இன்றைய முதன்மை செய்திகள், சினிமா, பெண் கலைஞர்கள்

பிரெஞ்சு படத்தில் தமிழ்ப் பெண்!

janagi poster
கலைகளின் ரசிகர்கள் நிறைந்த பாரீசில் தமிழ்ப் பெண் ஜானகி நடித்த சோன் ஈபூஸ் (Son Epouse – அவனுடைய மனைவி) என்ற பிரெஞ்சு சினிமா  வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது தமிழ்ப்புதுமுக நடிகை ஜானகியின் நடிப்பாற்றல் வலுவானதாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் வெளிப்பட்டுள்ளது என புகழாரம் சூட்டியிருக்கிர்றார்கள் மேற்குலக விமர்சகர்கள். சைக்கோ திரில்லரான இந்தப்படத்தில் முதன்மையான பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஜானகி.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் என்ற மேற்குதொடர்ச்சிமலை கிராமத்தில் பிறந்த ஜானகி சினிமாவுக்கு வந்த பின்னணி இதோ…
‘’அப்பா செங்கல் சூளையில வேலைபார்த்துட்டு வந்தார். அம்மா பக்கத்துல சத்துணவு கூடத்துல  சமையலர். குறைந்த வருமானம். நெருக்கடியான குடும்பம். எனக்கு மேலே மூன்று அக்கா, ஒரு அண்ணன். எல்லோருமே பள்ளிப்படிப்புதான் படிச்சாங்க. நான் பிளஸ்டூ வரை படிச்சேன். ஏற்கனவே குடும்ப வறுமை காரணமா என்னோட அக்காக்கள் நெசவு தறியில் வேலை பார்க்க போயிருந்தாங்க. என்னையும் போகச்சொன்னாங்க. அப்பதான் நாகர்கோவிலில் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையினர் நடத்தி வந்த நாட்டுப்புறக் கலைக் குழுவில் சேர்ந்தேன். இந்தக் கலைக் குழுவில் பணியாற்ற ஊதியம் கிடைக்கும் என்பதால் வீட்டுக்குத் தேவையான பணமும் கிடைத்தது. பள்ளிப் பருவத்திலேயே எனக்குள் இருந்த தனித்த ஆளுமையாலும் கலைத் திறனாலும்  நாட்டுப்புறகலைக்குழுவில் சேர்ந்தது எனக்கு பிடித்துப்போனது. அங்கே. கும்மி, கரகம், ஒயிலாட்டம்  என 25 நாட்டார் கலைகளைக் கற்றுத் தேர்ந்தேன். இந்தக் கலைக் குழுவில் மூன்று வருடம் இருந்தேன். பிறகு நாகர்கோயிலில் இயங்கிவந்த சமூக கலைக் குழுவான முரசில் இணைந்தேன். முன்பிருந்த கலைக்குழுவில் இருந்து இது முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. பொதுவுடைமைச் சமூகம்போல் எல்லோரும் கூடி வாழ்ந்தோம். அங்கேதான் நாடகம் என்ற ஊடகத்தின் ஆற்றலை முழுமையாக உணர்ந்தேன்.  தொலைதூர கல்வி வாயிலாக பி.ஏ. தமிழ் படித்தேன்.
என்னுடைய நாடக அனுபவத்தில் எளிமையான நாடகங்களையே மக்கள் விரும்புகிறார்கள். அதனால் முற்றிலும் நவீன பாணி நாடகங்கள் ஏற்புடையவை அல்ல என்றே நினைக்கிறேன். ஆனால் நவீன நாடகத்தின் கூறுகளை எடுத்துக்கொள்ளலாம் என முடிவு செய்தேன். இந்தச் சமயத்தில் தேசிய நாடகப் பள்ளி, மாணவர்களுக்கான குறுகிய காலப் பயிற்சித் திட்டத்தை அறிவித்தது. மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகத் தேசிய நாடகப் பள்ளியைச் சேர்ந்த தேர்வுக் குழுவினர் நாகர்கோயில் இந்துக் கல்லூரிக்கு வந்தனர்.  இதைக் கேள்விப்பட்டுத் தேர்வுக்குச் சென்றேன். முதலில் ஹிந்தி தெரியாததால் நிராகரிக்கப்பட்டேன். பின்னர் 3 மாதம் ஹிந்தி வகுப்பில் சேர்ந்து கற்றுக்கொண்டபின் தேசிய நாடகப் பள்ளியின் பயிற்சித் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். பயிற்சி முடித்த கையோடு டெல்லி தேசிய நாடகப் பள்ளியிலேயே மூன்று வருடப் பட்டயப் படிப்பு படிக்கும் வாய்ப்பு  எனக்குக் கிடைத்தது. தமிழ்நாட்டில் இருந்து விரல் விட்டு என்னுடன் சிலர் மட்டுமே இந்தப் படிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மூன்றாண்டுப் படிப்பில் அவர் இந்தியா முழுவதும் பயணித்தேன்.
நாடகங்களை அரங்கேற்றினேன். ஒவ்வொரு ஊருக்கும் செல்லும்போது புதுப்புது அனுபவங்கள்.வெவ்வேறு விதமான கலாசாரப் பின்னணி, பிரச்னைகள் எல்லாமும் எனது  சமூகப் புரிதலை விரிவாக்கியது. பல நவீன நாடகங்களில் முக்கியப் பாத்திரம் ஏற்று நடித்தேன்.
janagi
நாடகக் குழுக்களில் இணைந்து பணியாற்றியபோது இலக்கிய சமூக செயல்பாட்டாளர் பிரேமா ரேவதியின் அறிமுகம் கிடைத்தது.  அவர் கவுதம் மேனன் சார் படங்களில் பணியாற்றிவர். சோன் ஈபூஸ் படத்திற்கு நடிகர்கள் தேர்வு நடந்தபோது அந்தப் படத்தின் அசோசியேட் டைரக்டரான பிரேமா ரேவதி என்னை அங்கே அறிமுகம் செய்து வைத்தார்.  பொதுவாக 5 நிமிடத்தில் நேர்முகத்தேர்வு நடக்கும். ஆனால் எனக்கு இரண்டு நாட்கள் நேர்முகத்தேர்வு நடந்தது.  நாடகத்தில் நடித்துவந்த நான் எங்கே எனக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கப்போகிறது.. கிளாமரானவர்களைத்தான் சினிமாவில் தேர்வு செய்வார்கள். என்னை எப்படி தேர்வு செய்வார்கள் என்ற மனக்குழப்பத்தில் இருந்தேன். ஆனால் இறுதியில் எனது திறமைக்காக என்னை தேர்வு செய்தார்கள். பாண்டிச்சேரி, தென்காசி, பெசன்ட்நகர்  உள்ளிட்ட இடங்களில் இரண்டு மாதங்கள் ஷூட்டிங் நடந்தது. படம் முடியும்போது பிரெஞ்ச் மொழியையும் கூடுதலாகக் கற்றுக்கொண்டது மகிழ்ச்சி. நாடகமானாலும் சரி, சினிமாவானாலும் சரி நம்முடைய நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் இருக்கவேண்டும்.” என்கிறார் ஜானகி
மாலினி 22 பாளையங்கோட்டை படத்தில் நடித்துள்ள ஜானகி தனக்கு பொருத்தமான கேரக்டரில் நடிக்க விரும்புகிறார். இயக்குநர் பாலாஜி சக்திவேலின் படத்தில் நடிப்பதற்கு நேர்முகத்தேர்வு முடிந்து அழைப்புக்காக காத்திருக்கிறார்.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.