யூரியா விலைக்கட்டுப்பாடு நீக்கம் வேளாண்மையை அழித்து விடும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அவர், ‘யூரியா மீதான விலைக்கட்டுப்பாட்டை நீக்கவும், அதிகபட்ச விலையை உயர்த்தவும் மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இன்னொருபுறம் அனைத்து மானியங்களையும் படிப்படியாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியிருக்கிறார். மத்திய அரசின் இந்த முடிவுகள் மிகவும் தவறானவை மட்டுமின்றி கடுமையாக கண்டிக்கத்தக்கவை.
பசுமைப்புரட்சி என்ற பெயரில் விளைநிலங்களை மலடாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து உரங்கள் இல்லாமல் தொழில்முறை விவசாயம் செய்வது சாத்தியமற்றதாகி விட்டது. இந்த நிலையில், உரங்களைப் பயன்படுத்தாமல் லாபகரமாக விவசாயம் செய்வதற்கான மாற்று வழிகளைக் கண்டுபிடிக்காமல், உரத்தின் விலையை மட்டும் உயர்த்திக் கொண்டே செல்வது சரியல்ல. மத்திய அரசு இப்போது வகுத்துள்ள திட்டத்தின்படி, ஆண்டுக்கு 20% வீதம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு 60% அளவுக்கு யூரியா விலை உயர்த்தப்படவுள்ளது. இதனால், இப்போது அதிகபட்சமாக ரூ.268 ஆக உள்ள ஒரு மூட்டை யூரியாவின் விலை அடுத்த 3 ஆண்டுகளில் ரூ. 475 ஆக அதிகரிக்கும். அதன்பின்னர் விலைக்கட்டுப்பாடுகள் முழுமையாக அகற்றப்பட்டு, உர நிறுவனங்கள் விருப்பம் போல விலை நிர்ணயம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்படும். அத்தகைய சூழலில் யூரியாவின் விலை மூட்டைக்கு ரூ.600 என்ற உச்சத்தை எட்டக்கூடும் என்று வல்லுனர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நுண்ணூட்டச்சத்து அடிப்படையில் மானியம் வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதனால், மூட்டை ரூ.467க்கு விற்பனை செய்யப்பட்ட டி.ஏ.பி. உரம் மும்மடங்கு விலை உயர்ந்து ரூ.1150 க்கு விற்பனை செய்யப்படுகிறது. காம்ப்ளக்ஸ் உரம் ஒரு மூட்டையின் விலை 360 ரூபாயிலிருந்து 1075 ரூபாயாக அதிகரித்துவிட்டது. பொட்டாஷின் விலை 222 ரூபாயிலிருந்து 4 மடங்கு அதிகரித்து ரூ.835 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் யூரியாவின் விலையையும் ஆண்டுக்கு 20% வீதம் உயர்த்தினால் உழவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
நடப்பாண்டில் நெல் கொள்முதல் விலை 3.81% மட்டுமே உயர்த்தப்பட்டிருக்கிறது. கரும்பு விலை 4.76% மட்டுமே அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், யூரியாவின் விலையை மட்டும் 20% உயர்த்துவது நியாயமா? என்று கொள்கை முடிவு எடுக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் சிந்திக்க வேண்டும். வேளாண் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கச் செய்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத ஆட்சியாளர்கள் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் உரம் உள்ளிட்ட இடுபொருட்களின் விலைகளை மட்டும் உயர்த்திக் கொண்டே செல்வதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.இதேநிலை தொடர்ந்தால் வேளாண் தொழில் அடியோடு அழிந்துவிடும் என்பதை அரசு உணர வேண்டும்.
யூரியா விலை உயர்த்தப்படுவது ஒருபுறமிருக்க, உணவுப்பொருட்களுக்கான மானியம் உள்ளிட்ட அனைத்து வகையான மானியங்களையும் படிப்படியாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதுதொடர்பாக செலவு நிதி ஆணையம் அளித்துள்ள இடைக்கால அறிக்கையில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகள் வரும் நிதிநிலை அறிக்கையில் சேர்க்கப்படும் என்றும் அமைச்சர் கூறியிருக்கிறார். இந்த ஆணையத்தின் தலைவராக உள்ள ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் பிமல் ஜலான் மானியங்களுக்கு எதிரானவர். அவர் அளித்துள்ள அறிக்கையில் மானியங்களை அகற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கையும் ஏழை, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும்.
இந்தியாவை பணக்கார நாடாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் மத்திய ஆட்சியாளர்களுக்கு இருந்தால் அது வரவேற்கப்பட வேண்டியது தான். இந்த இலக்கை எட்ட வேண்டுமானால் ஒழிக்கப்பட வேண்டியது ஏழ்மை தானே தவிர ஏழைகள் அல்ல. இதை உணர்ந்து மக்களுக்கு பயனளிக்கக் கூடிய மானியங்களை ரத்து செய்யும் திட்டத்தையும், யூரியா உரத்தின் மீதான விலைக்கட்டுப்பாட்டை நீக்கும் முடிவையும் மத்திய ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும்’ என்று வலிறுத்தினார்.