இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

பெற்றோரின் சண்டையில் இருந்தும் குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள்!

செல்வ களஞ்சியமே78

ரஞ்சனி நாராயணன்

ரஞ்சனி நாராயணன்
ரஞ்சனி நாராயணன்

நாங்கள் சண்டையே போடமாட்டோம் என்று சொல்லும் தம்பதிகள் இல்லாத காலம் இது. ஊடல், கூடல் இருந்தால் தானே தாம்பத்தியம் ரசிக்கும்?

குழந்தைகள் எதிரில் சண்டை போட்டால் சரியில்லை. ஆனால் தாம்பத்தியம் சண்டை வந்தால் என்ன செய்வது? சரியான விஷயத்திற்கு சரியான விதத்தில் சண்டை போட வேண்டும். எப்படி? இதோ சில நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.

 • உங்களுடைய அடிப்படை நாகரீகத்தை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் பேசும் வார்த்தைகள் கவனிக்கப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அனாவசியமாக எதையெதையோ பேசாதீர்கள். அம்மா, அப்பா என்று குடும்பத்தவர்களை உங்கள் சண்டையில் இழுக்காதீர்கள். அவர்களை இழிவாகப் பேசாதீர்கள். நீங்கள் பேசும் அளவிற்கு உங்கள் துணைவரும் பேசக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 • உங்கள் துணைவர்/துணைவி சொல்வதற்கு முதலில் காது கொடுங்கள். பிறகு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

மற்றவர்களைப் பேச விடவேண்டும் என்று குழந்தைகள் உங்களைப் பார்த்துத்தான் கற்றுக்கொள்ளுகிறார்கள். முன்னுதாரணமாக இருங்கள் நல்ல நடத்தைக்கு மட்டுமல்ல; சண்டையிடுவதிலும். விட்டுக்கொடுப்பதிலும் கூட.

 • உங்கள் வார்த்தைகள் உங்கள் துணைவரை புண்படுத்தியிருந்தால் அவருடைய நிலையை புரிந்துகொள்ளுங்கள். அவரை கருணையுடன் நடத்துங்கள்.

வார்த்தைகளை நிதானமாக வெளியில் விடுங்கள். பேசிய வார்த்தைகளுக்கு நீங்களே பொறுப்பு. அவைகளை ஆயிரம் கொடுத்தாலும் திரும்ப வாங்க முடியாது. நினைவிருக்கட்டும்.

 • நிதானமிழக்க வேண்டாம். கோபத்தில் நிலைகுலைவது வரும் நாட்களையும் கெடுத்துவிடும்.

இன்றைக்கு இந்த விஷயத்தில் மட்டுமே நீங்கள் உங்கள் துணைவருடன் கருத்து வித்தியாசப்படுகிறீர்கள். நேற்றைக்கு இருவரும் சந்தோஷமாக இருந்தீர்கள். நாளை சந்தோஷமாக இருக்கப் போகிறீர்கள். இது ஒரு சிறிய தப்புக் கணக்கு. இன்றைக்கு இந்தக் கணக்கை சரி செய்துவிட்டு நாளையிலிருந்து இருவரும் நார்மலாக இருக்கப் போகிறீர்கள்.

 • உங்கள் துணைவரைப் பார்த்துப் பேசுங்கள். அவர் பேசுவதில் உங்கள் முழு கவனமும் இருக்கட்டும்.

கையில் தொலைபேசி வேண்டாம். ஒருவரையொருவர் பார்த்துப்பேசுங்கள். அவர் சொல்லுவதை நீங்களும், நீங்கள் சொல்லுவதை அவரும் முழு கவனத்துடன் கேட்க வேண்டும்.

 • பாதிப் பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு செய்யாதீர்கள். உங்கள் மேல் தப்பு இல்லையென்றால் கூட இந்த நடவடிக்கை துணைவரை பாதிக்கும்.

நிகழ்ந்த தவறுக்கு முடிவு எட்டும்வரை இருவரும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். பாதியில் எழுந்து போவது இன்னொருவரை அவமதிப்பதாகும்.

 • சண்டை வாய் வார்த்தையில் மட்டுமே இருக்கவேண்டும். கை நீளக்கூடாது.

இருவருமே இதில் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். மனைவியை அடிப்பது ஆண்களுக்கு நியாயம் என்று தோன்றினாலும் உங்கள் குழந்தைகளின் முன் உங்கள் மரியாதை பறந்துவிடும். ஜாக்கிரதை!

 • இன்றைக்கு முடிவு காண்பது கஷ்டம் என்று தோன்றினால் இன்னொரு நாள் பேசிக்கொள்ளலாம் என்று விட்டுவிடுங்கள்.

சிலநாட்கள் அப்படித்தான் ஆகும். நீங்களும் விட்டுக்கொடுக்கத் தயார் இல்லாமலும், உங்கள் துணைவரும் பிடிவாதமாக இருந்தால் அப்படியே நிறுத்திவிடுங்கள். வழக்கம்போல உங்கள் வேலைகளைத் தொடருங்கள். இதை நினைத்து உங்கள் மனதையும் குழந்தைகளின் மனநிலையையும் குழப்பாதீர்கள்.

kilimanjaro by rupak munje

சொல்வது சுலபம். செய்வது சிரமம் தான். ஆனால் நமது சண்டையினால் நமது குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் சற்று நிதானமாகப் பேசலாமே. தவறில்லை.

குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியமான சூழலை வீட்டிற்குள் கொடுப்பது பெற்றோர்களின் முக்கியக் கடமை. தாய்தந்தையர் நடந்து கொள்ளும்விதம் தான் குழந்தைகளின் பிற்கால உறவுமுறைகளை உருவாக்குகிறது. அப்பா ரொம்பவும் சத்தம் போட்டு வீட்டில் இருப்பவர்களை தன் கட்டுபாட்டில் வைக்கவேண்டும் என்று நினைத்தால், பிள்ளையும் பிற்காலத்தில் அதேபோல மற்றவர்கள் மேல் அதிகாரம் செலுத்துபவராக உருவாகிறார். இதைப் பார்க்கும் மகள் தனக்கு இதுபோல ஒரு கணவன் வரக்கூடாது என்று நினைக்கிறாள். விட்டுக் கொடுத்துப் போகும் பெற்றோர்களின் பிள்ளைகளும் உறவுகளை மதிப்பவர்களாக, விட்டுக் கொடுப்பவர்களாக உருவாகிறார்கள். இதை ஒவ்வொரு பெற்றோரும் நினைவில் வைத்துக்கொண்டால் நாளை குழந்தைகளின் வாழ்வு சிறக்கும்.

பெற்றோர்களின் சண்டை குழந்தைகளின் மனதில் ஒரு பாதுகாப்பின்மையை உருவாக்குகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அடுத்தபடியாக பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயம் சிறுவயதில் ஏற்படும் உடற்பருமன். இது இந்தியாவில் மட்டுமல்ல; உலகெங்கிலும் கவனத்தை ஈர்த்திருக்கும் ஒரு விஷயம். இந்தக் காலக் குழந்தைகள் தங்கள் வயதுக்கு மீறிய வளர்ச்சியுடன் இருப்பதுடன் அதிக அளவு எடையையும் சுமக்கிறார்கள். இதையும் நிச்சயம் பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். சிறுவயதிலேயே உடற்பருமனுடன் இருக்கும் குழந்தைகள் வளர்ந்தபின் பலவிதமான நோய்களுக்கு ஆளாகிறார்கள். கூடவே குடும்பத்தில் பரம்பரையாக வரும் நோய்களும் சிறுவயதிலேயே வந்துவிடும் அபாயம் இருக்கிறது.

நம்மூரில் குண்டான குழந்தைகள் அழகு என்று நினைத்துக்கொள்ளுகிறோம். சில குழந்தைகளுக்கு பேபி ஃபாட் (baby fat) என்றிருக்கும். பத்து அல்லது பதினோரு வயது குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு பதின்மூன்று வயதில் கரைந்து விடும். அதாவது பருவம் அடையும் வரை இருக்கும் இந்த பேபி பாட் பிறகு குறைந்துவிடும். அப்படியல்லாமல் பதின்ம வயதிலும் தொடர்ந்து இருந்தால் அது அப்படியே தங்கிவிட வாய்ப்புகள் அதிகம்.

பெற்றோர்களின் தவறு என்ன என்றால் தங்கள் குழந்தை அதிகப்பருமன் என்று அவர்கள் ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லாததுதான். யாராவது சொல்லவிட்டால், ‘கண் வைக்கறாங்க பாரு, குழந்தைக்கு சுத்திப் போடணும் என்பார்கள். குழந்தைகளுக்கு ஏற்படும் பல பிரச்னைகள் பெற்றோர்களின் இந்த குணத்தால் ஏற்படுகிறது. வீட்டில் யாரவது அதிகப்பருமனுடன் இருந்தால் உங்கள் குழந்தைக்கு அது வர வாய்ப்பிருக்கிறது.

சத்தான உணவு கொடுக்க வேண்டும் என்றால் சிலர் அதிக உணவு என்று நினைத்துக்கொள்ளுகிறார்கள். நெய், வெண்ணெய் என்று நிறைய கொடுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். குழந்தைகளுக்கு எல்லா உணவும் கொடுத்துப் பழக்க வேண்டும். ஆனால் தவறான முறையில் கொடுக்க ஆரம்பிக்கும்போது அது அதிகப் பருமனில் கொண்டுபோய் விடுகிறது.

அடுத்தவாரம் இதுபற்றி தொடர்ந்து பேசுவோம்.

“பெற்றோரின் சண்டையில் இருந்தும் குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள்!” இல் 2 கருத்துகள் உள்ளன

 1. மூர்கத்தனம்,கத்திப்பேசுதல்,எதற்கெடுத்தாலும் ஆக்ஷேபணைசெய்தல்,ஒருவர்மேல் ஒருவர் குறை கூறுதல்,திருப்தி இல்லாத தெய்வமாக நீங்களிருந்தால், அவர்களும், அதாவது உங்கள் பிள்ளைகளும் சொக்கத் தங்கமாக உங்கள் மாதிரியே உருவாவார்கள். பலன் உங்களுக்கே திரும்பும். இதையும் சேர்த்துக் கொள்ளலாமா?ஊடல்,கூடல் எல்லாம் மறைமுகமாகஇருக்கட்டும். சாடலும்,பாடலும் மட்டும் வேண்டவே வேண்டாம்.
  முத்தான ரஞ்ஜனியின் கட்டுரை. படித்துப் பயனடையலாம். அன்புடன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.