செல்வ களஞ்சியமே – 80
ரஞ்சனி நாராயணன்

இன்றைக்கு செய்தித்தாளில் ஒரு செய்தி. ரொம்பவும் யோசிக்க வைத்து விட்டது.
அதாவது இந்த சாமர்த்திய–யுகத்தை சேர்ந்த குழந்தைகள் விளையாட்டு மைதானத்தில் நேரம் செலவழிப்பதை விட வீடியோ விளையாட்டுக்களில் அதிக நேரம் கழிப்பது அவர்களது ஆரோக்கியத்தை பெருமளவில் பாதிக்கிறது; இவர்களைவிட, கிராமத்தில் அல்லது வசதிகள் குறைந்த இடத்தில் வசிக்கும் குழந்தைகள் அதிக ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள் என்பதுதான் இந்தச் செய்தியின் சுருக்கம். உடல் ஆரோக்கியம் மட்டுமில்லாமல் அதிக போஷாக்கான உணவுகளை உட்கொள்ளுவதிலும் பின்தங்கிய இடங்களில் இருக்கும் குழந்தைகள் அதிக மதிப்பெண்களைப் பெறுகிறார்களாம்.
எப்போது பார்த்தாலும் அலைபேசியில் ஏதாவது ஒரு விளையாட்டு அல்லது வீடியோ விளையாட்டுக்கள், ஆரோக்கியமற்ற குப்பை உணவுகள், எந்தவித உடற்பயிற்சியும் இல்லாத நிலை இவைகளே நகரச் சிறுவர் சிறுமியரின் இந்த ஆரோக்கியக் கேட்டிற்குக் காரணம் என்கிறது ஒரு ஆராய்ச்சி. ஒரு தலைமுறையே இந்த மாதிரி ஆரோக்கியமற்று இருக்கிறது என்று கவலைப்படுகிறார்கள் மருத்துவர்கள்.
இந்தக் கணக்கெடுப்பு சிறுவர்களின் எடை, BMI எனப்படும் உயரம் பருமன் இவற்றின் உடல்நிறை குறியீட்டெண் மற்றும் உடலின் தாங்கும் சக்தி இவைகளை வைத்து இந்தக் கணக்கெடுப்பு செய்யப்பட்டது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வு 7-17 வயதுக்குட்பட்ட நகரங்களில் வசிக்கும் சிறுவர்களில் 40 சதவிகிதம் பேருக்கு இந்தக் குறியீட்டு எண் ஆரோக்கியமானதாக இல்லை என்று சொல்லுகிறது. பெங்களூருவில் 38% குழந்தைகள் இப்படி இருக்கிறார்கள் என்றும் இந்த ஆய்வு சொல்லுகிறது. இது மிகவும் அபாயகரமானது.
எங்களுக்குத் தெரிந்த ஒரு தம்பதிக்கு குழந்தை பிறந்தது. கணவன், மனைவி இருவருமே சற்று பெரிய உருவம். குழந்தையும் அதே போல இருந்தது. வளர வளர அவனது எடையும் அளவிற்கு அதிகமாக போகத் தொடங்கியது. இப்போது 3 வகுப்புப் படிக்கும் அந்தச் சிறுவன் ஆறாம் வகுப்பு படிப்பவன் போல வளர்த்தி. எடையும் அப்படியே. 8 வயதுக் குழந்தை 20-25 கேஜி எடை இருக்கலாம். ஆனால் இந்த சிறுவன் 35 கிலோ எடை. பள்ளியிலும் அவன் மற்ற சிறுவர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானான். குழந்தையாய் இருக்கும்போது அவனது அம்மாவிற்கு உறவினர் ஒருவர் அறிவுரை செய்தாராம்: ‘முதலிலிருந்தே குழந்தைக்கு எல்லாவற்றையும் கொடுத்து வயிற்றை பெருக்கிவிடு. அப்போதுதான் பெரியவனாகும்போது நன்றாக சாப்பிடுவான்’ என்று! என்ன புத்திசாலித்தனமான அறிவுரை! வயதுக்கு அதிகமான எடை இருப்பதை உணர்ந்த இந்தக் குழந்தையின் பெற்றோர்கள் அவனை ஒரு உணவு போஷாக்கு மருத்துவரிடம் அழைத்துக் கொண்டு போனார்கள். அவனது பருமனுக்குக் காரணம் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், வெளியில் விளையாடப் போகாததுதான் என்று கண்டறிந்தனர். அவனது உணவுப் பழக்கம் மாற்றப்பட்டது. நீச்சல், டென்னிஸ் ஆகிய விளையாட்டுக்களை விளையாட ஆரம்பித்தான். இப்போது அவனது எடையில் மட்டுமல்ல மாற்றம். உடல் வலுவும் அதிகரித்திருக்கிறது.
சிறுவயதுப் பருமனை கவனிக்காமல் விட்டால் பெரியவனாகும்போதும் அந்த பருமன் தொடரும். அப்போது இளைக்க வைப்பது என்பது கடினம். குழந்தைகளின் ஆரோக்கியம் சரியில்லை என்றால் அதிகப் பருமன், டைப் 2 சர்க்கரை வியாதி இவைகளினால் குழந்தைகள் பாதிக்கப்படலாம். பெற்றோர்கள் போல பிள்ளைகள் வளர்த்தி அதிகமாக இருப்பது பொதுவாக நாம் காண்பதுதான் என்றாலும் வயதுக்கு மீறிய பருமன் நல்லதல்ல. குடும்பத்தில் பரம்பரையாக வரும் நோய்கள் தவிர, உடற்பருமனால் வரும் நோய்களும் சிறுவயதிலேயே அவர்களை பாதிக்கும். பெற்றோர்கள் நிச்சயம் இதற்குப் பரிகாரம் தேடவேண்டும்.
- ஒரு வயதுக்குக் குழந்தையாக இருந்தாலும் அதிக நெய் போட்டு சாதம் கொடுக்க வேண்டாம். ‘நன்றாக இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி இத்தனை சாதத்தை பிசைந்து ஊட்டு’ என்பார்கள் சில வீடுகளில். இது பின்னாளில் உடற்பருமனாக வாய்ப்பு இருக்கிறது. எதிலும் அளவுடன் இருப்பது நல்லது.
- குழந்தை குண்டாக இருந்தால் தான் அழகு என்கிற தவறான எண்ணம். பருமனுக்கும் ஆரோக்கியத்திற்கும் நேர் விரோதம் என்பது நினைவிருக்கட்டும்.
- குழந்தைகளை வீட்டிற்கு வெளியே விளையாட உற்சாகப்படுத்த வேண்டும்.
- பெற்றோர்கள் நிச்சயம் இதற்கான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
- குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட நேரம் ஒதுக்குங்கள். உங்களின் ஆரோக்கியமும் மேம்படும்.
- முதலில் பெற்றோர்கள் அலைபேசி, ஐ–பேட், இவைகளின் பிடியிலிருந்து வெளியே வரவேண்டும்.
- ஏதாவது ஒரு வெளி விளையாட்டுக்கு குழந்தையைப் பழக்க வேண்டும்.
- குப்பை உணவுகள் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே என்ற கட்டுப்பாடு இருக்க வேண்டும்.
- முடிந்த அளவு வீட்டு சாப்பாடு சாப்பிடப் பழக்குங்கள். கார்பன் சேர்ந்த பானங்களை அதிகம் குடிக்க விடாதீர்கள். எல்லாவற்றிலும் ஒரு எல்லை இருக்கட்டும்.
- உதாரணமாகப் பெற்றோர் இருக்க வேண்டும். சூப், பழரசம் போன்றவற்றை வீட்டிலேயே தயாரித்துக் கொடுங்கள்.
- பிட்சா பேஸ் (base) வெளியில் கிடைக்கிறது. அவற்றை வாங்கி வந்து வீட்டில் குறைந்த சீஸ், அதிகம் காய்கறிகள் என்று செய்து கொடுங்கள். குறைந்த கொழுப்புள்ள வெண்ணெய் பயன்படுத்துங்கள்.
சிறுவர்களைக் காட்டிலும் சிறுமிகள் ஒருபடி மேல் என்கிறது மேற்சொன்ன ஆராய்ச்சி. ஏனெனில் அவர்கள் எப்போதுமே தங்கள் உடல் அமைப்பில் கவனம் செலுத்துபவர்கள். இந்த உடற்பருமனுக்கு இன்னொரு காரணமாக சொல்லப்படுவது பள்ளிகளில் எந்தவிதமான வெளி விளையாட்டுக்களும் இல்லாமலிருப்பது. வாரத்தில் இரண்டு மணிநேரம் மட்டுமே வெளி விளையாட்டுக்களுக்கு என்று பள்ளிகள் ஒதுக்குகின்றன. ஆனால் சிறுவர்களுக்கு தினமும் 45நிமிட ஏதாவது ஒரு வகையான உடல் பயிற்சி தேவை.
தொடர்ந்து அடுத்த வாரமும் இதைப் பற்றிப் பேசலாம்.
“குழந்தைகளின் வயதுக்கு மீறிய பருமன் எதனால்?” இல் ஒரு கருத்து உள்ளது