திருவள்ளுவர் தினத்தில் மதுவை ஒழிக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரி அனந்தன் கோரிக்கை விடுத்தார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘நாடு முழுவதும் ஜனவரி 16-ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை கொண்டாட மத்திய அரசு தீர்மானித்துள்ளதைக் குறிப்பிட்டு, உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிலையங்களில் இந்நாளைக் கொண்டாட வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளதை பாராட்டுகிறேன். திருவள்ளுவர் கள்ளுண்ணாமை என்று ஓர் அதிகாரமே இயற்றியுள்ளார். கள் குடித்தவரை பெற்ற தாயே வெறுப்பாள் என்றும், மது குடித்தவரை இறந்தவராகவே எண்ண வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, திருவள்ளுவர் திருநாளில், கிராம ஊராட்சிகள், நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில், வள்ளுவர் வாக்குக்கு ஏற்ப, எங்கள் எல்லையில் மது தயாரிக்கவோ, விற்கவோ கூடாது என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என குமரிஅனந்தன் வலியுறுத்தியுள்ளார்.