‘மாதொருபாகன்’ நாவல் விவகாரத்தில் அமைதிக் குழு கூட்டத்தின் முடிவை எதிர்த்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தலைவர் ச.தமிழ் செல்வன் தொடர்ந்த வழக்கில் எழுத்தாளர் பெருமாள் முருகனையும் சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சுந்தரேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்கவே அமைதிக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் அதிருப்தியுற்ற நீதிபதிகள், ‘எதை எழுதுவது, எழுதக் கூடாது என்பதை சட்டம் மட்டுமே முடிவு செய்ய முடியும். சட்டத்தை தவிர வேறு யாரும் அதைச் செய்ய முடியாது’ என்று தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கில் எழுத்தாளர் பெருமாள் முருகனையும் சேர்க்க உத்தரவிட்ட அவர்கள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.