிகமாக பயன்படுத்துவது சிவில் பிரச்சனை என்றார். அமைச்சர் என்ற முறையிலான பணிகளையே தாம் செய்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார். கூடுதல் கட்டணம் என்றால் அதை செலுத்த வாய்ப்பு தருவது தான் நடைமுறை என்று குறிப்பிட்ட அவர் சிவில் பிரச்சனையை வேண்டும் என்றே கிரிமினல் குற்றமாக மாற்ற முயற்சிப்பதாக கூறினார். அரசியல் காரணத்திற்காக தன்னை மட்டுமே குறிவைத்து சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
முன்னதாக பிஎஸ்என்எல் இணைப்புகளை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தயாநிதி மாறனின் முன்னாள் தனிச் செயலர் கௌதமன், சன் டிவி முதன்மை தொழில்நுட்ப அதிகாரி எஸ். கண்ணன், எலக்ட்ரீஷியன் எல்.எஸ். ரவி 3 பேரும் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை பிப்ரவரி 4 வரை நீதிமன்ற காவலில் வைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.