தேனி மாவட்டம், கம்பம் வ.உ.சி. திடலில் நடைபெற்ற நியூட்ரினோ திட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு தலைமையேற்று வைகோ பேசினார். அப்போது, ‘உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் பற்றிப் பேசும் பிரதமர் மோடி, தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு அனுமதி வழங்கி ரூ.1500 கோடி நிதியும் ஒதுக்கி உள்ளார். இதை குஜராத், வட மாநிலங்களில் நிறுவ முடியுமா? ஏற்கெனவே அஸ்ஸாம், கேரளம், கர்நாடகத்தில் விரட்டி அடிக்கப்பட்ட திட்டத்தை தேனி மாவட்டத்தில் செயல்படுத்துகிறார்கள். இதில், 8 லட்சம் டன் பாறைகளை ஆயிரம் ஜெலட்டின் குச்சிகளை பயன்படுத்தி தகர்க்க உள்ளனர். இதில் வரும் ஒரு லட்சம் டன் பாறை கழிவுகளை என்ன செய்வார்கள்?
இதனால், 32 கி.மீ. தொலைவில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய ஆர்ச் அணையான இடுக்கி அணை பாதிக்கப்படும். அடுத்து முல்லைப் பெரியாறு அணையும் பாதிக்கப்படும். பூகம்பம், நிலநடுக்கம் ஏற்படும். இதனால் முதலில் பாதிக்கப்படுவது கேரளத்தின் இடுக்கி மாவட்டம்தான். அடுத்து பாதிக்கப்படுவது தேனி மாவட்டம். எனவே, தமிழர்களும், கேரள மாநிலத்தவர்களும் ஒருங்கிணைந்து போராடி நியூட்ரினோ திட்டத்தை நிறுத்த வேண்டும். நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்துப் போராடுவது குறித்து, கேரள முதல்வர் உம்மன் சாண்டியையும், எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தனையும் விரைவில் சந்திக்கவுள்ளேன் என்றார் வைகோ.