கரும்புக்கு மத்திய, மாநில அரசுகள் ஆதார விலையாக டன்னுக்கு ரூ.2,650 அறிவித்துள்ளது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர், ‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வேப்பனஅள்ளி அருகே கிடப்பில் போடப்பட்டுள்ள சிங்கிரிப்பள்ளி அணை கட்டும் பணியை விரைந்து தொடங்க வேண்டும். இதன் மூலம் அந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், பல ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறும். மந்தகதியில் நடைபெறும் கிருஷ்ணகிரி – புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணியை விரைவுபடுத்த வேண்டும். பருவ மழை பொய்த்துள்ள நிலையில், கிருஷ்ணகிரியை வறட்சி மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து ஆந்திர மாநிலம், குப்பத்துக்குச் செல்லும் வழியில் உள்ள தமிழகப் பகுதியில் காணப்படும் பள்ளத்தாக்கில் அணை கட்டுவதன் மூலம் வீணாகும் மழை நீரைச் சேமிக்க முடியும். கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கிருஷ்ணகிரி வழியாக ரயில் பாதை அமைக்காதது வருத்தம் அளிப்பதாக உள்ளது. தற்போது ஆளும் மத்திய அரசு இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றார்.