டெல்லி பேரவைக்கு வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதன் வாக்குகள் பிப்ரவரி 10-ஆம் தேதி எண்ணப்படும்’ என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் அறிவித்தார். இதேபோல, ஸ்ரீரங்கம் உள்பட பல்வேறு மாநிலங்களில் காலியாகவுள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு பிப்ரவரி 13-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
டெல்லியில் 12 தனித் தொகுதிகள் உள்பட மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கு பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதன்படி, தேர்தலுக்கான அறிவிப்பு ஜனவரி 14-ஆம் தேதி வெளியிடப்படும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 21; மனுக்கள் பரிசீலனை ஜனவரி 22; வேட்புமனுவைத் திரும்பப் பெற கடைசி நாள் ஜனவரி 24 .
டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடைபெற்றது. இதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில், காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் முதல்வரானார். ஆனால், 49 நாள்கள் மட்டுமே ஆட்சி நடத்திய ஆம் ஆத்மி, ஜன் லோக்பால் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு பேரவையில் ஆதரவு இல்லாததற்கு தார்மிகப் பொறுப்பேற்று அரவிந்த் கேஜரிவால் ராஜிநாமா செய்தார்.
அதன்பிறகு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், பாஜக ஆட்சியமைக்க பல்வேறு குழுக்கு வழிகளில் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இறுதியாக டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கின் பரிந்துரைப்படி, டெல்லி சட்டப்பேரவையைக் கலைக்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த ஆண்டு உத்தரவிட்டார். இதையடுத்து, டெல்லி சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடத்தும் அறிவிப்பை தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது.