மாதொருபாகன் நூலாசிரியர் பெருமாள் முருகனை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வைத்து வருவாய் அலுவலர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்:
தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் தமிழில் எண்ணற்ற கதைகள், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். கடந்த 2010-ஆம் ஆண்டு மாதொருபாகன் என்ற நாவலை அவர் எழுதினார். இந்த நாவலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயில் விழா பற்றி இந்த நாவலில் ஆசிரியர் எழுதியுள்ளார். சில குறிப்பிட்ட சமூகம், குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் இந்த நூலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்செங்கோட்டில் சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது. இந்த நிலையில், மாதொருபாகன் நூலில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்குவதாகவும், விற்காத நூலை திரும்பப் பெறுவதாகவும் நூலாசிரியர் பெருமாள் முருகன் அறிவித்தார். ஆனால், அவர் கூறியதை போராட்டக்காரர்கள் ஏற்கவில்லை.
இதையடுத்து, கடந்த 12-ஆம் தேதி நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது. அந்த அமைதி பேச்சுவார்த்தையில் பெருமாள் முருகனை நிர்பந்தம் செய்து, தான் எழுதியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வைத்து அவரிடம் எழுதி வாங்கினர்.எனவே, நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் கடந்த 12-ஆம் தேதி நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவை ரத்து செய்ய வேண்டும். மேலும், அந்த முடிவு கருத்துச் சுதந்திரத்துக்கும் எதிரானது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
“மாதொருபாகன் சர்ச்சை: வருவாய் அலுவலர் நடத்திய பேச்சுவார்த்தை முடிவை ரத்து செய்யக் கோரி வழக்கு” இல் ஒரு கருத்து உள்ளது