அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு

முதலமைச்சர் “பினாமி”யாக இருந்தாலும் நிதானமும் பண்பாடும் தேவை: பன்னீர்செல்வத்திற்கு கருணாநிதி பதிலடி

karuna in assembly

தைரியம் இருந்தால் சட்டமன்றத்திற்கு வந்து பேசுங்கள் என்று முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்த கருத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி காரசாரமாக பதில் அளித்துள்ளார்.

முதலமைச்சர் பதவியிலே இருப்பதற்கு ஒரு கண்ணியம் வேண்டும். அது எந்தக் கடையிலே விற்கும் என்று கேட்பவர்களை அங்கே உட்கார வைத்தால், அவர்கள் தங்கள் குணத்தைக் காட்டத் தான் செய்வார்கள். ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூவாக வாய்த்திருக்கும் பன்னீர்செல்வம், சட்டசபையில் தி.மு.க.வினர் அராஜகம் செய்ததாக நேற்றைய அறிக்கையில் கூறியிருக்கிறார். 1957ஆம் ஆண்டு முதல் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகச் சட்டப்பேரவையில் இடம் பெற்றிருக்கிறது. 15 பேராக நுழைந்து, 50 பேராக உயர்ந்து, 1967இல் பெரும்பான்மையைப் பெற்றுப் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் தி.மு.கழகம் ஆட்சி அமைத்தது. அப்போது இந்தியாவையே ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்தது. ஆனால் அ.தி.மு.க. என்ற ஒரு அமைப்பு பேரவையில் நுழைந்த பிறகு தான், அதுவும் குறிப்பாக அருமை நண்பர் எம்.ஜி.ஆர். மறைந்த பிறகுதான், சட்ட சபையில் அராஜகம் – அநாகரீகம் என்பவை நுழைந்தன என்பதைத் தமிழ்நாட்டு மக்களும், பத்திரிகையாளர்களும் நிச்சயம் மறந்திருக்க மாட்டார்கள்.

அதிலும் குறிப்பாக, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அ.தி.மு.க.விற்கும் இடையே பிரச்னை எழுவதற்கு முன்பாகவே, அ.தி.மு.க. (ஜா) அணி என்றும், அ.தி.மு.க. (ஜெ) அணி என்றும் பிரிந்து பேரவையிலே 28-1-1988 அன்று, எம்.ஜி.ஆரின் துணைவியார் திருமதி ஜானகி அம்மையார் முதலமைச்சராக இருந்த போது; எதிர் அணியான ஜெயலலிதா அம்மையார் அணியினர், கலவரத்தை ஆரம்பித்து, சட்டப்பேரவையையே ரணகளமாக்கி, பேரவைக்குள் காவல்துறைத் தலைவர் தேவாரம் தலைமையிலே போலீசார் நுழைந்து தாக்குகின்ற அளவுக்கு நிலைமை கட்டுக்கடங்காமல் போய், ஜெயலலிதா எதிர்பார்த்ததைப் போலவே, அதை வைத்து ஜானகி அம்மையாரின் ஆட்சி கலைக்கப் பட்டது. அப்போது அ.தி.மு.க.வினர் அங்காடித் தகராறு போல, ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்ட சம்பவங்கள் மறந்தா விட்டன? பேசுவதற் காகக் கொடுக்கப்பட்ட “மைக்”குகளைப் பிடுங்கி, ஆயுதங்களாகப் பயன்படுத்தித் தாக்கிய சம்பவங்கள் தெரியாதா? அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைகளிலே “மைக்”குகளை ஏந்திக் கொண்டு ஏதோ போர்க் களத்திலே வாளேந்தி நடந்து வரும் வீரர்களைப் (! ) போல, வெற்றி நடை நடந்து வெளியே வந்த புகைப்படங்கள் எல்லாம் பழைய ஏடுகளிலே இன்றைக்கும் பார்க்கலாம்! அவையின் நாகரிகம் – பண்பாடு என அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்ட இந்தச் சம்பவம் பன்னீர்செல்வத்திற்கு தெரியாதா?

பன்னீர்செல்வம் தேடித் தேடிப் பிடித்து, 25-3-1989 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் முதலமைச்சராகவும், நிதியமைச்சராகவும் இருந்த நான் 13 ஆண்டு களுக்குப் பிறகு புதிய திட்டங்களையெல்லாம் நிதிநிலை அறிக்கையில் எடுத்துச் சொல்ல முற்பட்ட போது, தி.மு.க. ஏதோ அராஜகத்தில் ஈடுபட்டதாக ஒரு கற்பனைக் கதையைச் சொல்லியிருக்கிறார். இந்தக் கதையை ஒரு நாடகமாகவே அரங்கேற்றிய நிகழ்ச்சியெல்லாம் எப்போதோ வெட்ட வெளிச்சமாகி நாட்டு மக்கள் வேதனையை வெளியிட்டதைப் பன்னீர்செல்வம் மறந்துவிட்டாரா?
பன்னீர்செல்வம் அவர்களே, தீய எண்ணத்தோடு திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட இந்தச் சம்பவமாவது உங்களுக்கு ஞாபகத்திற்கு வருகிறதா? திருநாவுக்கரசர் அவர்களும் அ.தி.மு.க.விலே உண்மையாக உழைத்து வெளியே வந்து இந்த நாட்டிற்கு உண்மை தெரியாமல் போய் விடக் கூடாது என்பதற்காக இதனை வெளியிட்டார். சட்டமன்றத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து நான் கூறுவதைவிட, அன்றைக்கு எதிர்க் கட்சித் துணைத் தலைவராக அ.தி.மு.க.விலே ஜெயலலிதாவிற்கு ஆதரவாக இருந்த திருநாவுக்கரசு  அவர்கள் அந்தச் சம்பவம் நடைபெற்ற ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு அதே சட்டப்பேரவையில் பேசியதை அப்படியே குறிப்பிடுகிறேன். இதோ நண்பர் திருநாவுக்கரசு பேசுகிறார்

“இதே சட்டமன்றத்தில் மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் பட்ஜெட்டைப் படித்தபோது சட்ட மன்றத்திலே ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தது அனைவருக்கும் தெரியும். இப்போது நான் சொல்வது; என்னுடைய தாய் மீது ஆணையாக நான் தெய்வமாக வணங்குகிற எம்.ஜி.ஆர்.அவர்கள் மீது சத்தியமாகச் சொல்வதாகும். முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்தபோது எதிர்க் கட்சித் தலைவராக இருந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அவரது வீட்டில் உட்கார வைத்துக்கொண்டு என்னைப் பார்த்து “நான் பிரதான எதிர்க்கட்சித் தலைவர், முதலமைச்சர் பட்ஜெட் படிக்கும் போது நான் பிடித்து இழுத்தால் நன்றாக இருக்காது. எனவே என் பக்கத்திலே இருக்கிற நீங்கள் முதலமைச்சர் கருணாநிதியின் கையிலே இருக்கிற பட்ஜெட் காப்பியை பிடித்திழுத்து அடிக்க வேண்டும்” என்று சொன்னார். நான் உடனே மிகுந்த வேதனை யோடு சொன்னேன். “தெரிந்தோ தெரியாமலோ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் எங்களைப் பத்தாண்டுக் காலம் கௌரவம் மிக்க பதவிகளில் வைத்துவிட்டுப் போயிருக்கிறார். தயவுசெய்து அடியாட்களாக எங்களை மாற்றாதீர்கள். அதற்கு என்னுடைய மனச்சாட்சி இடம் தரவில்லை. இரண்டாவது, இதுபோன்ற சம்பவம் வேண்டாம்” என்று நான் வாதாடியதுடன்; “முதல் அமைச்சர் நமக்குப் பிடிக்காதவராகக்கூட இருக்கலாம். அது வேறு விஷயம். ஆனால் அவருக்குப் பின்னாலே அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிற பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் உட்கார்ந்து இருக்கிறார்கள். அவர் மீது கை வைக்கிற போது அவர்கள் உணர்ச்சி வசப்படுவார்கள். அங்கு நிச்சயமாக அடிதடி நடக்கும், ரகளை நடக்கும். புரட்சித்தலைவர் இருக்கும்போது எவ்வளவோ பிரச்னைகள் நடந்திருக்கின்றன. அவருக்குப் பக்கத்தில் யாராவது போனால் கூட நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம்; தாக்கியிருப்போம். அதுபோல இன்றைய முதலமைச்சருக்குப் பின்னாலே அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கின்ற சட்ட மன்ற உறுப்பினர்கள் கண்டிப்பாகத் தாக்குவார்கள். அசம்பாவிதம் நடக்கும். அசிங்கமாகப் போய்விடும். பத்திரிகைகளிலே எல்லாம் கேவலமாக எழுதுவார்கள்” என்று வாதாடியதோடு “மூத்த தலைவர்களை எல்லாம் கேட்டீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர் “அவர்களைக் கேட்டால் அவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்ற காரணத்தினாலே அவர்களை எல்லாம் டைனிங் ஹாலிலே உட்கார வைத்திருக் கிறேன்” என்று சொன்னார். “நான் முடியாது” என்று சொன்ன உடனே சட்டமன்ற உறுப்பினர்களைப் பார்த்து “சரி, அவர் மாட்டேன் என்று சொல்லுகிறார். உங்களில் யாருக்கு வசதிப்படுகிறதோ அவர்கள் போய் பட்ஜெட் படிப்பதைப் பிடுங்கிக் கிழியுங்கள்” என்று சொல்லி விட்டு மேலே போய்விட்டார். டைனிங் ஹாலுக்கு உள்ளே டாக்டர் ஹண்டே,திரு. ராகவானந்தம், திரு.மாதவன், திரு.எஸ்.டி.எஸ். மற்றும் அப்போதிருந்த மூத்த தலைவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். நான் அங்கே போய், “யார் இந்த ஆலோசனையைச் சொன்னது?” என்று அவர்களிடத்திலே சண்டை போட்டேன்.

செல்வி ஜெயலலிதா மாடியிலிருந்து இறங்கி வந்தார். வந்தவுடனே, அங்கே இருந்தவர்களைப் பார்த்து, “புறப்படலாம், நேரம் ஆச்சு” என்றார். மூத்த தலைவர்கள் யாருக்கும் அவர் வந்த வேகத்திலே தடுத்துச் சொல்ல துணிச்சல் இல்லை. அவரை அழைத்துச் சென்று சட்டமன்ற அவையிலே உட்கார வைத்துவிட்டு, “தோழமைக் கட்சி, காங்கிரஸ் கட்சி யிடத்திலே இதுபற்றி கேட்டீர்களா?” என்றேன். அவர், “எல்லோரையும் கலந்துதான் சொல்லுகிறேன். இன்றைக்குச் சட்டமன்றத்திலே வன்முறை நடந்தால் இன்றைக்கு மாலையே ஆட்சி கலைக்கப்படுகிறது என்று எனக்குத் தகவல் வந்திருக்கிறது” என்று சொன்னார். நான் உடனே தோழமைக் கட்சியான காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனார் அறைக்குச் சென்று “இன்றைக்கு நாங்கள் எல்லாம் வெளிநடப்பு செய்வதாக இருக்கிறோம். நீங்களும் எங்களோடு ஒத்துழைப்புத் தர வேண்டும்” என்றும், அத்துடன், “இன்றைக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் நீங்களும் உள்ளேயிருந்து ஏதாவது உதவி செய்வீர்களா?” என்றும் மறைமுகமாகக் கேட்டேன். நேரிடையாகச் சொல்லாமல், அவர் “நான் புறப்படுவதற்கு முன்னாலேயே பாரதப்பிரதமர் ராஜீவ் காந்தியிடம் 8.30 மணிக்கு பேசிவிட்டுத்தான் வந்தேன். அதற்கு காவல்துறையின் மீது ஒரு கண்டன அறிக்கையைப் படித்துவிட்டு எங்களுடைய காங்கிரஸ் கட்சி வெளி நடப்பு செய்யப் போகிறது. இதுதான் எங்களுக்கு டெல்லியிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கிற உத்தரவு” என்று சொன்னார்.செல்வி ஜெயலலிதா அவையில் உட்கார்ந்திருந்தார். நான் வேகமாக வந்து, “திரு. மூப்பனார் அவர்களிடத்திலே கேட்டேன். அவர்கள் எந்தவிதமான அசம்பாவிதமும் இங்கே நிகழ்த்து வதற்குத் தயாராக இல்லை. காங்கிரஸ் காரர்கள் வெளிநடப்பு செய்யப் போகிறார்கள்” என்று சொன்னேன் “மூப்பனார் எப்போதும் இப்படித்தான். எனக்கு விரோதமாகத்தான் அவர் சொல்லுவார். எனக்கு வேறு மாதிரித் தகவல் வந்திருக்கிறது”” என்று கூறியதுடன் “நீங்கள் போய் ஏன் அவரிடத்தில் கன்சல்ட் செய்தீர்கள்?” என்றார். அதன் பிறகு அன்றைக்கு இங்கு சட்டமன்றத்தில் நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் அனைவருக்கும் தெரியும். வன்முறையைத் தொடர்ந்து சட்டமன் றத்திற்குள்ளே அடிதடி ரகளை எல்லாம் நடந்தது. பிறகு செல்வி ஜெயலலிதா அவர்களை அழைத்துக் கொண்டு வண்டியிலே நானும் திரு. கே.கே.எஸ்.எஸ். ஆரும் முன்னாலேயும், பின்னாலேயும் அமர்ந்து கொண்டு போகிறோம். வீடு போகிறவரை, “இன்றைக்கு மாலையே ஆட்சியைக் கலைக்கப் போகிறார்கள், ஆட்சியைக் கலைக்கப் போகிறார்கள்” என்று சொல்லிக் கொண்டே வந்தார்.”

அன்றையதினம் என்ன நடந்தது என்பது பேரவையிலேயே பேசப்பட்டு, அது அவைக்குறிப்பிலும் இடம் பெற்று, பின்னர் அதனை அவைக்குறிப்பிலேயிருந்து நீக்குவதற்கான முயற்சிகள் எல்லாம் நடைபெற்றன.

நான் இந்தப் பழைய உண்மைச் சம்பவங்களை வெளியிட்டால், நானும், தம்பி ஸ்டாலினும் தரம் தாழ்ந்து அறிக்கை விடுவதாகச் சொல்வதா முதலமைச்சருக்கு உள்ள அழகு? சட்டசபையைக் கூட்டுங்கள் என்றால், அது தரம் தாழ்ந்த செயலா? இந்த ஆட்சியிலே அப்படித்தானா? சட்டசபையைக் கூட்டும்படி நாங்கள் மட்டுமா கூறினோம்? மற்ற எதிர்க்கட்சிகள் எல்லாம் கூடத்தான் பேரவையைக் கூட்டும்படி கேட்டுக் கொண்டார்கள்? எதற்கெடுத்தாலும் தந்தை, தனயன் என்று பேசுவதா? ஏன், உங்களுடைய தம்பியைப் பற்றிய நிகழ்வுகளைச் சொன்னால் ஊரே சிரிக்குமே? கடந்த தீபாவளியின் போது பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்கள் எல்லாம் யாரை வந்து சந்தித் தார்கள்? என்ன நடந்தது?வாரப் பத்திரிகையிலே அதைப் பற்றிய கட்டுரை வெளி வந்து எங்கும் நாற்றமெடுத்து எத்தனை நாளாயிற்று? அதற் கெல்லாம் பதில் சொல்ல வக்கில்லை, வகையில்லை. எனக்கா சவால் விடுகிறீர்கள்?

உங்களுக்குத் தெரியுமா? ஓமந்தூரார் மாளிகையிலே புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்ட போது, நான் அன்றாடம் அங்கே சென்று பணிகளைப் பார்வையிட்டு வந்தேன். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா அமருவதற்கு, முதலமைச்சர் அமருவதற்கு எவ்வாறு இடவசதி செய்யப்படுகிறதோ, அதுபோலவே அமைக்கப்பட வேண்டு மென்று கூறியவன் நான்! அது மாத்திரமல்ல; எதிர்க் கட்சித் தலைவருக்காக அமைக்கப்பட்டிருந்த அறையினை நானே சென்று பார்த்து, அது அளவிலே சற்றுச் சிறிதாக இருந்தது என்பதால், அதனை மேலும் பெரிதாக்கிக் கொடுக்க வேண்டுமென்று கூறியவன் நான். தரத்தைப் பற்றி என்னிடமா பேசுகிறீர்கள்?

தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டம் 8-2-2013 அன்று நடைபெற்ற போது, தே.மு.தி.க. சார்பில் வெற்றி பெற்று, பின்னர் அந்தக் கட்சித் தலைமைக் குக் கட்டுப்படாமல் வெளியேறியதாகக் கூறப்படும் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் (தமிழழகன்) பேரவையில் பேசும்போது, தான் கட்சியிலிருந்து வெளியேறிய காரணத்தால், ஆட்சியினர் தன் தொகுதிக்கு நன்மைகளைச் செய்கிறார்கள் என்றும், மற்ற தே.மு.தி.க. உறுப்பினர்களும் தன்னைப் போல் முடிவு எடுத்தால், அவர்களும் பயன் பெறலாம் என்றும் வெளிப்படை யாக அழைப்பு விடுத்தார். அவரது அந்தப் பேச்சுக்கு தே.மு.தி.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவையில் எதிர்ப்புத் தெரிவித்தனர். இரு சாராருக்கும் இடையே தகராறு அப்போது ஏற்பட்டது.தே.மு.தி.க. சார்பில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்குள் நடைபெற்ற விவகாரம் இது. இதில் தே.மு.தி.க.சார்பில் வெற்றி பெற்று அக்கட்சியின் கட்டுப்பாட்டுக்குப் புறம்பாகச் செயல்படும் உறுப்பினர் ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறி, தே.மு.தி.க.விலே தொடர்ந்து உறுதியாக இருக்கின்ற ஆறு பேர் மீது பிரச்சினை எழுப்பப்பட்டு, உரிமைக் குழுவிற்கு அனுப்பப்பட்டது.

உரிமைக் குழுவும் ஒரு மாதத்திற்குள் இந்தப் பிரச்னை பற்றி ஆய்வு செய்து தனது அறிக்கையினைத் தாக்கல் செய்து விட்டது. அதன்படி அந்த ஆறு சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஓராண்டு காலத்திற்கு பேரவைக்கு வரமுடியாத அளவிற்குத் தடை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்த ஓராண்டு காலத்திற்கு அவர்களுக்கு ஊதியமும் கிடையாது. இந்த நடவடிக்கையைக் கண்டித்து, தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது அ.தி.மு.க.வுடன் தோழமை கொண்டு அவர்களின் வெற்றிக்காக உழைத்த தோழமைக் கட்சி ஒன்றுக்கு ஏற்பட்ட நிலை இது. இந்த அநாகரீக நிகழ்வுக்கு யார் காரணம்?

24-11-1986 அன்று எம்.ஜி.ஆர். ஆட்சியில், மொழிப் போராட்டத்தின் ஒரு கட்டமாக இந்திய அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக, பேரவைத் தலைவர்; தி.மு. கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அவர்களையும், மற்றும் எஸ். பாலன், ஏ. செல்வராசன், பரிதி இளம்வழுதி, பி. பொன்னுரங்கம், கோவை எம். ராமநாதன், தர்மபுரி ஆர். சின்னசாமி, ஆலந்தூர்ம. ஆப்ரகாம், மதுராந்தகம் சி. ஆறுமுகம், அரக்கோணம் வி.கே.இராசு ஆகியோரையும் பேரவை யிலிருந்து நிரந்தரமாக நீக்கி தனது தீர்ப்பினைப் படித்தார். எதிர்க்கட்சிகள் சார்பில் எவ்வளவோ கேட்டுக் கொண்டும் கூட – அந்தத் தீர்மானத்தைத் திரும்பப் பெற அன்றைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க. கடைசிவரை முன்வரவில்லை.

மற்றொரு உதாரணம் – 1991ஆம் ஆண்டு சட்டமன்றப் பேரவையில் அ.தி.மு.க. ஆட்சியிலே ஜூலை 4ந்தேதி ஆளுநர் உரையாற்றினார். ஆளுநர் உரையாற்றத் தொடங்கிய போது, பா.ம.க. உறுப்பினராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன், ஒரு அறிக்கையை அவையிலே ஆங்கிலத்திலே படிக்கத் தொடங்கினார். அப்போது அ.தி.மு.க. உறுப்பினர் ஒருவர் பண்ருட்டி ராமச்சந்திரனின் அருகில் வந்து தாக்கினார்.

22-3-1999 அன்று ஒரு சம்பவம்!சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்ற போது அ.தி.மு.க. உறுப்பினர் ஒருவர் அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் முகத்திலே குத்தினார். அவர் அணிந்திருந்த மோதிரம் வீரபாண்டி ஆறுமுகத்தின் மூக்கிலே குத்தி ரத்தம் கொட்டியது. தாக்கிய அ.தி.மு.க. உறுப்பினர் அ.தி.மு.க.விலிருந்து பின்னர் விலகி கழகத்திலேயே சேர்ந்தார்.

இதோ மற்றொரு உதாரணம் :- 7-1-2011 அன்று தி.மு. கழக ஆட்சியில் ஆளுநர் உரையாற்றிய போது, அ.தி.மு.க. உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டு, வெளியேற்ற வந்த அவைக் காவலர்களை கடுமை யாகத் தாக்கினார்கள். அதிலே ஒருவர், அவைக் காவலர்களை எட்டி உதைத்து, தொப்பிகளைப் பறித்து அவர்கள் முகத்திலேயே அடித்தார். அந்தப் புகைப்படங்கள் எல்லாம் ஏடுகளிலே அப்போதே வெளிவந்தன.ஆளுநர் உரையாற்றிய போது அத்துமீறிச் செயல்பட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஒன்பது பேரை மாதக் கணக்கிலோ, ஆண்டுக் கணக்கிலோ அல்ல; அந்தத் தொடர் முழுவதும் நீக்கம் செய்து பேரவைத் தலைவர் திரு.இரா. ஆவுடையப்பன் உத்தரவிட்டார். அதை எதிர்த்து அ.தி.மு.க. உறுப் பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆனால் அதற்கு அடுத்த நாள் என்ன நடந்தது தெரியுமா?

முதல் அமைச்சராக இருந்த நான் மறுநாள் பேரவையில் கூறும்போது, “பேராசிரியர் உள்ளிட்ட பத்து தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை – அ.தி.மு.க. ஆட்சியிலே நீக்கப்பட்டவர்களை மீண்டும் அந்த ஆட்சியில் அனுமதிக்கவில்லை. ஆனால் வெளியேற்றப்பட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் மீண்டும் அவைக்கு வந்து ஒத்துழைக்க வேண்டு மென்று அண்ணா வழியிலே நடைபெறுகின்ற இன்றைய தி.மு.கழக அரசின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்”” என்று தெரிவித்தேன்.

மற்றொரு நிகழ்ச்சி. 18-10-2007 அன்று காலை உள்ளாட்சித் துறை அமைச்சர், தம்பி மு.க. ஸ்டாலின், ஒரு உரிமை மீறல் பிரச்சினை குறித்துப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவையில் இருந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எழுந்து பயங்கரமாக கூச்சலும், குழப்பமும் விளைவித்து, அவரைப் பேச விடாமல் அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்துக் கொண்டிருந்தார்கள். மேலும் அவர்கள் அனைவரும் தங்கள் இருக்கைகளை விட்டுக் கும்பலாக எழுந்து, பேரவைத் தலைவரின் இருக்கை முன்பு தரையில் அமர்ந்து கண்ணியக் குறைவாக நடந்து கொண்டார்கள். பேரவைத் தலைவர் பலமுறை அவர்களை இருக்கைக்குத் திரும்புமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டும் அவர்கள் திரும்பாத காரணத்தினால், பேரவைத் தலைவர் அவைக் காவலர்களை அழைத்து, அவர்களை வெளியேற்ற உத்தரவிட்டார். அப்போது திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. போஸ் தன்னை அப்புறப்படுத்த வந்த காவலர் பி. மதிவாணனின் தொப்பியைப் பிடுங்கி, பேரவைத் தலைவர் மீது தூக்கி எறிந்தார். அதை அவையின் உறுப்பினர்கள் அனைவரும் பார்த்தார்கள். பேரவைத் தலைவரையே தாக்கிய அந்தச் செயலுக்காக தி.மு. கழக ஆட்சியில் முதலில் ஆறு மாத காலத்திற்கு அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்ட போதிலும், நான் உடனடியாகத் தலையிட்டு அடுத்த கூட்டத் தொடரின் முதல் பத்து நாள்களுக்கு மட்டும் நீக்கம் செய்தால் போதும் என்று கூறி அவ்வாறே கடைப்பிடிக்கப்பட்டது. இது தி.மு. கழக ஆட்சியில் நடைபெற்ற மற்றொரு உதாரணம்.

எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற விஜயகாந்த் அவர்களையே பத்து நாட்களுக்கு பேரவை நடவடிக்கை களில் கலந்து கொள்ளக் கூடாது என்று நடவடிக்கை எடுத்த நிகழ்ச்சி வேறு எப்போதாவது நடந்தது உண்டா? அதுவும் அ.தி.மு.க. ஆட்சியில்தான் நடைபெற்றது.

13-11-2008 அன்று தி.மு.கழக ஆட்சியில் நான் அவையிலே இல்லாத நேரத்தில் – பிரதான எதிர்க் கட்சியான அ.தி.மு.க. உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்கள் என்ற செய்தியினை அறிந்து – “அவர்கள் மின்சார வாரிய விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று அக்கறையோடு இருந்தார்களே, வெளியேற்றப்பட்டு விட்ட காரணத்தால், அந்த விவாதத்தில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுமே” என்று எண்ணி – நானே எதிர்க் கட்சித் துணைத் தலைவருடன் தொலைபேசியிலே பேசிட முயற்சித்து – அது கிடைக்காத காரணத்தால் – ஆளுங்கட்சியைச் சேர்ந்த தம்பிகள் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், கே.என்.நேரு ஆகிய அமைச்சர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு – எதிர்க் கட்சித் தலைவரின் அறைக்கே சென்று அ.தி.மு.க.வினரைச் சமாதானம் செய்து மின்சாரம் பற்றிய விவாதத்திலே கலந்து கொள்ள வாருங்கள் என்று அழைக்கச் செய்தேன். மேலும் பேரவைத் தலைவரோடும் தொலைபேசியிலே பேசி, வெளியேற்றப்பட்ட ஆணையைத் திரும்பப் பெற்று, அவர்களையெல்லாம் கலந்து கொள்ள வாருங்கள் என்று அவையிலேயே அழைப்பு விடுக்கவும் கேட்டுக் கொண்டேன். அவரும் அவ்வாறே அழைப்பும் விடுத்தார்.

25-3-1989 அன்று பேரவையில் நடைபெற்றது பற்றி நண்பர் திருநாவுக்கரசு கூறியதை இந்தக் கடிதத்தில் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். நிதியமைச்சர் என்ற முறையில் நான் நிதிநிலை அறிக்கையைப் படிக்கத் தொடங்கிய போது நடந்தது என்ன? எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா எழுந்து, “முதல் அமைச்சர் ஒரு கிரிமினல் குற்றவாளி, அவர் நிதிநிலை அறிக்கையைப் படிக்கக் கூடாது” என்று கூறி, என் கையிலே இருந்த நிதிநிலை அறிக்கையைப் பிடுங்கிட முற்பட்டார். அவருக்குத் துணையாக அ.தி.மு.க. உறுப்பினர்கள், அவரைச் சூழ்ந்து நின்று கொண்டு “படிக்காதே, படிக்காதே” என்று கூச்சலிட்டனர். அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர் என் கையிலிருந்த நிதிநிலை அறிக்கைப் புத்தகத்தைப் பிடித்திழுத்து கிழித்தெறிந்தார். அதைத் தடுக்க முனைந்த போது என் முகத்தில் குத்தி, மூக்குக் கண்ணாடி கீழே நொறுங்கி விழுந்தது. அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் தலையில் ஒலிபெருக்கிக் கம்பியால் தாக்கி, ரத்தம் ஒழுகிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டார்.

கொடூரமான இவ்வளவு பெரிய சம்பவத்திற்கே அப்போது என்ன தண்டனை வழங்கப்பட்டது தெரியுமா? கலவரம் செய்த அ.தி.மு.க. உறுப்பினர் களை ஒரு வார காலம் தற்காலிக நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் 27-3-1989 அன்று சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் துணைத் தலைவராக இருந்த இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், அந்தத் தற்காலிக நீக்கத்தையும் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதையொட்டி, நான்; “எதிர்க்கட்சிகள் இல்லாமல் இந்த அவை நடவடிக்கைகளை நடத்த வேண்டும் என்கிற குறுகிய மனப்பான்மை எனக்கோ, இந்த அரசுக்கோ நிச்சயமாக இல்லை. நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும் என்கிற அந்த எண்ணத்தின் அடிப்படையிலே இந்தப் பிரச்சினையை நான் அணுகுகிறேன். அன்றையதினம் ஏற்பட்ட ஒரு உணர்ச்சியின் காரணமாக கொந்தளிப்பின் எதிரொலியாக நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானத்தைத் திரும்பப் பெற்று எதிர்க்கட்சித் தலைவரும், மற்றவர்களும் அவையில் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”” என்று குறிப்பிட் டேன். இதுதான் திராவிட முன்னேற்றக் கழகம். இதனை அப்போது பாரத ரத்னா” சி. சுப்ரமணி யம் அவர்களே ஏடுகள் வாயிலாகப் பாராட்டியிருந்தார்.

தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்த போது, அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா சட்டமன்றக் கூட்டத்திற்கு வராமலும், ஏன் கையெழுத்துப் போடாமலும் கூட இருந்தார். ஒரு உறுப்பினர் குறிப்பிட்ட இத்தனை நாட்களுக்கு மேல் சட்டசபைக்கு வராமல் இருந்தால், அவருக்குப் பதவி போய்விடும். அப்போது அ.தி.மு.க. சார்பில் இதே பன்னீர்செல்வம், ஜெயலலிதா தொடர்ந்து பேரவை உறுப்பினராக நீடிக்க தீர்மானம் கொண்டு வர முனைந்த போது, தி.மு.க. நினைத்திருந்தால், அந்தத் தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் தி.மு.கழகம் அதற்கே உரிய பெருந்தன்மை யோடு ஜெயலலிதா அவைக்கு வராமல் இருந்ததை ஏற்றுக் கொண்டு ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற உதவியது என்பதை அனைவரும் அறிவர்.

ஏன், அ.தி.மு.க.வின் நிறுவனர் எம்.ஜி.ஆர்., கழகம் பிரிந்த போது, பேரவைக்கு வராமல் எத்தனை நாட்கள் இருந்தார்? ஜெயலலிதா எத்தனை கூட்டத் தொடருக்கு வராமல் இருந்தார்? ஏன், இப்போதும் நான் பேரவைக்கு வருவதைப் பற்றி ஏற்கனவே இரண்டு முறை தெரிவித்திருக்கிறேன். என் னுடைய உடல் நிலை காரணமாக நான் அமருவதற்கேற்ப இட வசதி செய்து தந்தால் நான் பேரவைக்கு வரத் தயார் என்று கூறிவிட்டேன். அதை ஏற்படுத்திக் கொடுக்க முன் வராத அ.தி.மு.க. அரசு, நான் ஏன் பேரவைக்கு வரவில்லை என்று கேட்பதற்கு ஏதாவது தார்மீக நியாயம் என்ற ஒன்று இருக்கிறதா?

உனக்குத் தைரியம் இருந்தால் பேரவையில் நான் அமருவதற்கேற்ற இடத்தினை ஏற்பாடு செய்து விட்டு, எனக்குத் தகவல் அனுப்புங்கள்! அடிக்கின்ற காற்றின் வேகத்திலே கோபுரத்தின் உச்சியில் ஒட்டிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்து விட்டதாக எண்ணி இறுமாப்பு கொள்ள வேண்டாம்! காற்று இன்னும் கொஞ்சம் வேகமாக அடித்தால் இலை எங்கே போய் விழும் தெரியுமா? முதலமைச்சர் என்பவர் “பினாமி”யாக இருந்தாலும்; “பிராக்சி”யாக இருந்தாலும், அந்தப் பொறுப்பில் இருப்பதால் நிதானமும் பண்பாடும் தேவை என்பதை அறிக! அதைப் பெறுவதற்கு முயலுக’ என்று முடித்திருக்கிறார் கருணாநிதி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.