இலங்கை உடனான ராஜ்ஜிய உறவு குறித்த விஷயத்தில் இந்தியாவில் எந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் அவற்றின் நிலைப்பாடு ஒரேமாதிரியானதுதான்!காங்கிரஸ், பாஜக ஐக்கியமாகும் விஷயங்களில் இலங்கை விவகாரத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். இது நேற்று கட்சியில் சேர்ந்த சாதாரண அரசியல் கட்சித் தொண்டனுக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் பல வரலாற்று சிறப்பு மிக்க அரசியல் காட்சிகளை தன் வாழ்நாளில் கண்ட வைகோவுக்கு தெரியாமல் போய்விட்டது! இலங்கை தமிழரின், தமிழக மீனவர்களின் நலனுக்காக பாஜக கூட்டணிக்கு ஓட்டளிங்கள் என்று மக்களவைத் தேர்தலில், பாஜக கூட்டணியில் தமிழகத்தில் முதலில் சேர்ந்தது மதிமுக! கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழக தாண்டி மகாராஷ்ட்ர மாநிலத்திலும்கூட பிரச்சாரம் செய்தார் வைகோ. பாஜக ஆட்சியைப் பிடித்து, நரேந்திரமோடி பிரதமராகப் பதவியேற்றபோது, அந்த விழாவில் இலங்கை அதிபர் ராஜபட்ச பங்கேற்றார். அதனால் பாஜகவுக்கு முதல் எதிர்ப்பையும் மதிமுகவே தெரிவித்தது. அதைத்தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட போதும், கைது செய்யப்பட்டப்போதும் நடவடிக்கை எடுக்காத மத்திய அரசின் போக்கு குறித்து தொடர்ந்து வைகோ விமர்சித்து வந்தார். சமஸ்கிருதம். இந்தி திணிப்பை கடுமையாக சாடினார்.
இந்த நிலையில், இலங்கையில் தமிழக மீனவர்கள் 5 பேர் மரண தண்டனையில் இருந்து விடுதலை செய்யப்பட்டபோது, தமிழக கட்சிகளும் பாராட்டிய நிலையில், வைகோ பாஜக அரசு நாடகம் ஆடுவதாகக் குற்றம்சாட்டினார். அதோடு, இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே வெற்றிபெற வேண்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தது குறித்து மாவீரர் தின கொண்டாட்டத்தின் போது பேசிய வைகோ, பிரதமர் மோடி தரம் தாழ்ந்து விட்டார் என கடுமையாக விமர்சித்தார். இதற்கு பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, “கூட்டணியில் இருந்து கொண்டே பிரதமர் மோடியை வைகோ விமர்சிப்பதை அனுமதிக்க முடியாது. இப்படியே பேசினால் வைகோ வீடு திரும்ப முடியாது’ என்று கடுமையாக பேசினார். மேலும், “பாஜக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக இருந்தால், விலகலாம்’ என்றும் ஹெச்.ராஜா கூறினார். தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் ராஜாவின் எதேச்சதிகார பேச்சு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
ராஜாவின் இந்த பேச்சு தமிழக அரசியலில் பாஜக, மதிமுக இடையே வார்த்தை போரை அதிகரித்தது. இதன் தொடர்ச்சியாக வைகோ கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் எனவும் இல்லை எனில் அவர் தூக்கி வீசப்படுவார் என சுப்ரமணிய சுவாமி கருத்து தெரிவித்தார். இதனை அடுத்து கூட்டணியில் இருந்து மதிமுக விலக வேண்டும் என மதிமுக தொண்டர்கள் வலியுறுத்தி வந்தனர். அதே சமயம் பாஜக அணியில்தான் மதிமுக இருக்கிறது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கூறி வந்தனர். இந்த நிலையில் இன்று அக்கட்சியின் உயர்மட்ட குழுக்கூட்டம் நடைபெற்றது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகியுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இலங்கை அரசுடன் தொடர்ந்து மத்திய அரசு நட்பு பாராட்டுவதற்கும் வைகோ கண்டனம் தெரிவித்தார். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மோடி அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்து வருவதாக வைகோ குற்றம்சாட்டினார். கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என மதிமுக உயர்நிலைக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சே நாளை திருப்பதி வருவதற்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. வைகோ விலகியது பற்றி கருத்து தெரிவித்துள்ள எச். ராஜா, பாஜக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியது நல்லது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் வைகோ முடிவு கூட்டணி மேளாவில் புதிய மாறுதல்களை ஏற்படுத்தலாம். அல்லது வைகோவின் வழக்கமான சொதப்பலாகவும் அமையலாம்!