ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க தமிழக அரசு, மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டுவது ஏற்க முடியாது. தடையை நீக்குவது தொடர்பாக பல்வேறு வகையில் மத்திய அரசை, தமிழக அரசு நிர்பந்தம் செய்து வருகிறது. ஆனால் ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக திமுக தவறான கருத்துகளைப் பரப்பி வருகிறது.முந்தைய மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழர்களின் பண்பாடு, உரிமை ஆகியவைப் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். ஆனால் ஜல்லிக்கட்டு என்பது மேற்கத்திய கலாசாரம் என மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறிய கருத்து ஏற்புடையதல்ல. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்பதில் சமத்துவ மக்கள் கட்சி உறுதியாக உள்ளது. எனவே ஒரு மாத காலத்திற்குள் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ச.ம.க சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்’ என தெரிவித்தார்.