சிறப்பு கட்டுரை
நங்கை
அநேகமாக, இதை கவுண்டர் துவங்கி வைத்திருப்பார் என்று நினைக்கிறேன். அல்லது அதற்கு முன்பாகவும் இருக்கலாம். அதாகப்பட்டது, ஒரு காமெடியன் போதுமான அளவுக்கோ அல்லது பயங்கரமாகவோ அடி வாங்கவேண்டும். அதைப் பார்த்து அரங்கம் அதிர நாம் சிரிக்கவேண்டும். இதுதான், தமிழ் சினிமா நமக்கு கற்றுக்கொடுத்த நகைச்சுவை ரசனை.
ஒரு நகைச்சுவை நடிகர், ரத்தம் சொட்டச் சொட்ட அடி வாங்கும்போதோ அல்லது தீயில் கருகி புகை மண்டலமாக நிற்கும்போதோ, நீங்கள் வாய்விட்டு சிரிக்கிறீர்கள் என்றால், நிச்சயம் உங்களை சுய பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளுங்கள். முதலில் நீங்கள் மனிதரா என்பதே சந்தேகம். அடுத்து உங்களுக்கு மனசாட்சி என ஒன்று இருக்கிறதா என்பது கேள்விக்குறி. மூன்றாவதாக நிச்சயம் நீங்கள் ரசனையற்றவர். நான்காவதாக நீங்கள் ஒரு சுயநலவாதி, ஈவிரக்கமற்றவர்.
இப்போது ‘ஐ’ படத்திற்கு வருவோம். ஒரு திருநங்கை, ஒரு மருத்துவர், ஒரு மாடல், ஒரு தொழிலதிபர் ஆகியோர் விக்ரமின் உடல் அழகை கொடூரமாக சிதைக்கிறார்கள். நாம், பரிதாபப்படுகிறோம். ஆனால், பதைபதைக்கவில்லை. ஏன் பதைபதைக்கவில்லை? ஏனென்றால் அதில் அழுத்தமில்லை. இந்த வேடத்தில் விக்ரம் எப்படி ஸ்கோர் செய்யப்போகிறார் என்பதில் மட்டுமே நம்முடைய கவனம் நிலைகொண்டிருந்தது. எனவே, விக்ரமின் அந்த கதாபாத்திரம் ஒருபோதும் நமக்கு கவலை அளிக்கக்கூடிய ஒரு நிகழ்வாக இல்லை.
சரி, இப்போது பழிவாங்கலுக்கு வருவோம். தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை, தன்னைவிட கொடூரமான நிலைக்கு ஆளாக்குகிறார் விக்ரம். அப்படி உருத்தெரியாமல் உருக்குலைந்து கிடப்பவர்களை காட்டும்போது நாம் என்ன செய்கிறோம்? வாய்விட்டு ஓட்டை லாரி மாதிரி சிரிக்கிறோம், சிரிக்கிறோம், சிரிக்கிறோம். நம் சிரிப்பை அதிகப்படுத்துவதற்கு ஒவ்வொரு காட்சியின்போதும் சந்தானம் வேறு வந்துவிடுகிறார். கொடூரமான ஒரு சம்பவத்தை பார்த்து கை கொட்டிச் சிரிக்கும் அளவுக்கு நாம் தள்ளப்படுகிறோம் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா? இதெல்லாம்தான் நகைச்சுவையா? ஆம் என்றால், ‘ஐ’ ஒரு நகைச்சுவை படம் என்று ஒப்புக்கொள்வீர்களா? ஆக, ஒரு கொடூரமான காமெடி படத்தை பிரம்மாண்ட படம் என்று காதில் பூ சுற்றி இருக்கிறார் ஷங்கர்.
‘ஐ’ மட்டுமல்ல. பெரும்பாலான படங்களின்போதும் நாம் இப்படித்தான் இருந்தோம், சிரித்தோம். வடிவேலு ரத்தம் சொட்டச் சொட்ட “அ..ம்மெ” என்று அழும்போதெல்லாம் நாம் சிரித்தோம். அது மட்டுமா? நடிகை ஆர்த்தியை தனுஷுக்கு பெண் பார்க்க வைத்து, அந்த வக்கிரத்தை குடும்பத்தோடு கண்டு சிரித்தோம். ‘ஓகே ஓகே’வில் ஒரு பெண்ணை காரித் துப்பும்போதும் சிரித்தோம். சிரித்த நீங்களெல்லாம் அவ்வளவு அழகு..smile emotion. ஆக, நாம் எவ்வளவு கேவலமாக நடந்துகொண்டுள்ளோம் என்பதை எப்போதுமே நாம் உணராமல் இருக்கிறோம். காரணம் சினிமா. அது, அந்த அளவிற்கு உங்களை முட்டாளாக்கி வைத்திருக்கிறது. இதுவரை. இது உங்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். ஏனென்றால், நல்லவை எதுவுமே சொல்லிக்கொடுக்கப்படுவதில்லை. மேற்கண்ட காட்சிகளின்போது, கொஞ்சமும் குற்ற உணர்வின்றி நீங்கள் சிரித்தீர்கள் என்றால், உங்கள் குழந்தையும் அப்படித்தானே சிரிக்கும். எனவே, தெளிவு பெறுவோம். அடுத்தவனை துன்பப்படுத்தி இன்பம் காண்பதை அவமானம் என கருதுவோம்.
நங்கை, சென்னையில் வசிக்கும் பத்திரிகையாளர்.