சென்னை சிறுசேரியில் மென்பொருள் பெண் பொறியாளர் கொலை வழக்கில் வடமாநில இளைஞர்கள் 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. உமாமகேஸ்வரியின் உடல் அழுகிய நிலையில் கைப்பற்றப்பட்டதால் பிரேதப் பரிசோதனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்பதை நிரூபிக்க முடியாததால் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை மட்டும் தள்ளுபடி செய்து, வழிமறித்து கொலை செய்த குற்றத்துக்காக 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். ரூ.5 ஆயிரம் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் அவர் தீர்ப்பளித்தார். அரசுத் தரப்பில் அரசு வழக்குரைஞர் ஆறுமுகம் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கை நீதிபதி ஆனந்தி வெள்ளிக்கிழமை விசாரித்து தீர்ப்பளித்தார்.
போலீஸார் ஊடகங்களுக்குத் தந்த தகவல் இதோ…
‘சேலம் மாவட்டம், ஆத்தூர் ஜோதி நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியத்தின் மகள் உமா மகேஸ்வரி (23). இவர், சென்னை சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பொறியாளராக வேலை செய்து வந்தார். சென்னை மேடவாக்கத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்து பணிக்குச் சென்று வந்தார். இந்தநிலையில் 2014-ஆம் ஆண்டு, பிப்ரவரி 13-ஆம் தேதி வேலைக்குச் சென்ற உமா வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அவரது தந்தை பாலசுப்பிரமணியன் பிப்ரவரி 14-ஆம் தேதி கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்தநிலையில் 10 நாள்களுக்குப் பிறகு, சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள புதரில் உமா மகேஸ்வரியின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. போலீஸ் விசாரணையில், யாரோ அவரைக் கத்தியால் குத்திப் புதரில் வீசியிருந்தது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தமிழகத்தை பரபரப்புக்குள்ளாக்கியது.
இதற்கிடையில் தமிழக காவல்துறை முன்னாள் இயக்குநர் டி.ஜி.ராமானுஜம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்தச் சம்பவம் குறித்து உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாக கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் சுப்பையா பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி பிரிவினர் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் நாகஜோதி, துணைக் காவல் கண்காணிப்பாளர் வீரமணி உள்ளிட்டோர் தீவிர விசாரணை மேற்கொண்டு, மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த உத்தம் மண்டல் (24), ராம் மண்டல் (21) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், தனது நண்பர் உஜ்ஜல் மண்டலுடன் சேர்ந்து இவர்கள் இருவரும் உமா மகேஸ்வரியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், ரயிலில் ஏறி தப்ப முயன்ற உஜ்ஜல் மண்டலை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இவர் காணாமல் போன நாளுக்கு முதல் நாள் பணி முடிந்து விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்த உமாவை, இம் மூவரும் கிண்டல் செய்தனர். இதில் கோபம் அடைந்த உமா, அவர்களை காலணியால் தாக்கி விட்டுச் சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சம்பவ நாள் அன்று, பணி முடிந்து வந்த அவரை வழி மறித்து கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததுடன் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக மூவரும் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்கள் மீது செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். 1200 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை நகலும் வழங்கப்பட்டது.’
நமக்குள்ள கேள்வி இதுதான்…
குற்றவாளிகளே பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதை ஒப்புக் கொண்ட பிறகும் பாலியல் பலாத்கார வழக்கை தள்ளுபடி செய்திருப்பது சந்தேகத்தை கிளப்புகிறது. உண்மையிலே இவர்கள்தான் குற்றவாளிகளா என்றும் நமக்கு சந்தேகம் ஏற்படுகிறது. இந்த வழக்கை மேல் முறையீட்டுக்குக் கொண்டுபோக பெண்கள் அமைப்புகள் முன்வர வேண்டும்.